உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற மனுவை தாக்கல் செய்துள்ளார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி. அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கின் விசாரணைக்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சென்றிருந்தேன். அன்றைக்குதான் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தவுடன் திருவண்ணாமலை வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்பட பல வழக்கறிஞர்கள் சேர்ந்து என்னை வழி மறித்து விசாரித்தார்கள். அப்போது என்னுடைய வழக்கறிஞர் அடையாள அட்டையை அவர்களிடம் காட்டினேன். உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு இங்கு என்ன வேலை? வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா? என்று கூறி தாக்கினார்கள். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். உடனே, நான் திருவண்ணாமலை காவல் நிலையத்துக்குப் பதிவுத் தபால் மூலமாக ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், சாந்திலால், வினோத்குமார், ரவி, வின் சார்லஸ் உள்பட பல வழக்கறிஞர்களின் செயலுக்கு அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன். போலீஸார் புகாரை மட்டும் பரிசீலித்துவிட்டு அதற்கு எனக்கு ரசீது அனுப்பிவிட்டு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘மனுதாரர் அளித்த புகாரின்படி திருவண்ணாமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, முறையாக விசாரித்து, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜுன் ஆறாம் தேதியில் இருந்து இரண்டரை மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள், தங்களுக்கு எதிராக தமிழக அரசாணையில் வெளியான உயர்நீதிமன்ற நீதிபதியின் சில சட்டத்திருத்தங்களை எதிர்த்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மனு, வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

No comments:
Post a Comment