Tuesday, June 19, 2018

5924 - சுயார்ஜிதம் / பிதுரார்ஜிதம், நன்றி ஐயா. Dhanesh Balamurugan

சுயார்ஜிதம் சொத்து என்றால் ஓருவரின் தனிப்பட்ட சொத்து ஆகும்.
பிதுரார்ஜிதம் என்றால் மூதாதையர் சொத்து ஆகும்.
இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்.
அசையாச் சொத்துக்களை பொறுத்தவரை, அவற்றின் உரிமையாளர், அதனை விற்கும் உரிமை மற்றும் வாரிசுதாரர்களுக்கு அதில் உள்ள உரிமை போன்றவை அச்சொத்து உரிமையாளரின் சுயார்ஜித சொத்தா? அல்லது பிதுரார்ஜித சொத்தா? என்பதை பொறுத்து மாறுபடும்.
பெயரிலேயே இருப்பது போல் சுயார்ஜிதம் என்றால், தானே சுயமாக சம்பாதித்தது என்பதும், பிதுரார்ஜிதம் என்றால் பிதுர்கள் (முன்னோர்கள்) வழியாக வந்தது என்பதும் ஈசியாக தெரிய வரும்.
ஆனால் இதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக Hindu Joint family எனப்படும் இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் Coparcenary எனப்படும் கூட்டுடமை மரபுரிமையில் இணையுரிமையாளர் என்றால் என்ன? என்பதை பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும்.
சுயார்ஜிதம் சொத்து மற்றும் பிதுரார்ஜிதம் சொத்து ஆகிய இரண்டுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளது.
சுயார்ஜித சொத்து :- (தனிப்பட்ட சொத்து)
இந்துக்களுக்கான சட்டங்களின்படி, ஒருவருடைய சுயார்ஜித சொத்து என்பது, தன்னுடைய சொந்த வருமானத்தை கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்கள், அவர் வேறு யாருடைய (சுயார்ஜித) சொத்தினை வாரிசு என்ற முறையில் அடைவது அல்லது வேறு யாராவது உயில் அல்லது செட்டில்மெண்ட் போன்ற ஆவணங்கள் மூலம் அவருக்கு எழுதி வைக்கும் சொத்துக்களை ஆகியவை அடங்கும். ஒருவர் குடும்ப சொத்தின் (பிதுரார்ஜித சொத்து) வருமானத்தை கொண்டு தனியே வியாபாரம் செய்து இலாபம் ஈட்டி, அந்த லாபத்தில் தன் பெயரில் சொத்து வாங்கினால் அந்த சொத்து சுயார்ஜிதம் ஆகுமா என்று கூறுவதற்கில்லை.
பிதுரார்ஜித சொத்து  மூதாதையர் சொத்து, அல்லது பூர்வீகச் சொத்து)
மேலே கூறியதற்கு மாறாக இந்து "கோபார்சனரி" சொத்து (Ancestral Property) என்பது, ஒரு இந்து தனது கொள்ளுத் தாத்தாவிடமிருந்து பெற்ற சொத்தினை குறிக்கும். அதாவது அவரது கொள்ளுத்தாத்தா அல்லது அதற்கு முந்தைய தாத்தாவுக்கு பாத்தியப்பட்டிருந்து, அது பாகம் பிரிக்கப்படாமலேயே அந்தக் குடும்பத்தினரால் அனுபவிக்கப்பட்டு வந்து, அடுத்தடுத்த தலைமுறைகளால் பாகம் பிரிக்கப்படாமலேயே அனுபவிக்கப்பட்டு வந்து, தற்போதைய தலைமுறையான கொள்ளுப்பேரன் / பேத்திகளுக்கு வந்திருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், முதலாவதாக அந்த சொத்து 4 தலைமுறைக்கு மேற்பட்டதாக இருக்கும். இரண்டாவதாக அதை அனுபவித்த இந்து கூட்டுக் குடும்பத்தினரால் பாகம் பிரிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். (ஏனென்றால் பாகப்பிரிவினை ஆகிவிட்டால் கோபார்சனரியில் உள்ளவர் பாகத்துக்கு வந்த சொத்து அவருடைய தனிப்பட்ட சொத்தாகிவிடும்)
முன்னோர்கள் விட்டுச் சென்ற பூர்வீகச் சொத்துக்கள், குடும்ப பாகப்பிரிவினையில் வந்த சொத்துக்கள் மற்றும் கூட்டு குடும்ப சொத்தின் வருமானத்தின் மூலமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பிதுரார்ஜித சொத்தில் அடங்கும்.
ஒருவர் தனது தாயார், பாட்டி, தாய்மாமன் மற்றும் சகோதரர்களின் வாரிசுகளாக இருந்து அடைந்த சொத்துக்கள் மற்றும் உயில் மூலமாக அடைந்த சொத்துக்கள் போன்றவை பூர்வீகச் சொத்துக்கள் ஆகாது.

1 comment:

  1. எனது தாத்தா இன் இறப்பு சான்றிதழ் இல்லாமல் அவருடைய பெயரில் இருந்த சொத்தை விற்று விட்டனர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாமா

    ReplyDelete