Wednesday, July 19, 2017

5845 - சிபிசி எனும் அதிசயம் 21 (ஆவணங்களைப் பார்வையிடுதல்) நன்றி ஐயா. Prabhu Rajadurai

சிபிசி எனும் அதிசயம் 21
(ஆவணங்களைப் பார்வையிடுதல்)
“சரி, சொல்லுங்க அந்த அக்ரிமெண்டில் இருக்கறது யார் கையெழுத்து?”
“அப்படீன்னா?” வந்தவர் மேலும் பேசாமல் என் முகத்தைப் பார்த்தார்.
“இல்லீங்க. அக்ரிமெண்ட் பொய்’னு எதிருரையில் சொல்லியிருக்கீங்க. அப்படீன்னா, அந்த டாக்குமெண்டில் இருக்குற கையெழுத்து உங்களுடையதா, இல்லை நீங்க போடவே இல்லையா?”
“நான் கையெழுத்து ஏதும் போடலை.”
“சரி, அந்தக் கையெழுத்து நீங்க எப்பவும் போடுற கையெழுத்து மாதிரி இருக்கா. இல்லை வேற மாதிரி இருக்கா?”
“அத நாங்க பாக்கல”
“பாக்கலயா. வழக்குல தாக்கல் பண்ணியிருக்குற ஆவணத்தை முக்கியமா அதில் உள்ள கையெழுத்து எப்படியிருக்கிறது என்பதைக் கூட பார்க்காமலேயே எப்படி ரிட்டன் ஸ்டேட்மெண்ட் போட்டீங்க. கையெழுத்து போட்ட விதம், ஆவணம் டைப் செய்யப்பட்டிருக்கும் முறை, சாட்சிகள், ஸ்டாம் பேப்பர் தேதி, வெண்டர், யார் பெயருக்கு வாங்கியிருக்குன்னு எவ்வளவோ இருக்கு அதில் பார்ப்பதற்கு” என்றேன் கடுமையாக.
வந்தவர் தயங்கினார். தொடர்ந்து “டாக்குமெண்ட் காப்பியெல்லாம் தர மாட்டேங்கிறாங்க” என்று முணுமுணுத்தார்.
நான் உடனே ‘பாம்பே’யிலெல்லாம்’ என்று எனது வழக்கமான பல்லவியை ஆரம்பித்தேன். ஆம், மும்பை சிவில் நீதிமன்றங்களில் அசல் ஆவணங்கள் பிராதுடன் தாக்கல் செய்யப்படுவதில்லை. ஆவணங்களின் நகல்கள் மட்டுமே பிராதுடன் சேர்த்து புத்தகம் போல தைத்து தாக்கல் செய்யப்படும். அதன் நகல் பிரதிவாதிக்கும் சார்பு செய்யப்படும்.
வழக்கில் ஆஜரானவுடன் பிரதிவாதி வழக்குரைஞர் சிபிசி கட்டளை 11 விதி 16ல் கூறப்பட்ட பிரகாரம், ஆவணங்களின் அசலை சோதனையிட வேண்டுமென்று வாதி வழக்குரைஞருக்கு அறிவிப்பு கொடுப்பார் (Notice to produce documents for inspection). இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆவணங்களை சோதனையிடலாம் என்று வாதி வழக்குரைஞர் அதே அறிவிப்பில் குறிப்பிட்டு பதிலளிப்பார். பின்னர் பிரதிவாதி அவரது வழக்குரைஞருடன் தங்களிடம் சார்பு செய்யப்பட்ட நகலுடன் அசலை ஒப்பிட்டுப்ப் பார்த்து, அதன் பின்னரே எதிருரை தயார் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் அசல் ஆவணங்கள் நீதிமன்றதிலல்லவா தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் நகல் கூட பிரதிவாதிக்கு அளிக்கப்படுவதில்லை. பின்னர் யாருக்கு அறிவிப்பு கொடுத்து எவ்வாறு சோதனையிடுவது?
ஏன் நீதிமன்ற அலுவலகத்தில் சோதனையிடலாமே. எனக்குத் தெரிந்து பல வழக்குரைஞர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. சிவில் ரூஸ்ல் ஆப் ப்ராக்டிஸ் விதி 62 மற்றும் 63ன் கீழ் ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு ஆவணத்தையும் அல்லது வழக்கு கட்டினையும் (proceedings) அந்த வழக்கின் தரப்பினர் நீதிமன்ற அலுவலரிடம் மனு அளித்து அவர் முன்னிலையில் பார்வையிடலாம். அதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
முடிந்து போன வழக்குகளுக்கு மட்டும் தேடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
சரி, பார்வையிடும் ஆவணத்தின் நகல்?
எல்லா வழக்குரைஞர்களுக்கும் தெரிந்த வழிமுறை ஒன்று உண்டு என்றாலும், சான்றிட்ட நகலுக்கு மனு தாக்கல் செய்வதுதான் ஒரே முறை. ஆனால் ஆவணத்தைப் பார்வையிடுகையில் ஆவணம் பற்றிய குறிப்புகளை நாமே ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்வதற்கு அனுமதி உண்டு.
இவ்வாறு பார்வையிடுவதற்கு எதிர் தரப்பினர் கைவசம் உள்ள ஆவணம் என்றால் வெறும் அறிவிப்பு போதும். நீதிமன்றத்தில் என்றால் நீதிமன்ற அலுவலருக்கு சாதாரண மனு போதும். ஒருவேளை எதிர்தரப்பினர் பார்வையிடுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால் மட்டுமே நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரத்தோடு மனுச் செய்ய வேண்டும்.
வழக்குரைஞர்கள் மற்றபடி ஒருவருக்கொருவர் நட்புடன்தான் பழகுகிறார்கள். ஆனால் வழக்கு என்று வந்துவிட்டால் எவ்வித தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். ‘சார் ரிட்டண் ஸ்டேட்மெண்ட் காப்பியை காணோம், கொஞ்சம் கொடுங்களேன். ஐந்து நிமிடத்தில் ஜெராக்ஸ் எடுத்து விட்டு திருப்பித் தந்து விடுகிறேன்’ என்று கேட்டுப் பாருங்கள். கேட்காத மாதிரியே போய் விடுவார்கள், சிரித்து மழுப்புவார்கள். சில சமயங்களில் ‘அதெல்லாம் முடியாது’ என்று முகத்திலடித்தபடி கூறிவிடுவார்கள்.
இங்கு அதைச் சொல்ல முடியாதபடி வேறு வழியில் நகல் எடுப்பதோ அல்லது சான்றிட்ட நகலைப் பெறுவதோ முடியாத காரியம் அல்ல. தேவையில்லாத பணச்செலவு. அவ்வளவுதான். ஆனாலும் தர மாட்டார்கள்.. சிவில் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் விதி 71ஐ படித்தால் வழக்கில் தாக்கல் செய்யப்படும் ப்ரொஸீடிங்க்ஸ் நகலை எதிர்தரப்பு வேண்டினால், கையெழுத்து பிரதி என்றால் நூறு வார்த்தைகளுக்கு பத்து பைசாவும் டைப் செய்யப்பட்டிருந்தால் 20 பைசாவும் பெற்றுக் கொண்டு அளிக்க வேண்டும் என்று, நம்புங்கள் என்னிடம் உள்ள சிவில் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் புத்தகத்தில் உள்ளது. 2007ம் ஆண்டு பதிப்பு!
அது என்ன கையெழுத்து பிரதி?
விதி 6படி வாதபிரதிவாதங்களை கையெழுத்து பிரதியாகவும் தாக்கல் செய்யலாம். அப்படி கையால் எழுதப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட பிராது ஒன்றினை நான் பார்த்திருக்கிறேன். சொல்ல மறக்கக் கூடாது. அச்சுக் கோர்த்தது போல அழகிய கையெழுத்து. இப்போது கையால் எழுதி ப்ளீடிங்க்ஸ் நகலை அளிக்க முன் வரும் வழக்குரைஞர்களுக்கு பத்து பைசா என்ன பத்தாயிரம் பைசா அளிக்கலாம்.

1 comment:

  1. விதி.64.அதன் நகலையும்.பெறலாம்எனஅறிவுறுத்துகிறது.

    ReplyDelete