Tuesday, June 19, 2018

5931 - இறுதியறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த குறுந்தகட்டின் (CD) நகலை தருமாறு கோரி எதிரி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய முடியுமா? நன்றி ஐயா. Dhanesh Balamurugan

காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இறுதியறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த குறுந்தகட்டின் (CD) நகலை தருமாறு கோரி எதிரி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய முடியுமா?
அருண் என்பவர் நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில், காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறுந்தகட்டின் நகலை தனக்கு வழங்குமாறு கோரி கு. ந. மு. சட்டம், பிரிவு 207 ன் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிருரை தாக்கல் செய்த காவல்துறை, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறுந்தகடு ஒரு சான்றுப் பொருளாகத்தான் (Meterial Object) குறியீடு செய்யப்படவுள்ளதால் அருணுக்கு நகலை வழங்க முடியாது என்று கூறியது. காவல்துறையின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அருணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.
வழக்கை விசாரித்த நீதிபதி திரு. M. S. இரமேஷ் அவர்கள்,
காவல்துறையினரின் அறிக்கையுடன் (police report) குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்படும் ஆவணங்களின் நகல்களை பெறுவதற்கு கு. ந. மு. சட்டம் பிரிவு 207 ன் கீழ் எதிரிக்கு உரிமை உள்ளது.
இந்திய சாட்சியச் சட்டத்தில் 2000 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, மின்னணு ஆவணங்களை சான்றாவணங்களாக ஏற்றுக் கொள்வதற்காக பிரிவு 65(b) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி கணிப்பொறி மூலம் அல்லது காந்த வழியிலான மின்னணு பதிவுறு அல்லது ஒளி நகலிடப்பட்ட பதிவுறு ஆகியவற்றை ஆவணங்களாக கருத வேண்டும். அந்த வகையில் பிரிவு 65(b) ன் கீழ் குறுந்தகட்டையும் ஓர் ஆவணமாக கருத வேண்டும் என்பதால், வழக்கின் எதிரிக்கு அதன் நகலை பெற முழு உரிமை உண்டு.
உச்சநீதிமன்றம் " திரு. தருண் தியாகி Vs மத்திய குற்றப் புலனாய்வுத் துறை (AIR-2017-SC-1136)" என்ற வழக்கில், எதிரி அவருடைய தரப்பு வழக்கை நிரூபிப்பதற்காக பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகட்டுகளின் நகல்களை எதிரிக்கு வழங்க வேண்டும் என்றும் நகல்களை பெறுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 207 ன் கீழ் எதிரிக்கு உரிமை உள்ளது என்றும் நகல்கள் வழங்கப்பட்டால்தான் எதிரி அவருடைய வழக்கை நியாயமான முறையில் முன்வைக்க முடியும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் " சம்மினல் இஸ்லாம் மற்றும் பலர் Vs ஆய்வாளர், சிறப்பு புலனாய்வு பிரிவு B6 காவல் நிலையம், கோயம்புத்தூர் CRL. A. No - 231/2004)" என்ற வழக்கில் 8.3.2011 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பிலும் இதே கருத்தை வலியுறுத்திள்ளது.
ஆவணம் என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தை இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 3 கூறுகிறது. அதே பிரிவில் சாட்சியம் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 5 ல், ஆவணமென்று கருதப்படுபவற்றை அந்த வழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைக்கு அல்லது பொருண்மைக்கு தொடர்புள்ளவையாக இருந்தால் அந்த ஆவணத்தை சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே குறுந்தகட்டின் நகலை எதிரியான அருண் பெற முழு உரிமை உள்ளது என்று கூறி நாமக்கல் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.
CRL. OP. NO - 19706/2017
DT - 4.10.2017
G. அருண் (எ) அருண்குமார் Vs ஆய்வாளர், CBCID (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை), நாமக்கல்
2017-3-MWN-CRL-477

No comments:

Post a Comment