Tuesday, May 19, 2015

1837 - பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மற்றும் சான்றிதழ் பெறுதல்

Registering the Birth and Death and obtaining the birth certificate or death certificate
இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இந்தியப்பெற்றோர்களுக்கு நிகழும் ஒவ்வொரு பிறப்பிற்கும், அல்லது நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் பதிவு செய்தல் என்பது சட்டப்படி(Registration of Births and Deaths Act, 1969) கட்டாயமாகிறது. எனவே பிறப்பு மற்றும் இறப்பை முறையாகப் பதிவு செய்தல் அனைவரது கடமையாகும். இது திட்டமிடல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அரசிற்கு உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும்.முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலேயே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால், மருத்துவச் சான்றிதழ்கள் எவையும் இல்லையென்பதால், உள்ளூரிலேயே உள்ள 'மணியகாரர், 'தண்டல்'காரர்கள்' (சிற்றூர் -கிராம- உதவியாளர்கள்) உள்ளிட்டவர்களே பிறப்பைப் பதிவு செய்வதில் அனைத்து வேலைகளையும் செய்துவிடுவார். ஆனால், தற்காலங்களில் வீட்டிலேயே குழந்தை பிறந்தாலும், அப்பிறப்பைப் பதிவு செய்வது பெற்றோரின் முழு முதல் கடமையாகும். மருத்துவமனையில் பிறந்தால், மருத்துவமனை நிருவாகமே பிறப்பைப் பதிவு செய்து கொடுக்கும். சிற்றூர்களில் அல்லது பேரூராட்சிகளில் ஒரு குழந்தை பிறந்தால், அப்பிறப்பு சிற்றூர் (கிராம) நிருவாக அலுவலரிடம் முறையாக ஒரு மனுக் கொடுப்பதன் மூலம், அல்லது தகவல் தெரிவிப்பதன் மூலம் பதிவு செய்யப்படலாம். நகரங்கள் அல்லது மாநகரங்களில் குழந்தை பிறந்தால் அது சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலரிடம், அல்லது மாநகராட்சி 'வார்டு' அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இறப்பையும் இவ்வாறே பதிவு செய்ய வேண்டும். இதில் 'கிராம' நிருவாக அலுவலரிடம் பதிவு செய்யப்படும் தகவல்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதிக்குச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். எனவே பிறப்பு அல்லது இறப்பிற்குப் பின்னர் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பெற முடியும். நகரம் அல்லது மாநகரம் என்றால், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
குழந்தையின் பிறப்புப் பதிவு செய்யப்பட்டாலும் அக்குழந்தையின் பெயரும் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படவேண்டும்.இன்றைய சூழலில் பெரும்பாலான அல்லது அனைத்துக் குழந்தைகளுமே மருத்துவமனைகளில் பிறக்கின்றன. இதில், அரசுப் பொது மருத்துவமனைகளில் அதிக அளவில் ஏழை மக்களே மருத்துவம் பார்க்கின்றனர். அவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், மருத்துவமனை நிருவாகமே அவர்களுக்குப் பிறக்கும் குழைந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்து கொடுத்த பின், அவர்கள், அடுத்த சில நாள்களில் அல்லது மாதங்களில் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்களைப் பிறப்புச் சான்றிதழ்களில் பதிவுசெய்யத் தவறிவிடுகின்றனர். இருப்பினும் பிறப்புச் சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு, 'தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வேலை முடிந்துவிட்டதாக' தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
பிற்காலத்தில் ஒரு நாள் பள்ளியில் சேர்க்கும் பொழுதோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ பிறப்புச் சான்றிதழின் தேவை ஏற்படும்பொழுது அதைப் பார்க்கும் ஒரு அலுவலரால் தான் இந்த உண்மையையே அவர்கள் உணருகின்றனர். அந்த நேரத்தில் உடனடியாக ஓரிரு நாள்களில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. குழந்தை பிறந்து இரண்டு மூன்று ஆண்டுகள் என்றால், பெற்றோர் எழுதிக்கொடுக்கும் பெயரை எளிதாகப் பதிவு செய்து விடலாம். அதுவே, பத்து ஆண்டுகள் என்றால், அக்குழந்தைக்குப் பள்ளியில் என்ன பெயர் வழங்கப்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இடம் ஏற்பட்டு விடும். எனவே, பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களைப் 'பரிசீலித்த' பின்னரே குழந்தையின் பெயர் பதிவு செய்து கொடுக்கப்படும். எனவே, குழந்தைக்குப் பெயர் இட்டவுடன் அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்து கொள்வது மிகவும் எளிது.
குழந்தைக்குப் பெயரிட்டவுடன் பெயரைப் பதிவுசெய்யத் தவறியவர்கள், பின்னாளில் அதாவது ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அக்குழந்தை நகரம் அல்லது மாநகரப் பகுதிகளில் பிறந்திருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். பொதுவாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குழந்தை பிறந்து அதன் பெயர் பதிவு செய்யப்படத் தவறிவிட்டிருந்தாலும், அதற்குப் பின்பு பல ஆண்டுகள் கழித்தும் அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய, அந்தக் குழந்தையின் பெற்றோரின் தற்போதைய முகவரிச் சான்று (உம்.- குடும்ப அட்டை), குழந்தையின் பெயருக்கான பள்ளிச் சான்று அல்லது பெற்றோரின் 'நோட்டரி' வாயிலாகத் தயாரிக்கப்பட்ட உறுதிச் சான்றுடன் விண்ணப்பித்தால் சில நாள்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், சிற்றூர்ப்புறங்களில் குழந்தை பிறந்திருந்தால், குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் பதிவு அலுவலராக அந்தச் சிற்றூர் (கிராம) நிருவாக அலுவலரே பணியாற்றுவதால், அவர்தான் பதிவு செய்திருப்பார். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னால் அது வட்டாட்சியரின் நேரடிப் பணியில் வந்துவிடும். எனவே, குழந்தை ஒரு சிற்றூரில் பிறந்து பெயர் பதிவுசெய்யத் தவறிவிட்டிருந்தால், அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பிறப்புப் பதிவேடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தந்தப் பகுதி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். அப்படியே அனுப்பப்பட்டாலும், அப்பதிவேட்டை நிருவகிக்கும் பொறுப்பு சார்பதிவாளருக்கு இருக்கிறதே தவிர, அப்பதிவேட்டில் பதிவு செய்வதற்கோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே இது போன்ற தருணங்களில், வட்டாட்சியர் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து குறிப்பிட்ட பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அதில் பெயரைப் பதிவு செய்து, அதன் பின்னர் அப்பதிவேட்டைத் திரும்ப அந்தச் சார் பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்புவார். அங்கு மீண்டும் ஒரு விண்ணப்பத்தைப் புதிதாக அளித்துப் பெயர்ப் பதிவுடன் கூடிய ஒரு புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இச் சான்றிதழ் எத்தனை நகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காக உரிய கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு தனி வெள்ளைத் தாளில் ஒரு வேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இரண்டு ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கான சான்றுகளாக மனுதாரரின் குடும்ப அட்டை அல்லது ஏதாவது முகவரிச் சான்று, குழந்தையின் பெயருடன் கூடிய பள்ளிச் சான்று போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால் வட்டாட்சியர் அவ்வின்னப்பத்தின் மீது உரிய விசாரணை செய்து, விண்ணப்பத்தில் கண்டுள்ள வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும் வேலையில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கே வரவழைத்துப் பெயர் பதிவு செய்து மீண்டும் அப்பதிவேட்டை அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்பிவைப்பார்.
ஆனால், சிற்றூரில் பிறந்து, பெயர் பதிவு செய்யப்படாத குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய ஒரு பெற்றோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை வேறு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்திருந்தாலும், பெற்றோர் தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கையில் அந்த வட்டாட்சியர், விண்ணப்பத்தில் கேட்டுள்ள கோரிக்கை உண்மையெனத் தெரிந்தால், அக்குழந்தை பிறந்த சிற்றூர் எந்தப்பகுதியில் வருகிறதோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியருக்குத் தனது செயல்முறையை ஒரு கடிதம் வாயிலாகத் தெரிவிப்பதோடு, அக்கடிதத்தின் நகலை வின்னப்பதாரருக்கும், தேவைப்பட்டால், குறிப்பிட்ட சார்பதிவாலருக்கும் அனுப்பிவைப்பார். விண்ணப்பதாரர், தனக்கு அனுப்பப்பட்டுள்ள நகலுடன் பிறகு மீண்டும் குறிப்பிட்ட அந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து, அவர் வாயிலாக அந்தப் பகுதியில் உள்ள சார் பதிவாளரின் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டில் பெயரைப் பதிவு செய்து அதன் படி பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை தனக்கு வேண்டிய எண்ணிக்கையில் நகல்கலாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில் உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்

No comments:

Post a Comment