31/03/2017

5721 - இ சா ச பிரிவு 90 (முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க இயலாது), அசல் வழக்கு எண்.176 / 2005, 29.01.2015, DMC, பண்ருட்டி, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பண்ருட்டி
முன்னிலை : திருமதி.ஏ.உமாமகேஸ்வரி, பி.எஸ்ஸி.,பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, பண்ருட்டி

2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள் 29 ஆம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.176 / 2005
சி. மூர்த்திராமன் … வாதி
/எதிர்/
டி. பாண்டுரங்க சமுட்டியார் … பிரதிவாதிகள்
வழக்கின் முக்கிய குறிப்புகள்:
இவ்வழக்கானது தாவா சொத்தானது வாதிக்கு உரிமையும், பாத்தியமுமானது என விளம்புகை செய்யக்கோரியும், தாவா சொத்தில் வாதியின் அமைதியான அனுபவத்தை பிரதிவாதியோ, அவரது ஆட்களோ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும், மற்றும் வழக்கின் செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்து ஆதியில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி சமுட்டியார் குமாரர்களான வைத்தியநாதன், இளவரசன் மற்றும் இளவர் சுந்தரம் ஆகியோரது பூர்வீகமாக இருந்தது. தாவா சொத்து உள்ளிட்ட இதர சொத்துகளையும் வாதி, வைத்தியநாதன் மற்றும் அவரது சகோதரர்களிடமிருந்து 06.07.1977 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட கிரயமாக பெற்று, அதுமுதல் தொடர்ந்து தாவா சொத்து வாதியின் அனுபவத்தில் இருந்து வருகிறது. வாதி சட்டகாலவரையறைக்கு மேலாக தாவா சொத்தை அனுபவித்து வருவதால் அவருக்கு அனுபவ பாத்தியம் ஏற்பட்டுவிட்டது.மேற்படி தாவா சொத்து உள்ளிட்ட இதரசொத்துகளுக்கான பட்டா வாதிக்கு கிரயம் கொடுத்தவர்கள் பெயரிலேயே இருந்தது. எனவே வாதி வட்டாட்சியரிடம் மனு கொடுத்ததின்பேரில், விசாரணை செய்யப்பட்டு, தாவா சொத்தானது உட்பிரிவு செய்யப்பட்டு, புதிய ச.எண்.259/2ஏ பட்டா எண்.1020 என ஆர்.டி.ஆர்.585/2000 நாள் 19.2.01 ஆம் தேதியிட்ட உத்தரவின்படி வாதி பெயருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரதிவாதி, தாவா சொத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாத மூன்றாவது நபர். ஆனால் 2003 ஆம் ஆண்டு மத்தியில், பிரதிவாதி, தாவாசொத்தின் பழைய சர்வே எண்ணில் ஒரு ஏக்கரை ஒரு இளஞ்சி அம்மாள் என்பவரிடமிருந்து கிரயம் பெற்றுள்ளதாக கூறி பண்ருட்டி வட்டாட்சியர் வாதி பெயருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து, அவரும் அவரது அதிகார மரபை மீறி 19.02.2001 ஆம் தேதி வாதி பெயருக்கு வழங்கப்பட்ட மேற்படி பட்டாவை ரத்து செய்துவிட்டார். மேற்படி கோட்டாட்சியரின் பட்டா ரத்து உத்தரவை ஆட்சேபித்து வாதி, கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்துள்ளார். மேற்படி மேல்முறையீட்டு மனு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, மேற்படி கோட்டாட்சியரின் பட்டா ரத்து உத்தரவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரதிவாதி, தாவா சொத்தில் வாதியின் அனுபவத்தை தடைசெய்யவும், சட்டவிரோதமாக தாவா சொத்தை அபகரிக்க முயற்சி செய்துவருவதால், வாதி தாவா சொத்தைப் பொறுத்து விளம்புகை மற்றும் உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
3. எதிர்வழக்குரையின் சுருக்கம்
வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. வழக்குரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் தவறாகும். வழக்குசொத்து கண்ணுசாமியின் மகன்களுக்கு பாத்தியமானது என்பதும், அதனை வாதி 6.7.1977 ஆம் தேதி கிரயம் பெற்றதாகவும் கூறுவது தவறாகும். அதனை அனுசரித்து வாதி தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்துவருவதாக கூறுவதும் தவறாகும். வழக்கு சொத்தும் இதர சொத்துகளும் சேர்த்து மொத்தம் 3 ஏக்கரில் சகோதரர்களான வடிவேலுவுக்கு மேல்புறம் ஒரு ஏக்கரும், கீழ்புறம் ஒரு ஏக்கர் வாதியின் தகப்பனார் துரைசாமிக்கும், அவைகளுக்கு இடைப்பட்ட ஒரு ஏக்கர் ராஜமாணிக்கத்திற்கும் பாத்தியமானது. அந்த இடைப்பட்ட பகுதிதான் தாவா சொத்தாகும். அதன் பழைய பட்டா எண்.662 ஆகும். ரீசர்வேயின்போது பட்டா எண்.870 என மாற்றம் செய்யப்பட்டது. வழக்குரையில் கூறப்பட்டுள்ள கண்ணுசாமி, வடிவேல் என்பவரின் மகன். கண்ணுசாமியின் உடன்பிறந்த சகோதரர் கோவிந்தராஜலு திருமணமாகி சில வருடங்களில் இறந்துவிட்டார். அதனால் கண்ணுசாமிதாவா சொத்தையும், வழக்கிலில்லாத மற்ற சொத்தையும் கோவிந்தராஜலுவின் மனைவி இளஞ்சியம் அம்மாளுக்கு அன்றே ஒப்புக்கொடுத்துவிட்டார். அதனை அனுசரித்து இளஞ்சியம் அம்மாள் தாவா சொத்து உள்ளிட்ட இதர சொத்துகளை அனுபவித்து வந்தார். மேற்சொன்ன செட்டில்மெண்ட் பத்திரம் உண்மையானது. மேற்படி செட்டில்மெண்டில் கண்ட சொத்துகளில் ஒன்றை இளஞ்சியம் அம்மாள் ஒரு துக்காராம் என்பவருக்கும், மற்றொரு சொத்தை இந்த பிரதிவாதியின் தகப்பனாருக்கும் விற்றுவிட்டார். அந்த சொத்தை இந்த பிரதிவாதி ஒரு மூன்றாம் நபருக்கு கிரயம் கொடுத்துவிட்டார். பின்னிட்டு தாவா சொத்தை இந்த பிரதிவாதிக்கு 07.02.1979 ஆம் தேதி இளஞ்சியம் அம்மாள் பதிவு செய்யப்பட்ட கிரயம் கொடுத்து, சொத்தையும் ஒப்புக்கொடுத்துவிட்டார். அன்றுமுதல் தாவா சொத்து இந்த பிரதிவாதியின் அனுபவத்திலும், சுவாதீனத்திலும் இருந்துவருகிறது. தாவா சொத்தைப் பொறுத்து இந்த பிரதிவாதிக்கு அனுபவபாத்தியம் ஏற்பட்டுவிட்டது. இந்த பிரதிவாதி பட்டா எண்.870-க்கு தீர்வைகள் செலுத்தி வருகிறார். மேற்படி கண்ணுசாமி தாவா சொத்து உள்ளிட்ட இதர சொத்துகளை இளஞ்சியம் அம்மாளுக்கு தானசெட்டில்மெண்ட் எழுதிக்கொடுத்தபிறகு அந்த சொத்துகளைப் பொறுத்து அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை. மேலும் மேற்படி செட்டில்மெண்டுக்கு பிறகு கண்ணுசாமி தாவாசொத்துகளின் அனுபவத்தில் இருந்ததில்லை. தாவா சர்வே எண்ணில் வாதிக்கு ஒரு ஏக்கர் மட்டுமே பாத்தியமானது. ஆனால் வழக்கு 0.51.00 ஹெக்டேருக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.
18) இந்த வழக்கில் மேற்படி வா.சா.ஆ.1 அடிப்படையில் வாதி, தன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய பண்ருட்டி வட்டாட்சியர் முன்பு நடவடிக்கை எடுத்து வா.சா.ஆ.2 பட்டா மாற்றம் செய்யப்பட்டு புதிய புல எண்.259/2ஏ-க்கு பட்டா எண்.1020 என வழங்கப்பட்டிருப்பதும், அதை எதிர்த்து பிரதிவாதி பி.சா.ஆ.1 மற்றும் பி.சா.ஆ.2-ன் அடிப்படையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு மேல்முறையீடு மனு செய்து அதன்பேரில் பண்ருட்டி வட்டாட்சியர் இந்த வாதிக்கு அளித்த பட்டாவை ரத்து செய்து பி.சா.ஆ.17 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அதன்பேரில் வாதி கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு சீராய்வு மனு செய்து அதன் அடிப்படையில் அவர், பி.சா.ஆ.18 உத்தரவை பிறப்பித்து, மேற்படி பட்டா மாற்றம் /உட்பிரிவு சம்மந்தமாக மீண்டும் உரிய விசாரணை மற்றும் புல தணிக்கை செய்து தீர்வு காண மேற்படி கோப்புகளை கடலூர் கோட்டாட்சியருக்கு மீட்டனுப்புகை செய்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளார் என்பதும், அந்த உத்தரவில் கண்ணுசாமிக்கு சொத்து பூர்வீக பாத்தியமானது என்பதாலும், சுயமாக சம்பாத்தியம் செய்யப்பட்ட சொத்தை தான் செட்டில்மெண்ட் எழுதலாம் என்ற ஐயப்பாட்டை எழுப்பி அது சம்மந்தமாக மீண்டும் விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்நிலையில் இதுபோன்ற சொத்துரிமை குறித்த ஐயப்பாடு மற்றும் தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் எடுக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகார ஆள்வரைவரம்பு கிடையாது என்றபோதிலும் சில நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி அதிகார ஆள்வரை கொண்ட உரிமையியல் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய சங்கதிகள் குறித்து விசாரணை செய்து தீர்மானம் /முடிவுகளை எடுத்தாலும்கூட அது, உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் அந்த பிரச்சனை சம்மந்தமாக விசாரணை/தீர்மானம் /முடிவு எடுப்பதை எந்த வகையிலும் தடைசெய்யாது என பிரிவு-9 சி.பி.சி-யில் குறிப்பிட்டுள்ளதை விளக்கி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் 2003-2-L.W.152 –ல் குறிப்பிட்டுள்ளதை வாதிதரப்பில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"Even if Revenue Authorities decided the question of title, that will not affect jurisdiction of civil court to decide question of title."
இதுகுறித்து பரிசீலனை செய்யும்போது மேற்படி வா.சா.ஆ.1 மற்றும் பி.சா.ஆ.1,2 ஆவணங்களின் அடிப்படையிலான சங்கதிகள் குறித்து இந்நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. இந்த வழக்கில் மேற்படி வருவாய்துறையினரின் பட்டா மாற்றம், அதன் பேரிலான மேல்முறையீடு அதன்பேரிலான சீராய்வு மனு ஆகியவை குறித்தோ, அதன் காரணமாக ஏற்பட்ட உத்தரவுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்தோ ஆராயாமல் சிவில் நீதிமன்றம் பரிசீலிக்க ஆளுகை வரம்புடைய இவ்வழக்கின் தாவா சொத்து சம்மந்தமான சொத்துரிமை குறித்த பிரச்சனை குறித்து மட்டும் பரிசீலித்து அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்வு காண இந்நீதிமன்றம் முயல்கிறது.
19) இந்த வழக்கில் வாதி 6.7.1977 ஆம் தேதியில் கண்ணுசாமியின் மகன்கள் வைத்தியநாதன் வகையறா எழுதிக்கொடுத்த வா.சா.ஆ.1-ன் அடிப்படையில் உரிமைகோரும் நிலையில், அதே கண்ணுசாமி அவரது தம்பி மனைவியான இளஞ்சியத்திற்கு எழுதி வைத்த பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் அடிப்படையில் இளஞ்சியத்திடமிருந்து பி.சா.ஆ.2 மூலம் கிரயம் பெற்ற பிரதிவாதியும் தாவா சொத்து குறித்து உரிமை கோரியுள்ளார். இந்நிலையில் ஆவணங்களின் அடிப்படையில் முந்தைய ஆவணமான பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணம் உண்மையானதா, தகுதி வாய்ந்ததா என்பது குறித்து முதலில் ஆராயவேண்டியுள்ளது. இந்த அம்சம் குறித்து பரிசீலனைசெய்து பார்க்கும்போது, மேற்படி பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னிட்டு சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு.90-ன் அடிப்படையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க இயலாது என்றும், அவை உண்மையிலேயே ஏற்பட்டதாக அனுமானிக்கவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதிவாதி தரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
1. 1993(3) MLJ 577
Document 30 years old on date of suit rendered in evidence – Court can presume that it was duly executed.
2. 2006 (3) MLJ 225
Document thirty years old – Production from proper custody – Presumption of due execution and attestation – Discretion of Court – Suit for declaration and injunction on the basis of such document.

மேற்கண்ட முன்தீர்ப்புகளின் அடிப்படையில் பி.சா.ஆ.1 ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து இந்நீதிமன்றம் சந்தேகிக்க இயலாது என இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.
20) இருப்பினும், மேற்படி பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணம் சட்டப்படி செல்லத்தக்கதா, என்பது குறித்து ஆராயும்போது, அந்த ஆவணத்தின் மூலம் கண்ணுசாமி, இளஞ்சியம்மாளுக்கு தாவா சொத்து உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை இரண்டு அயிட்டமாக கண்டு, அதில் முதல் அயிட்டத்தில் தாவா சொத்து கண்டிருப்பதும், மேற்படி தாவா முதல் அயிட்ட சொத்துகளை இளஞ்சியம் முழுமையாக அடைய உரிமை கொடுத்தும், இரண்டாம் அயிட்ட சொத்துகளைப் பொறுத்து இளஞ்சியம் ஆயுள் பரியந்தம் மட்டுமே அனுபவிக்க உரிமை கொடுத்தும், அதன் பின்னர் கண்ணுசாமியின் வாரிசுகள் அடையவேண்டியது எனவும் கண்டு எழுதப்பட்டிருப்பது தெரியவருகிறது. பொதுவாக செட்டில்மெண்ட் மூலம் எழுதித்தரும் சொத்துகளை அடையும் நபர் அதன் முழு உரிமையையும் அடையும் தகுதியுடையவர் ஆவார். ஆனால் பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் வாசகம் நிபந்தனையுடன் கூடியதாக அதாவது, அதில் கண்ட இரண்டாம் அயிட்ட சொத்தைப் பொறுத்து அதை அடையும் நபர் ஆயுள் பரியந்தம் மட்டுமே அனுபவிக்க உரிமை கொடுப்பதாக அமைந்திருப்பது தெரியவருகிற நிலையில், முழு உரிமையையும் அதை அடையும் நபருக்கு கொடுக்காமல் வாசகம் காணப்படுவதை பரிசீலனை செய்யும்போது, மேற்படி பி.சா.ஆ.1 ஆவணம் ஒரு சட்டப்படியான செட்டில்மெண்டுக்கு உரிய தகுதிகள் எதுவுமின்றி உயில் வாசகம் போன்ற அம்சத்துடன் காணப்படுகிற நிலையில், அந்த செட்டில்மெண்டை எழுதிய நபர் ஏதோ ஒரு நோக்கம் கருதியே அதுபோன்று எழுதியுள்ளார் என்பது புலனாகிறது.
22) பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணமே உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஆவணம் என்பதாலும், பாகம் பிரித்துக்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் செட்டில்மெண்ட் எழுதித்தர கண்ணுசாமிக்கு உரிமையில்லை என்ற நிலையில், அது சட்டநிலையில் செல்லத்தக்கதல்ல என்றபோதிலும், அந்த ஆவணத்தின் அடிப்படையில் இளஞ்சியம் அதில் கண்ட பல சொத்துகளை கிரயம் செய்து கொடுத்துள்ளார் என்பதால், அது சட்டப்படி செல்லத்தக்க மற்றும் அமலுக்கு வந்த ஆவணம் என்று பிரதிவாதி தரப்பில் கட்சி செய்யப்பட்டு, தன் தரப்புக்கு ஆதரவாக மேற்படி பி.சா.ஆ.1 ஆவணம் மூலம் கிடைத்த மற்றொரு சொத்தை இந்த பிரதிவாதியின் தகப்பனார் துரைசாமி 7.6.1960-ல் கிரயம் பெற்றதாகக்கூறி பி.சா.ஆ.19 அசல் கிரயப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வழக்குரையில், இளஞ்சியம் வேறு பல சொத்துகளையும்கூட பி.சா.ஆ.1-ன் அடிப்படையில் பெற்று விற்பனை செய்துள்ளதாக கட்சி செய்யப்பட்டு, மேற்படி பி.சா.ஆ.1 அமலுக்கு வந்ததாக எடுத்துரைக்கப்பட்டது. பிரதிவாதி பி.சா.ஆ.2 அடிப்படையில் உரிமைமூலம் கோரும் தாவா சொத்து சம்மந்தமான முந்தைய உரிமை குறித்தான பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் சட்டநிலையில் செல்லத்தக்க ஆவணம் அல்ல என்ற நிலையில், அதன் அடிப்படையில் இளஞ்சியம் வேறு பல ஆவணங்களை ஏற்படுத்தியுள்ளார் என்பதால் மட்டுமே, அந்த பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் அமலுக்கு வந்துவிட்டதாக கூறும் பிரதிவாதிதரப்பு வாதம் ஏற்கத்தக்கதல்ல. மேற்படி பிரதிவாதி தரப்பு பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணத்தின் சட்டநிலை செல்லுத்தன்மை குறித்த குறைபாடு குறித்து பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் தன் வாதுரையில் வாதிடும்போது, வழக்கினை தாக்கல் செய்த வாதிதான் அவரது வழக்கினை தெளிவுபடுத்தி நிரூபிக்கவேண்டுமே தவிர பிரதிவாதியின் கட்சியில் உள்ள குறைபாட்டை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள இயலாது என வாதுரைத்து கீழ்கண்ட முன்தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.
1999(1) MLJ Page 769 to 773
Evidence Act (I of 1872), Sec.102 - Burden of proof - Plaintiff filing suit for declaration claiming to be in continuous possession of suit properties - Defendants claiming that plaintiff is only lessee - Plaintiff not being able to establish his case on facts - Dismissal of suit by trial court reversed in first appeal - Lower appellate court placing burden of proof on defendants - In second appeal, held, plaintiff has to establish his case and cannot pick loopholds in the defendant's case to prove his claim - Judgment of lower appellate court reserved.

மேற்கண்ட முன்தீர்ப்பில் வாதி தாவா சொத்து தனது அனுபவத்தில் இருந்துவருவதை நிரூபிக்காததால் கீழமை நீதிமன்றத்தில் வாதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, முதல் மேல்முறையீட்டில், நிரூபிக்க வேண்டிய சுமை பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும், இரண்டாவது மேல்முறையீட்டில் வாதி, பிரதிவாதியின் வழக்கில் உள்ள குறைகளைக்கொண்டு தனது கட்சியை நிரூபிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேற்படி முன்தீர்ப்பானது இந்த வழக்கிற்கு பொருந்தக்கூடியதாக இல்லை. ஏனெனில், இந்த வழக்கானது சொத்துரிமை சம்மந்தப்பட்ட வழக்கு என்ற நிலையில், சொத்து சம்மந்தமாக உரிமை கோரும் நபர்களின் உரிமை மற்றும் அவருக்கு உரிமையை கொடுத்த நபர்களின் உரிமை குறித்தும் பரிசீலித்தே முடிவு காணப்படவேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, பி.சா.ஆ.1 செட்டில்மெண்ட் சட்ட நிலையில் செல்லத்தக்கதல்ல என்ற நிலையில், அதன் அடிப்படையில் பிரதிவாதி பி.சா.ஆ.2 ஆவணத்தின் மூலம் உரிமை கோருவதும் ஏற்புடையதல்ல என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது.
33) முடிவாக, இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு, தாவா சொத்தானது வாதிக்கு உரிமையும், பாத்தியமுமானது என விளம்புகை பரிகாரம் வழங்கியும், தாவா சொத்தில் வாதியின் அமைதியான அனுபவத்தை பிரதிவாதியோ, அவரது ஆட்களோ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டு, தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. வழக்கின் தன்மையைக் கருதி அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது

No comments:

Post a comment