91 வயது மூதாட்டிக்கு பென்ஷன் நிறுத்திய தாசில்தார் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
10-04-2016
சென்னை:மூதாட்டிக்கு, முதியோருக்கான பென்ஷனை தொடர்ந்து வழங்கும்படி,
தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.நாகை மாவட்டம், காட்டுமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர், செண்பகம், 91.இவர் இந்திரா காந்தி தேசிய முதியோர்
பென்ஷன் திட்டத்தின் கீழ், 2007 முதல், பென்ஷன்பெற்று வந்தார். 2014 அக்டோபரில், பென்ஷன் வழங்குவதை, அரசு நிறுத்தி விட்டது.தள்ளுபடிஇதையடுத்து, தொடர்ந்து பென்ஷன் வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செண்பகம் மனு தாக்கல் செய்தார். மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, மேல்முறையீடு செய்தார்.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.முத்து கிருஷ்ணன், ''கணவரை இழந்த மூதாட்டி,
வீட்டில் தனியாக வசிக்கிறார். அவருக்கு, அசையா சொத்துகள் கிடையாது. மூதாட்டிக்கு, 91 வயதாகிறது. இந்த வயதில், அவருக்கு பென்ஷன் மறுப்பது சரியல்ல,'' என்றார்.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் ஸ்ரீஜெயந்தி, ''மனுதாரர், ஆதரவற்றவர் அல்ல; கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் நடத்திய விசாரணையில், செண்பகத்துக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்; மற்றொருவர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர். 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டில், செண்பகம் வசிக்கிறார்.
''எதிர் வீட்டில், மகள் வசிக்கிறார்; மருமகன், முன்னாள் ராணுவ வீரர். பொருளாதாரத்தில் வலுவாக இருப்பவர், முதியோருக்கான பென்ஷன் பெற உரிமையில்லை,'' என்றார்.
'நோட்டீஸ்'மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:முதியோர் பென்ஷன் நிறுத்தி, நாகை தனி தாசில்தார் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது. பென்ஷன் நிறுத்துவதற்கு முன், 'நோட்டீஸ்' கொடுக்கப்படவில்லை; விசாரணை நடத்தப்படவில்லை. பென்ஷன் நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், இயற்கை நீதி பின்பற்றப்படவில்லை.எனவே, தனி நீதிபதி, தாசில்தாரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2014 அக்டோபரில் இருந்து, தொடர்ந்து பென்ஷன் வழங்க வேண்டும். பாக்கி தொகையையும், ஆறு வாரங்களில் வழங்க வேண்டும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMmxtOVFDQnE0dzg/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wMmxtOVFDQnE0dzg/view?usp=sharing
No comments:
Post a Comment