Tuesday, May 19, 2015

1820 - வருவாய் பதிவு மாற்றங்கள் – முறைகள்:

வருவாய் பதிவு மாற்றங்கள் – முறைகள்:



  • வருவாய் நிலை ஆணை எண்: 31-இல் கண்ட விதிமுறைகளின்படி பட்டா மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பட்டா மாற்றுதல்

  • உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றிவிடுதல்
  • நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையினரின் விற்பனைகளால் மாறுதல்
  • வாரிசுதாரருக்கு சட்ட முறையினால் மாறுதல் என மூன்று வகைப்படும்.
  • உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றி விடுதல்
  • நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியொருவருக்கு விற்பனை செய்தல் அல்லது தானம் கொடுத்தல்.
  • மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை பரிவர்த்தனை செய்தல்.
  • தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு விட்டு விடுதல்.
  • நிலங்களை பாகப்பிரிவினை செய்தல்.
  • நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப உட்பிரிவு செய்தல்.
  • தனியார் நிலங்களின் நன்செய்/புன்செய் வகைப்பாடுகளை மாற்றுதல்.

    நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த்துறையின் விற்பனைகளால் மாறுதல்:

  • நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் நில உரிமை மாறுபடுதல்.
  • நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல்.
  • அரசு வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை அரசு ஏலம் விட்டு அரசு வாங்கியது / அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது.
  • நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல்.
  • வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற சொத்துக்கள்.

    வாரிசுதாரருக்குச் சட்ட முறையினால் மாறுதல்:

  • வாரிசுதாரர்களுக்கு பதிவு மாற்றம் செய்தல்.
  • பட்டாதாரர் காணாமல் போகும் போது வாரிசுதாரர்களின் பெயரில் மாற்றம் செய்தல்.
  • கைப்பற்று நிலம் 12-ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில் இருப்பின் பட்டா மாறுதல் செய்தல்.

    பட்டா மாறுதல் நடவடிக்கைகள் குறித்து கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்:

  • பட்டா மாறுதல் கோருபவரின் விண்ணப்பத்தில் கண்ட புல எண், பரப்பு வகைபாடு சரியாக உள்ளதா என்பதனை தெளிவு செய்ய வேண்டும்
  • சிட்டாவில் அவர் பெயர் உள்ளதா, அவருக்கும், நிலத்திற்கும் என்ன தொடர்பு என்பதனை தெளிய வேண்டும்.
  • நிலத்தை விற்றவருக்கும், விற்பனை செய்வதற்கான உரிமை / அதிகாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும்.
  • ஒரு புலத்தின் முழு அளவும் விற்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்.
  • நிலத்தின் உரிமை குறித்து நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா என்பதனை ஆராய வேண்டும்.
  • நீதிமன்ற தீர்ப்பின் பேரில் மாறுதல், உட்பிரிவு கோரப்பட்டால், நீதிமன்ற நகல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனையும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.
  • எந்தவொரு காரணத்தையும் முன்னிட்டும் பட்டா மாறுதல் கோருபவருக்கு அதற்கான உரிமை உள்ளதா, அவ்வுரிமை எவ்வாறு கிடைத்தது அதற்கு எதாவது ஆதாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும்.

    பட்டா மாறுதல் நடவடிக்கைகளுக்கு கிராமக் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளுதல்:

  • நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தல், தானம் செய்தல், மற்றொருவர் நிலத்தினை தன் நிலத்திற்கு பதிலாக மாற்றிக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு பெற்று படிவம் 13-வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
  • படிவம் 13-வரப் பெற்றவுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 6-1-இல் பதியப்பட்டு VAOவின் அறிக்கைக்காக அனுப்பப்படும். VAOவின் அறிக்கைப்பெற்று மண்டல துணை வட்டாட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
  • படிவம் 13-வரப் பெற்றவுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 6-1-இல் பதியப்பட்டு VAOவின் அறிக்கைக்காக அனுப்பப்படும். VAOவின் அறிக்கைப்பெற்று மண்டல துணை வட்டாட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
  • இந்த விவரங்கள் கிராமக் கணக்கு எண் 3, பிரிவு 3-இன் கலம் 8, 9, 10-இல் பதியப்படும். கிராமக் கணக்கு எண்2, (10-1) சிட்டா ஆகியவற்றிலும், மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    தனிநபர் தன் நிலத்தினை அரசுக்கு விட்டுவிடும் போது:

  • அரசுக்கு தன் உரிமையை விட்டுவிடுதல் நிலையை ஏற்று வட்டாட்சியர் உத்தரவு பிறப்பிப்பதுடன் கிராமக் கணக்கு எண் 3 பிரிவு 1-இல் பதியப்படும். இது நிரந்தரமான மாறுதல் என்பதால் கிராம ‘அ’ பதிவேட்டின் உள்ளடக்கம், அடங்கல், சிட்டா ஆகியவற்றில் மாறுதல் மேற்கொள்ளப்படும். அவர் அரசுக்கு வழங்கிய நிலங்களில் உட்பிரிவு செய்யப்படின் புலவரைப்பட சுவடியிலும் மாறுதல் மேற்கொள்ளப்படும்.
  • பட்டாதாரர் காணாமல் போகும் இனங்களில் வாரிசுதாரர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.
  • கைப்பற்றிய நிலம் 12-ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில் இருந்தால்

    நில உரிமையை விட்டுக் கொடுத்தல்

  • ஒரு பட்டாதாரர் தனக்குள்ள கைப்பற்று நிலங்கள் மீது உள்ள உரிமையை தானாகவே விட்டுக் கொடுக்கலாம் அல்லது கைவிடலாம். உரிமையை விட்டுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் வட்டாட்சியருக்கு உண்டு.
  • இதற்குண்டான மனு, கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலர் சரிபார்க்க வேண்டும்.
  • விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களை, கிராமக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது சரியாக இருக்க வேண்டும்.
  • நிபந்தனை அடிப்படையில் ஒப்படை செய்யப்பட்ட நிலங்களாக இருக்கக் கூடாது.
  • கைவிடக் கோரும் நிலத்திற்குச் செல்ல வழி இருக்க வேண்டும். பட்டாதாரரின் நிலங்களில் நடுப்பகுதியில் இந்நிலம் அமைந்துவிட்டால், பிற்காலத்தில் நிலத்திற்குச் செல்ல வழியில்லாமல் போகும்.
  • வெள்ளம் பாதிக்கக்கூடிய நிலங்கள் தவிர, மற்றபடி நன்செய்யில் ஒரு ஏக்கராவிற்கு மேற்பட்டதாகவும் புன்செய்யில் 2 ஏக்கராவிற்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
  • கூட்டுப் பட்டாவாக இருந்தால் அனைத்து கைப்பற்றுதாரர்களும் உரிமையை விட்டுக் கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும்.
  • உரிமையைத் துறப்பவர் இந்நில உரிமை துறப்பு மனுவில் எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது.
  • மேற்கண்ட அனைத்தையும் சரிபார்த்து, கிராம நிர்வாக அலுவலர், தனது பரிந்துரையை வட்டாட்சியருக்கு வருவாய் ஆயவாளர் மூலம் அனுப்ப வேண்டும்.
  • இச்சட்டத்தின் கீழ் அவ்வப்போது வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் விளம்பரம் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகளை சார்வு செய்ய வேண்டும்.
  • உபரி நிலங்களை ஒப்படை கோரும் விண்ணப்பத்தாரார்களுடைய தகுதி குறித்தான அனைத்து விவரங்களையும் விசாரணையில் விடுபடாமல் தெரிவிக்க வேண்டும்.
  • நிலமதிப்பு வசூல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் நிலமதிப்பு லெட்ஜர் (ம) வசூல் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும்.
  • உபரி நிலமானது ஏற்கனவே குத்தகைதாரர் கைப்பற்றில் இருந்தால், அத்தகைய நிலத்தை, உபரி நிலமாக அறிவிப்பு செய்த நாள் முதல் ஒப்படை செய்யும் நாள் வரையில் உள்ள குத்தகைப் பணத்தை அவரிடம் வசூல் செய்ய வேண்டும்.
  • No comments:

    Post a Comment