Monday, February 09, 2015

பட்டா வாங்குவது எப்படி? நன்றி திரு. Selvam Palanisamy (Facebook ID)

நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின் படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
மேற்கண்ட வகையில் கிடைக்கும் சொத்திற்கு அந்த சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்மந்தமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த சான்று தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது. (இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டிய விசயங்கள்:
விண்ணப்பதாரர் பெயர்
தகப்பனார்/கணவர் பெயர்
இருப்பிட முகவரி
பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்)
மனை அங்கீகரிக்கப்பட்ட மனையா/அங்கீகாரம் இல்லாத மனையா என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடம் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
சொத்து மனுதாரருக்கு எவ்வாறு கிடைக்கப்பட்டது என்ற விவரம் (துவக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)
பத்திர ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளதா?
சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளதா?
எவ்விதம் அனுபவத்தில் உள்ளது? (அதற்கான அத்தாட்சி ஆவணங்களின் நகல்கள் இணைக்கபடவேண்டும் அவை, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது/மின் கட்டண அட்டை/குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்று)
பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா?
அல்லது முழுமையானதா?
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.
குறித்த காலத்திற்கும் பட்டா கொடுக்கப்படவில்லை! என்றாலோ, அல்லது லஞ்சம் கேட்டாலோ கோட்டாட்சியர்(RDO) மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். மேலும் தகவல் பெறும் உரிமம் சட்ட மூலமும் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.
மிக முக்கியமாக தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்

2 comments: