Wednesday, April 04, 2018

5871 - கு. வி. மு. ச பிரிவு 205 ன் கீழ் மனு, CRL. RC. NO - 222/2016, 07.06.2016, High Court, Madras, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

இந்த வழக்கு காசோலை மோசடி சம்பந்தப்பட்ட வழக்காகும். இந்த வழக்கில் கண்ட எதிரிகள் உடல்நிலை சரியில்லாததால் வழக்கு விசாரணையிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி குற்றவியல் நீதிமன்றத்தில் கு. வி. மு. ச பிரிவு 205 ன் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவை பரிசீலித்த குற்றவியல் நடுவர் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கான ஆதாரங்கள் எதையும் எதிரிகள் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
அதனை எதிர்த்து எதிரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதி திரு. தேவதாஸ் விசாரித்தார்.
குற்றவியல் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக குற்றவியல் நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் நீதிமன்றத்தின் வேலை உண்மையிலேயே கெடுகிறது. உண்மையில் ஒரு வழக்கின் எதிரி அந்த வழக்கில் முன்னிலையாவது அவசியம் என்கிற வகையில் அல்லது எதிரி அடையாளம் காட்டப்பட வேண்டும் என்கிற நிலையில், அவர்களுடைய கோரிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது கு. வி. மு. ச பிரிவு 313 ன் கீழ் அவர்களை விசாரிக்க வேண்டும் அல்லது தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற சூழ்நிலைகளில் எதிரிகளை முன்னிலையாகும்படி நீதிமன்றம் வற்புறுத்தலாம். இவையெல்லாம் வழக்கின் செயல் திறனுடைய நிலைகளாகும். இவற்றை தவிர மற்ற நாட்களில் வழக்கு ஒத்தி வைக்கப்படுவது சாதாரண நடைமுறையில் ஒத்தி வைக்கப்பட கூடியவை ஆகும்.
ஒரு வழக்கு சாதாரணமாக ஒத்தி வைக்கப்படும் தேதிகளில், எதிரியை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று கட்டளையிடப்படுகிற நிலையில், ஒரு குற்றவியல் நீதிமன்றம் கூட்டத்தை சேர்க்கும் நபராக மாறிவிடும். அது அனைவருக்கும் தலைவலியை ஏற்படுத்தும். முதலில் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அது தொல்லை தரும். ஒரு வழக்கு சாதாரணமாக ஒத்தி வைக்கப்படும் தேதிகளில், அந்த வழக்கு எதிரியை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி கட்டளை இடுவதால், அந்த தேதியில் அவருக்கு வீட்டில் ஏதாவது வேலை இருக்கலாம். சில நேரங்களில் அவர்களுடைய வாழ்வாதாரங்களுக்காக வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கலாம். இவற்றை எல்லாம் தவிர்த்து, எதிரிகள் இந்நீதிமன்றத்தில் இருப்பது அவர்களுக்கு நேரத்தையும், நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணாக்குவதோடு, மனித சக்தியையும் அது வீணாக்குகிறது. இதனை தவிர்ப்பதற்காக கு. வி. மு. ச பிரிவு 205(1) யை பயன்படுத்தலாம்.
எனவே கு. வி. மு. ச பிரிவு 205 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை குற்றவியல் நடுவர்கள் எளிமையான முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிரதான வழக்கை விசாரிப்பது போல கு. வி. மு. ச பிரிவு 205 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்கக்கூடாது.
எனவே ஒரு வழக்கில் கண்ட எதிரிகள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினால் குற்றவியல் நடுவர் அந்த மனுக்களை எளிமையான முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 222/2016
dt - 7.6.2016
சாந்தி மற்றும் இருவர் Vs கற்பகலட்சுமி பேப்ரிக்குகாக அதன் உரிமையாளர் K. இராஜேந்திரன்
2016-1-TLNJ-CRL-622

No comments:

Post a Comment