தாசில்தார் நிராகரித்தது செல்லாது: பெண்ணுக்கு வாரிசு சான்று வழங்குவதில் குழப்பத்தை தீர்த்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவு
நவம்பர் 20,2015, மதுரை,
வாரிசு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குழப்பத்தை நிவர்த்தி செய்து தாசில்தாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ் கோரி வழக்கு
மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கும், ஆனையூரை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவரின் தந்தை 1996–ம் ஆண்டே இறந்துவிட்டார். அவருடைய வாரிசாக எனது மாமியார் முருகம்மாள், கணவர் சவுந்திரபாண்டியன், மைத்துனர் செந்தூர்பாண்டியன் ஆகிய 3 பேரும் வாரிசுதாரர்களாக சான்றிதழ் பெற்றனர். இந்தநிலையில் 2008–ம் ஆண்டு மைத்துனர் செந்தூர்பாண்டியன் இறந்தார். அதனை தொடர்ந்து 2012–ம் ஆண்டு எனது கணவரும், 2013–ம் ஆண்டு மாமியாரும் இறந்துவிட்டார்கள்.
மாமியாரின் சொத்துக்களை எனது பெயருக்கு மாற்ற வேண்டி, அவரது வாரிசாக என்னை ஏற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கும்படி மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவரோ, நீங்கள் முருகம்மாளின் நேரடி வாரிசு கிடையாது. ஆகையால் அவரது வாரிசாக உங்களை நியமிக்க முடியாது என்று கூறி 25.3.2015 அன்று என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்தார்.
உரிய உத்தரவு கோரி
மேலும் இது தொடர்பாக சிவில் கோர்ட்டில் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறினார். ஆகவே எனது மாமியாரின் வாரிசாக என்னை நியமித்து சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
தமிழ்நாடு வருவாய் நிர்வாக கையேட்டு விதிகளின்படி கோர்ட்டு மூலமாக ஒருவர் வாரிசு சான்றிதழ் பெற 4 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை,
1. ஆண் அல்லது பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கை துணை இருக்கும்பட்சத்தில்,
2. ஒரு வாரிசு தனது குடும்பத்தை விட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து இருந்தால்,
3. வாரிசு சான்றிதழ் குறித்து தாலுகா அதிகாரி விசாரணையின்போது ஆஜராகவில்லையென்றால்,
4. இறந்தவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தாலோ தான் கோர்ட்டு மூலமாக வாரிசு சான்றிதழ் பெற முடியும்.
சான்றிதழ் வழங்க உத்தரவு
ஆனால் மனுதாரர் தனது மாமியார் இறந்தபின் முறைப்படி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். மேலும் அவர் தனது மாமியார் வீட்டில் தான் தற்போது வசித்து வருகிறார். ஆகையால் அவருக்கு வருவாய் அதிகாரிகளே வாரிசு சான்றிதழ் வழங்கலாம். எனவே வி.ஏ.ஓ. மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் அறிக்கை அடிப்படையில் 3 வாரத்துக்குள் மனுதாரருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும். அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment