19/07/2017

5847 - சிபிசி எனும் அதிசயம் 17 (ஒப்புதலுக்காகவா இன்டரோகேட்டரி?) நன்றி ஐயா. Prabhu Rajadurai

சிபிசி எனும் அதிசயம் 17
(ஒப்புதலுக்காகவா இன்டரோகேட்டரி?)
ஒரு வழக்கினை தீர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. ‘உங்களின் எதிர்வாதம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது’ என்று பிரதிவாதியின் எதிர்வாதத்தை முற்றிலும் நிராகரிப்பது ஒரு வகை (Striking off the Defence)
வாடகைதாரர் – கட்டிட உரிமையாளர் வழக்கு நிலுவையில் இருக்கையில் வாடகைதாரர் வாடகையினை கட்டத் தவறினால், அவரது எதிர்வாதத்தை நிராகரிக்கலாம் என்று வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தில் உள்ளதை நாம் அறிவோம்.
மற்ற பொதுவான சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை; அதாவது சிபிசியில்?
சிபிசி முழுவதும் தேடினாலும் ஒரே ஒரு இடத்தில்தாம் இப்படி ஒரு விதி உள்ளது. இன்டரோகேட்டரி பற்றிக் கூறும் கட்டளை 11ன் விதி 21ல் இன்டரோகேட்டரி மூலம் கேள்விகள் கேட்ட பின்னர் மற்றவர் பதில் அளிக்கவில்லை என்றால், நீதிமன்றம் அவரின் எதிர்வாதத்தை முற்றிலும் நிராகரிக்கலாம். அவர் வாதியாக இருந்தால் அவரது பிராதை தள்ளுபடி செய்யலாம் என்றும் உள்ளது.
இதன்படி எதிர்வாதத்தை நிராகரித்தால்?
ஒரே ஒரு வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. Babbar Sewing Machine Vs Trilok Nath Mahajan AIR 1978 SC 1436 என்ற அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘இன்டரோகேட்டரீஸுக்கு பதில் சொல்லாததற்கு எல்லாம் எதிர்வாதத்தை நிராகரிப்பது மிகவும் கடுமையான உத்தரவு. அப்படிப்பட்ட முடிவினை எடுப்பது என்றால் பிரதிவாதி வேண்டுமென்றே பதிலளிக்காமல் இருந்துள்ளார் என்பது நிரூபிக்கப்படுதல் வேண்டும்’ என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை தள்ளுபடி செய்துள்ளது.
என்றாலும் இனி வரும் காலங்களில் சிவில் நடைமுறையில் மாற்று சிந்தனை வேண்டும் என்று நினைக்கும் நீதிமன்றங்கள் இன்டரோகேட்டரியில் சற்றுத் தாராளமாகவும் அதற்கு பதிலளிக்க வலியுறுத்துவதில் சற்று கண்டிப்புடனும் இருக்கும் காலம் வரலாம்.
தாரளமாக இருக்கும் காலம் வரலாம் என்று ஏன் கூறுகிறேன் என்றால், ‘வெளிப்படைத்தன்மை’ (transparency) என்ற கருத்து சமீப காலமாக, அனைத்து துறைகளிலும் வலுப்பெற்று வருகிறது. தகவலறியும் சட்டம் அதற்கு ஒரு உதாரணம். அரசு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை என்பது சரி, தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையிலுமா என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்ப்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியின் மூலம் முன்பு பிறர் கண்ணில் படும் பொழுது சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாக அதன் தன்மையை இழந்து வருவதைப் பார்க்கிறோம். எங்காவது ஒரு காமிராவில் நமது தினசரி நடவடிக்கைகள் பதிவாகிக் கொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
இதை ஏன் இவ்வளவு தூரம் கூறுகிறேன் என்றால், விசாரணை தவிர்த்து தனிப்பட்ட வகையில் இவ்வாறு கேள்விகள் கேட்பதை மற்றவரின் அந்தரங்கத்தின் மீதான அத்துமீறல் என்று நீதிமன்றங்கள் தங்களது ஆழ்மனதில் இருத்தி, இதுவரை இப்பிரச்னையை அணுகியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
உதாரணமாக ஏற்கனவே குறிப்பிட்ட நாஞ்சில் குமரன் வழக்கையே எடுத்துக் கொள்வோம். அந்த வழக்கில், நாஞ்சில் குமரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தக் கூடியவை என்பதுதான் அவற்றை இன்டரோகேட்டரீஸாக அனுமதிக்காத நீதிபதியின் மனதில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். (G.Nanchil Kumaran Vs Govindasamy Reddiar 1999 (3) MLJ 660)
நாஞ்சில் குமரன் உயர் காவல் அதிகாரி. அவரது மனைவியான திலகவதியும் காவல் அதிகாரி. அவர்கள் இருவரும் பிரிந்த பிறகும், குமரன் வசித்துக் கொண்டிருந்த வீடு திலகவதியின் தந்தைக்குச் சொந்தமானது. எனவே அவர் நாஞ்சில் குமரன் அந்த வீட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்கிறார். நாஞ்சில் குமரனின் பதில், அந்த வீடானது தனது மாமனாரை பினாமியாக வைத்து தனது பணத்தில் வாங்கப்பட்டது என்பதாகும்.
நாஞ்சில் குமரன் ஏற்கனவே நடந்த குழந்தைக்கான வழக்கின் சாட்சி விசாரணையில் அந்த வீடு தனது மாமனாருக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். அவ்வாறு அவர் கூறியது உண்மையா என்றும், அவரது வருமான வரி கணக்கில் வீடு வாங்கியதற்காக பணம் செலுத்தியது பற்றிய விபரம், வீட்டில் அவர் வசிப்பதற்கான வாடகை அலவன்ஸை அலுவலகத்தில் வாங்கியது, அலுவலக சொத்துக் கணக்கில் அந்த வீடு சேர்க்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்கள்தாம் கேட்கப்பட்டன.
அந்த வீடு மாமனார் பெயரில் பினாமியாக தன்னால் வாங்கப்பட்டது என்று நாஞ்சில் குமரன் கூறுகையில், இந்தக் கேள்விகள் அந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டவை. இக்கேள்விகளை குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டால் நீதிமன்றம் அதை தடுக்க முடியாது. குறுக்கு விசாரணையில் இக்கேள்விகளை சாட்சி மறுக்கையில் ஒவ்வொரு ஆவணமாக நீதிமன்றம் மூலம் தருவிக்க நேரிடும். வீண் கால விரயம் ஏற்படுவதோடு, குறுக்கு விசாரணையின் வேகமும் தடைபடும். ஆனால் இன்ட்ரோகேட்டரி மூலம் ஏற்கனவே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பெற்றிருந்தால் குறுக்கு விசாரணை செய்யும் வழக்குரைஞர் அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் ஆவணங்களை முன்னரே தருவித்துக் கொள்ளவும் ஏதுவாக இருந்திருக்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி இக்கேள்விகளை நிராகரித்ததில் நான் மேலே கூறிய விளக்கமே காரணமாக இருந்திருக்க இயலும்.
மாறாக நீதிபதி தனது தீர்ப்பின் சுட்டிக் காட்டியுள்ள மற்ற பல தீர்ப்புகளில் கூறப்படும் ‘சாட்சியிடம் இருந்து ஒப்புதலைப் பெறுவதற்காகவே இண்டரோகேட்டரி’ (The main object of interrogatories is to save expenses by enabling a party to obtain an admission from his opponent) என்பது சரியான ஒன்றாக இருக்க முடியும என்பதில் எனக்கு சந்தேகமுண்டு.
ஏனெனில், கட்சிக்காரர் ஏதாவது உண்மயை ஒத்துக் கொள்கிறாரா என்று எழுத்து பூர்வமாக கேட்பதற்கு என்றே தனியாக சிபிசியில் ஒரு விதி உள்ளது.
கட்டளை 12 விதி 4!
இந்த விதியின் கீழ் விசாரணை ஆரம்பிப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாக ஏதாவது ஒரு விடயத்தை எதிர்கட்சிக்காரர் ஒத்துக் கொள்கிறாரா என்பதை அதற்கான கேள்விகள் அடங்கிய அறிவிப்பு மூலம் கேட்கலாம்.
இவ்வாறு கேட்பதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை. ஆனால் இன்டரோகேட்டரிக்குத் தேவை. அதே போல இன்டரோகேட்டரியில் வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட விடயங்களைத்தான் கேட்க முடியும். ஆனால் ஒத்துக் கொள்ள கேட்கும் அறிவிப்பில் மற்ற விடயங்களையும் கேட்கலாம்.
சிபிசி தொகுக்கப்பட்டுள்ள வரிசையை வைத்துப் பார்க்கையில் இன்டரோகேட்டரியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை வைத்தும் மற்ற புற காரணிகளை வைத்தும் இவ்வாறு மற்ற கட்சிக்காரர் சில விடயங்களை ஏற்றுக் கொள்கிறாரா என்ப்தை கேட்கும் வகையில் கட்டளை 12 விதி 4 இயற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க வலைத்தளம் ஒன்றின் நான் கண்ட கீழ்க்கண்ட கருத்து இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக விளக்குகிறது
In order to understand what exactly the Notice to Admit does, it may help to compare it with the Interrogatory, which is more familiar to most people. With Interrogatories, parties send a list of questions to their opponents. Opponents then provide answers to those questions. The answers help the parties clarify their differences with regard to matters of fact. With the Notice to Admit, rather than sending questions, parties simply send a list of facts that they believe to be true. The Notice to Admit requests that the opponent confirm or deny the truth of each of the listed facts.
எது எப்படியோ, நாஞ்சில் குமரன் வழக்கிலிருந்து நாம் வெகு தொலைவு வந்து விட்டோம். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்ட Margarida Vs Erasmo Jack (2012 (5) SCC 370) வழக்கு சிவில் நடைமுறை எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய திசையை நமக்கு காட்டுகிறது. அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது இளம் வழக்குரைஞர்கள் கையில்தான் உள்ளது.

No comments:

Post a comment