மதுரை: 'காவலர் பணி தேர்வில் பங்கேற்போர் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்டோருக்கு கண்டிப்பாக எதிர்காலத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவிக்க வேண்டும்,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி ஆலங்கோடு ராஜேஷ்குமார் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை தேர்வு 2013-14 ல் பங்கேற்றேன். மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்றேன். தகுதியானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது. என்னை தேர்வு செய்தனரா அல்லது நிராகரித்தனரா? எனதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. பின் விபரம் கோரியபோது,' உங்கள் கால்கள் வளைந்துள்ளன. இதனால் நிராகரிக்கப்பட்டுள்ளீர்கள்,' என்றனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கோரிய போது, 'மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி காவல்துறை பணியில் சேர உடற்தகுதி உள்ளது,' என தெரிவித்தனர். கால்கள் வளைந்துள்ளது என குறிப்பிடவில்லை. எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர், ''மனுதாரர் தன்னை நிராகரித்ததாகக் கூறப்படும் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கோரிக்கை விடுத்திருந்தால், அவரது பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். தற்போது அவரது கோரிக்கை காலாவதியாகி விட்டது,'' என்றார்.
நீதிபதிகள்: மனுதாரர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கோரிய பின்தான் உண்மை தெரியவந்துள்ளது. இந்நிலையில் 30 நாட்களுக்குள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும். எதிர்காலத்தில் காவலர் பணி தேர்வில் பங்கேற்பவர்களில் யாராவது நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், டி.ஜி.பி., கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மனுதாரருக்கு பணி வழங்குமாறு நேரடியாக உத்தரவிட முடியாது. மனுதாரருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தகுதி இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுதாரர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார்.
No comments:
Post a Comment