Sunday, January 17, 2016

4688 - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனு.., 17-01-2016, நன்றி ஐயா. Selvam palanisamy



சென்னை: நல்லொழுக்கம் காரணமாக முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள நடிகர் சஞ்சய் தத் வழக்குத் தொடர்பாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனு ஒன்றை எரவாடா சிறைக்கு அனுப்பியுள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நல்லொழுக்கம் அடிப்படையில் முன்கூட்டியே அவர், வருகிற பிப்ரவரி 27-ந்தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளார். இந்த முடிவை எரவாடா சிறை கண்காணிப்பாளர் எடுத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் மராட்டிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எந்த சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்? என எரவாடா சிறை கண்காணிப்பாளருக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனு அனுப்பியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆயுத சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, தற்போது எரவாடா மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்படவுள்ளதாக பத்திரிகைகளில் கடந்த 7-ந்தேதி செய்தி வெளியாகியுள்ளது.
எனவே சஞ்சய்தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் எனக்கு வழங்கவேண்டும். நடிகர் சஞ்சய் தத், நல்லொழுக்கம் காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது,
அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எனக்கு வழங்கவேண்டும். அதேபோல, சஞ்சய் தத், அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 161-ன் கீழ் முன் கூட்டியே விடுதலை செய்யப்படுகிறாரா? அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவுகளின் கீழ் அல்லது மராட்டிய மாநில சிறை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுகிறாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.
அது தொடர்பான ஆவணங்களின் நகலையும் எனக்கு வழங்க வேண்டும். நானும் இதே சட்டப்பிரிவுகளின் கீழ் முன்கூட்டியே விடுதலை பெறுவதற்காக இந்த விவரங்களை கேட்கிறேன்.
அதனால், இந்த ஆவணங்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கான செலவு தொகையை வழங்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் -17.01.2016

No comments:

Post a Comment