Tuesday, May 19, 2015

1821 - பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்

பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்:



  • கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர் அதற்கான சட்டம் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பிறப்பு:

  • ஒரு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு பதிவுதான்.

    பிறப்பு / இறப்புக்கான சட்டம் :

  • 1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம்(மத்தியச் சட்டம் 18/1969)
  • தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
  • தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.

    2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் நோக்கங்கள்:

  • பதிவேடுகள், அறிக்கை செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்ரு படுத்துதல்.
  • பிறப்பு, இறப்பு பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்.
  • அடிப்படை பதிவாளர்களின் (Primary Registrars)வேலைப்பளுவினைக் குறைத்தல்.
  • மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

    பிறப்பு இறப்பு பதிவு செய்ய அதிகாரம் பெற்ற துறைகள்:

  • 1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் செயல்படுத்தும் துறை, பொதுச் சுகாதாரத்துறையாக இருந்தது.
  • பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு, பதி முதன்மைப் பதிவாளர் ஆவார்.

    தற்போது பிறப்பு, இறப்பு பதியும் துறைகள்:

  • கிராமப் பஞ்சாயத்து – வருவாய்த் துறை (கிராம நிர்வாக அலுவலர்).
  • சிறப்பு ஊராட்சி – சிறப்பு ஊராட்சித் துறை.
  • நகராட்சி / மாநகராட்சி – நகராட்சி நிர்வாகத் துறை / மாநகராட்சி ஆணையர்

    பிறப்பு/இறப்பு பதிவு செய்யும் இதர துறைகள் : (Supporting Role)

  • மருத்துவப் பணிகள்
  • மருத்துவக் கல்வி
  • பதிவுத் துறை
  • காவல்துறை
  • நீதித்துறை

    பிறப்பு / இறப்பு பதிவுத்திட்டத்தின் சிறப்பு இயல்புகள்:

  • பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த இடத்தில் பிறப்பு / இறப்பு நிகழ்வினைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • பிறப்பு / இறப்பு, இயக்க ஊர்திகளில் நடந்தால் ஊர்தி செல்லும் வழியில் தங்குவதற்கு முதன்முதலாக நிற்கும் இடமே – பிறப்பு / இறப்பு நிகழ்ந்த இடமாகக் கருத வேண்டும்.
  • நாட்காட்டி ஆண்டுப்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஊராட்சி, சிறப்பு ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதி / மண்டலம் வாரியாக தனித்தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
  • பிறப்பு – இறப்பு பதிவுகளுக்கான தகவல் தரும் படிவம் இர் பிரிவுகளைக் கொண்டது.
  • i) சட்டப் பகுதி
  • ii) புள்ளி விவரப்பகுதி
  • பிறப்பு – இறப்பு தகவல் தரும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் விடுபடாமல், தகவலாளர் படிவத்தில் நிரப்பி பதிவாளரிடம் கையொப்பமிட்டுத் தரவேண்டும்.
  • பதிவாளர் அதனைப் பெற்று, பதிவின் வரிசை எண், பதிவு செய்த நாள், பதிவாளரின் கையொப்பமிட்டபின் வரிசைக்கிரமமாக பூர்த்தி செய்து தரப்பட்ட படிவத்தை பராமரித்து, ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் 5-தேதிக்குள் வட்டாட்சியருக்கு தவறாது அனுப்ப வேண்டும்.
  • சட்டப்பகுதி – பதிவேடாக பராமரித்தல் வேண்டும்.

    பிறப்பு / இறப்பு என்பதன் விளக்கம் : (சட்டம்-பிரிவு-2)-இன் படி

  • பிறப்பு என்பது உயிருள்ள பிறப்பு அல்லது உயிரற்ற பிறப்பு என்று பொருள்படும்.
  • இறப்பு என்பது உயிருள்ள பிறப்பு நிகழப்பெற்ற பின்பு எப்போதாயினும் உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல் இறப்பு ஆகும்.
  • கர்ப்ப முதிர் கரு இறப்பு : (Foetal death) என்பது கர்ப்பத்தின் அளவை பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் இல்லாதிருத்தல் என்று பொருள்படும்.
  • உயிருள்ள பிறப்பு (Live Birth) என்பது கர்ப்பத்தின் கால அளவைப் பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது என்று பொருள்படும். ஆனால் அது அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மூச்சு விடுதல் அல்லது உயிரியக்கத்தின் பிற அறிகுறி எதனையும் காட்டுதல் வேண்டும். மற்றும் அத்தகைய பிறப்பில் உண்டான ஒவ்வொன்றும் உயிருடன் பிறந்ததாக கருதப்படும்.
  • உயிரற்ற பிறப்பு (Still Birth) என்பது கருவில் உண்டாவது. குறைந்தபட்சமாக வகுத்துரைக்கப்பட்டுள்ள கர்ப்ப கால அளவை நிறைவேற்றியுள்ளவிடத்து கர்ப்ப முதிர்கரு இறப்பு ‘உயிரற்ற இறப்பு’ என்று பொருள்படும்.
  • ‘கர்ப்பகால அளவு’ (விதி-3)(பிரிவு-2)இன் படி 28 வாரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

    பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் : (பிறப்பு-இறப்பு சட்டப்பிரிவு 3, 6, 7-இன் படி) கூறப்பட்டவை.

  • இந்திய அளவில் இந்திய தலைமைப் பதிவாளர் – இவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • மாநில அளவில் மாநில முதன்மைப் பதிவாளர் – மாநில அரசு இவரை நியமனம் செய்கிறது

    தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர் :

  • தமிழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர் அவர்களே முதன்மைப் பதிவாளர் ஆவார். இணை இயக்குநர் (State Bureau of Health Intelligence) பிறப்புகள் மற்றும் இறப்புகள் துணை முதன்மைப் பதிவாளராக உள்ளார்.

    மாவட்ட அளவில்:

  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலரே மாவட்டப் பதிவாளராகவும்,
  • சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூடுதல் மாவட்டப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவில்:

  • i) பிறப்பு – இறப்பு பதிவாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் ஆவர்.

    ஊராட்சி அளவில் :

  • i) கிராம ஊராட்சி அளவில் பிறப்பு-இறப்பினை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்கின்றார்.

    பிறப்பு – இறப்பு பற்றி அறிக்கைகளை மேற்கொள்ளும் படிவங்கள்

  • படிவம் – 1: பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Forms)
  • படிவம் – 2: இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
  • படிவம் – 3: உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
  • படிவம் – 4: மருத்துவமனையில் நேரிட்ட இறப்புக்கான காரணத்திற்குரிய மருத்துவச்சான்று. (Medical Certification of cause of death for institutions)
  • படிவம் – 4 A: வீட்டில் நேரிட்ட இறப்புக்கான காரத்திற்குரிய மருத்துவச் சான்று. (Medical Certification of cause of death for domiciliary events)
  • படிவம் – 5: பிறப்புச் சான்று (Birth Certificate)
  • படிவம் – 6: இறப்புச் சான்று (Death Certificate)
  • படிவம் – 7: பிறப்புப் பதிவேடு (Birth Register)
  • படிவம் – 8: இறப்புப் பதிவேடு (Death Register)
  • படிவம் – 9: உயிரற்ற இறப்புப் பதிவேடு (Still Birth Register)
  • படிவம் – 10: கிடைக்கப்பெறாமை சான்று (Non availability Certificate)
  • படிவம் – 11: பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
  • படிவம் – 12: இறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
  • படிவம் – 13: உயிரற்றப் பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on still birth)
  • படிவம் – 14A: அறிக்கைகள் பெறும் கட்டுப்பாடுப் பதிவெடு (Control Register for receipts)
  • படிவம் – 14B: ஆண்டு புள்ளி விவர அறிக்கை (Statistical Report for the year)

    பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் அலகு: (Units)

  • கிராம் நிர்வாக அலுவலர் கிராம பஞ்சாயத்திற்கான பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் முன்பாக “பிறப்புகள் மற்றும் இறப்புகள்-பதிவாளர்” என்ற வாசகங்களடங்கிய வழிகாட்டிப் பலகையை வைக்க வேண்டும்.
  • இந்தப் பலகையில் கிராம நிர்வாக அலுவலரின் பெயர் மற்றும் அலுவலக நேரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    பிறப்பு/இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தரவேண்டிய விபரங்கள் அடங்கிய படிவங்கள் (விதி-5)

  • படிவம்-1 பிறப்புப் பதிவிற்கான படிவம்.
  • படிவம்-2 இறப்புப் பதிவிற்கான படிவம்.
  • படிவம்-3 உயிரற்றப் பிறப்பிற்கான படிவம்.

    தகவலாளர்கள் (பிரிவு-8)

  • பிறப்பு அல்லது இறப்பு பதிவுக்காக பதிவாளரிடம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தகவல் தருவதற்குரிய தகவலாளர்கள் பற்றிய முறைகள் பிரிவு 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பிறப்பின் நிகழ்வுகளை அறிவிப்பவர் யார்?

  • வீடு ஒன்றில் நிகழும் பிறப்பு அல்லது இறப்பைப் பொறுத்தவரை, வீட்டின் தலைவர், கூட்டுக் குடும்பமாக இருந்தால் கூட்டுக்குடும்பத்தின் தலைவர், நிகழ்வு நடைபெற்ற போது அவர் வீட்டில் இல்லாமலிருந்தால், வீட்டுத் தலைவரின் நெருங்கிய உறவினர் அத்தகைய ஆள் எவரும் இல்லாதிருந்தால் வீட்டில் இருக்கும் மூத்த வயது வந்த ஆள்.
  • மருத்துவமனை, நலவாழ்வு மையம், மகப்பேறு அல்லது மருத்துவ இல்லத்தைப் பொருத்தவரை மருத்துவ அலுவலர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்.
  • சிறைச்சாலைகளில் ஏற்படும் நிகழ்வுகளை பொருத்தவரை பொறுப்புடைய சிறை அலுவலர்.
  • வழித்தங்கல் மனை, சத்திரம், விடுதி, அறச்சாலை உணவு விடுதி, தங்கும் விடுதி, மருந்தகம், பொதுமக்கள் புழங்கும் இடம் இவற்றில் ஏற்படும் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வைப் பொருத்தவரை அதன் தலைமை நிர்வாகியே பொறுப்புடையவர் ஆவார்.
  • பொதுவிடம் ஒன்றில் கைவிடப்பட்டு காணப்படும் பிறந்த குழந்தை அல்லது இறந்த குழந்தை உடலை பொருத்தவரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது அவரையொத்த பிற அலுவலர் அல்லது காவல்நிலைய அதிகாரி பொறுப்புடையவர் ஆவார்.
  • பிறந்த குழந்தை அல்லது இறந்த உடலை எவர் காண்கின்றனரோ அல்லது உடல் எவருடைய பொறுப்பில் வைக்கப்படலாகுமோ. அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • தோட்டம் (Plantation) ஒன்றில் பிறப்பு / இறப்பு ஏற்படின், தோட்டத்தின் கண்காணிப்பாளர் (மேலாளர், கண்காணிப்பாளர் அல்லது பிற பெயர்களில் அழைக்கப்பட்டாலும்) அவரே பதிவுக்கான தகவலை அளிக்க வேண்டும்.

    பிறப்பு – இறப்பு பதிவுகள் (விதி-5 பிரிவு-8);

  • பிறப்பு-இறப்பு தகவல் படிவங்கள் இரு கூறுகளாக பிரிக்கப்படுகின்றன.
  • 1. சட்டப்பகுதி (Legal part)
  • 2. புள்ளி விவரப் பகுதி (Statistical part)
  • பதிவாளர் என்ற பொறுப்பிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவுக்காக பிறப்பு/இறப்பு படிவங்களில் அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பெறவேண்டும். தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது கல்வி பயிலாதவராக இருப்பின் “இடது கை பெருவிரல்” பதிவு படிவத்தில் பதியப்பட வேண்டும்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், சென்று கொண்டிருக்கின்ற வாகனங்களில் பிறப்பு ஏற்பட்டால், (எவ்வகை வாகனமாக இருந்தாலும், நிலத்திலோ, காற்றிலோ, தண்ணீரிலோ சென்றால்) அவ்வாகனம் நிற்கும் முதல் இடமே பிறப்பு (அ) இறப்பு நிகழ்ந்த இடமெனக் கருத வேண்டும்(விதி-6).
  • பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-நாள்களுக்குள் தர வேண்டும் (பிரிவு-8, விதி-5(3)).

    பிறப்பு-இறப்பு காலதாமத பதிவுகள் : (விதி-9, பிரிவு-13)

  • பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த 21-நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • இவை தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதி 5-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்தால் பதிவாளர் விதி 9-இல் கண்டுள்ளவாறு காலதாமதக் கட்டணம் ரூ.2-னைச் செலுத்திய பின் பதிவு செய்யலாம்.
  • பிறப்பு அல்லது இறப்பு நடந்து 30 நாள்களுக்கு மேல் ஆனால் ஓராண்டு முடிவதற்கு முன்பாக தகவல் தரும் பட்சத்தில் ஊராட்சித் தலைவரின் எழுத்து மூலமான அனுமதி பெற்றும் காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தப்பட்ட பின்பு பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என விதி(9(2)) கூறுகிறது.
  • ஓராண்டுக்குள் பதிய அனுமதி மறுக்கப்பட்டால் ஊராட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து, வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என விதி (9(4)) கூறுகிறது.
  • கோட்டாட்சியர் பதியாத பட்சத்தில் கோட்டாட்சியரின் ஆணைக்கு எதிராக மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம்.

    நீதிமன்ற ஆணையின் பேரில் பதிவு செய்தல்: விதி 9(3), பிரிவு-13-இன் படி:

  • பிறப்பு அல்லது இறப்பு ஏற்பட்ட ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணை பெற்ற பின்பே பதிவை மேற்கொள்ள முடியும்.
  • சென்னையைப் பொறுத்தவரை மாநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு (COP) அல்லது குற்றவியல் பல்வகை மனு (CMP) ஒன்றினை பிறப்பு அல்லது இறப்பு குறித்த ஆதாரச் சான்றுடன் தாக்கல் செய்து நீதிமன்ற ஆணை பெற்ற பிறகே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நீதிபதி பிறப்பு அல்லது இறப்பு குறித்த விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டபின், அவ்வாணையின்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவ்வாணையுடன் ரூ. 10-ஐ செலுத்தி பிறப்பு இறப்பு அலுவலரிடம் பதிவு செய்தல் வேண்டும்.

    தகவல் தருபவர் – பதிவேட்டில் – கையொப்பம் இடுதல்: (பிரிவு 11 மற்றும் 12-இன் படி):

  • பிறப்பு / இறப்பு பதிவாளருக்கு தகவல் அளிப்பவரின் பெயர், குடியிருக்கும் இடம் மற்றும் முகவரி ஆகியவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்து தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது படிக்காதவராயின் இடது கை பெருவிரல் பதிவினையும் பதிவேட்டில் பெற வேண்டும்.
  • தகவல் தருவோருக்கு கட்டணமின்றி பிறப்பு அல்லது இறப்பு பதிவேட்டிலிருந்து பதியப்பட்ட விவரங்களடங்கிய பதிவேட்டின் நகல் ஒன்றை பதிவாளர் கையொப்பம் இட்டுக் கொடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பிறப்பு / இறப்பு குறித்த பதிவுகள் விதி 8 மற்றும் 9-இன் படி பதிவேட்டு குறிப்பு படிவம் 5-இல் தர வேண்டும்.
  • இறப்பு குறித்த பதிவுகளை நகல் படிவம் – 6லும் வழங்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்புச் சான்று தகவல் அளித்த 30 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் காலக்கெடு முடிந்த 15-நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

    பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்தல் (விதி-10) (பிரிவு-14):

  • குழந்தை பிறந்த விவரங்களைப் பதிவு செய்யும் போது குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், 12-மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • 12-மாதங்கள் கழித்து ஆனால் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பற்றிய விவரம் தெரிவிக்கும்பட்சத்தில் ரூபாய் 5 காலதாமதக் கட்டணம் செலுத்தப்பட்ட பின் பெயர் பதிவாளர் பதிவு செய்யலாம்.
  • இவ்வாறு பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் விதி 10-இன் கீழ் உள்ள வரம்புக்கு உட்பட்டு செயல்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பிறப்பு-இறப்பு கையேடு பதிவாளர் (VAO)கையில் இருந்தால் காலதாமதக் கட்டணம் ரூபாய் 5 செலுத்தி உடனடியாக உரிய காலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவேடு பதிவாளர் (VAO) கையில் இல்லாத போது வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கு அனுப்பி பெறப்பட்ட தகவல்களை காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    பெயர் பதிவின் வரம்பு காலம் :

  • 01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிருந்து 15 ஆண்டுகள்.
  • 01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.
  • நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.
  • ஓராண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம் ரூ.5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
  • ஒரு முறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய (Spelling Corrections) அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.
  • சாதிப்பெயர், குடும்ப பெயர் அல்லது வேறு அடையாளங்களைப் (Any other identification) பெயருடன் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதிமொழி அடிப்படையில் செய்யலாம்.
  • பெயர் பதிவு மேற்கொள்ளக் கோருபவரின் உண்மைத்தன்மையை தொடக்கத்திலும் அல்லது பதிவு செய்யும்போதும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பதிவாளர் மேற்கண்டபடி நிகழ்வின் உண்மைத் தன்மையை தன் மனநிறைவுப்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
  • தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள்(பிரிவு-15, விதி-11)-இன் படி வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பதிவாளர் பின்பற்றி, அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று சரிசெய்தல் மற்றும் நீக்கம் செய்யலாம்.
  • அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று, மூலப்பதிவில் மாற்றம் ஏதும் செய்யாமல், பக்க ஓரத்தில் தகுந்த பதிவைச் சரிசெய்யலாம் அல்லது நீக்கம் செய்யலாம். பக்க ஓரப்பகுதியில் கையொப்பமிட்டு சரிசெய்த (அ) நீக்கம் செய்த தேதியை அதில் சேர்க்க வேண்டும்.

    பிறப்பு-இறப்பு-பதிவேட்டில் திருத்தம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை (Before Correction):

  • நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகளைக் கண்டிப்பாக பெற வேண்டும்.
  • பிரிவு – 21-இன் படி திருத்தங்களை உறுதி செய்வதற்குத் தேவையான வேறு ஏதாவது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.
  • திருத்தங்கள் செய்வதற்காக வரும் நபர் உண்மையில் நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவரா என்பதனையும், தரப்படும் விவரங்களை முற்றிலுமாக விசாரிக்க வேண்டும்.
  • திருத்த நேர்வின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி பெற வேண்டும்.

    பிறப்பு-இறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவைகள் (Effecting Corrections) :

  • பதியப்பட்ட பதிவினை அழித்துவிடுவதோ அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள் மேற்கொள்வதோ கூடாது, ஆனால் முதலாம் பதிவுகளை மையினால் சுழித்துவிட்டு(Rounded by ink) சரியான விவரங்களை பதிவின் ஓரமாக எழுத வேண்டும்.
  • செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் கையொப்பம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட தேதியிட்ட மேற்குறிப்பு செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவரங்கள் மற்றும் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை வரிசைப்படி காண்பிக்கப்பட வேண்டும் அவ்வப்போது செயலாட்சி அதிகாரம் (Executive authority) கொண்ட அலுவலரின் கையொப்பத்தை பெற வேண்டும்.
  • சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொண்டால் அதனின் விவரம் பதிவேட்டிலும் அதே போன்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின் பதியப்பட வேண்டும்.
  • திருத்தங்கல் தேவையான ஆவணச் சான்றுகள் முழுமையான விசாரணையின் அடிப்படையில் செயல்படுத்தல் வேண்டும். மேற்கொண்டு அதே இனத்தில் திருத்தங்களை அனுமதித்தல் ஆகாது. ஏனெனில் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவணங்களின் செல்லத்தக்க (Validity) நிலைக்கு எதிராகக் கொண்டுசெல்ல இயலும்.

    அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு(பிரிவு 20):

  • இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • குடிமைச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.
  • வெளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும் போது பிரிவு-13-இன் ஷரத்தின் படி பின்பற்ற வேண்டும்.

    விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள் :

  • இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1. தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.
  • 2. பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள். தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.
  • விசாரணை, அல்லது பிரேத விசாரணை மேற்கொள்ளும் நிலையில் விசாரணை அதிகாரி அல்லது காவல்துறை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
  • பொது இடங்களில், சிறைச்சாலையில் இருக்கும் போது ஏற்படும் இறப்புகள் பற்றி விசாரணை செய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு/இறப்பு காலமுறை அறிக்கை அனுப்புதல் : (விதி-14-இன் படி).

  • கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாதமும் பதிவுகளை முடித்த பின் புள்ளி விவரங்களடங்கிய புள்ளி விவரத் தகவல்களை(Statistical parts of the reporting terms) மாதாந்திர சுருக்க அறிக்கைகள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.
  • வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்கை சுருக்கத்தை பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள சுகாதாரப் பணி இணை இயக்குநருக்கு காலமுறை அறிக்கைகளை (Report) அனுப்ப வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு – இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல் (விதி-17):

  • கிராம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவேடுகளை (மூன்று) பிரிவாக பாதுகாப்பர்.
  • i) பிறப்புப் பதிவேடுகள்
  • ii) இறப்புப் பதிவேடுகள்
  • iii) உயிரற்ற பிறப்புப் பதிவேடுகள்
  • இம்மூன்றும் நிரந்தரப் பதிவேடுகள் ஆகும்.
  • இவைகளை அழித்துவிடக் கூடாது. ஏனெனில் விதி 13-இன் படி நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட இதர அலுவலரின் அறிவுறுத்தல் மூலம் காலதாமதம் பிறப்பு / இறப்பு பதிவுகளை மேற்கொள்வதற்காக பதிவேடுகளை பாதுகாக்க வேண்டும்.
  • வட்டாட்சியர் அளவில் 2-ஆண்டுகள் பாதுகாத்து காப்புறு சார் பதிவாளரிடம் (Sub Registrar) ஒப்படைக்க வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமைகள்:

  • தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பரப் பலகை” வைத்து நேரம் மற்றும் VAOவின் பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு பதிவுகள் மேற்கொள்ள போதிய படிவம் வைத்திருக்க வேண்டும்.
  • பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிவை செய்ய வலியுறுத்த வேண்டும்.
  • பிறப்பு / இறப்பை நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள் வரிசைப்படி பதிவை மேற்கொள்ள வேண்டும்.
  • பிறப்பு / இறப்பை பதிய தவறியவர்களுக்கு குறிப்பாணை வழங்கி இப்பதிவை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
  • மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் படிவம் 4 (இறப்புக்கான காரணம்) சான்று பெற்றுப் பதிய வேண்டும்.
  • பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு/இறப்பு பதிவினை அனுப்ப வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு மேற்கொண்டவுடன் பிரிவு – 12-இன் படி பதிவு நகல் தகவல் அளிக்கும் நபருக்கு வழங்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவை, கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.
  • பிறப்பு பதிவு – குழதையின் முதல் உரிமையாகும்.
  • வீட்டில் நிகழும் பிறப்பு/இறப்பை 21 நாள்களுக்குள் VAOவிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • பிறப்பினை பதிந்தவுடன் குழந்தையின் பெயரையும் பதிய வேண்டும்.
  • குழந்தையின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும்.
  • ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.
  • பிறப்பு/இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பெற வேண்டும்.

    பிறப்பு/இறப்பு பதிவு செய்வதின் நன்மைகள்:

  • பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவே ஆகும்.
  • குடியுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
  • வாரிசுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
  • கடவுச்சீட்டு விண்ணப்பிக்க ஆதாரம் இதுவேயாகும்.
  • வயதை நிரூபிக்க இறுதிச்சான்று இதுவே ஆகும்.
  • ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர நன்மைகளுக்காகவும் இச்சான்று முக்கியத் தேவையாகும்.

    கொள்ளை நோய்கள் மற்றும் இதர தொற்றுநோய்கள்

  • 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட நோய்கள் கொள்ளை நோய்களாகவும் தொற்றுநோய்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. மூளைப்போர்வை (ஜன்னி)
    2. சின்ன அம்மை
    3. பெரிய அம்மை
    4. காலரா
    5. தொண்டைக்கட்டு நோய்
    6. தொழுநோய்
    7. தட்டம்மை
    8. வெறிநாய்க்கடி
    9. பிளேக்கு நோய்
    10. செந்நச்சுக் காய்ச்சல் (இந்தியாவில் இல்லை)
    11. குடற்புண் காய்ச்சல் (டைபாய்டு)
    12. மஞ்சள் காமாலை
    13. கக்குவான் இருமல்
    14. மூளைக் காய்ச்சல்
    15. காச நோய்
    16. குருதிக் காய்ச்சல்
    17. குளிர்க் காய்ச்சல் (மலேரியா)
    18. இசிவு நோய்
    19. இளம்பிள்ளை வாதம்

    கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்

  • மேலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த நோய்கள் ஏதாவது யாருக்காவது கண்டிருந்தால், அது குறித்து கிராமத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர் அல்லது அப்பகுதி சுகாதார ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
  • இதனுடைய நகல் ஒன்றினை வருவாய் ஆய்வாளருக்கும் வட்டாட்சியருக்கும் அனுப்ப வேண்டும்.
  • மேலும் இவை தவிர, வேறுவிதமான அசாதாரண நோய் பரவினாலும் கிராம நிர்வாக அலுவலர் அது குறித்து ஓர் அறிக்கையை சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
  • கிராமத்தில் பொது சுகாதாரத்தைப் பேணுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • எனவே விழிப்புடன் செயல்பட்டு தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், நோய் தாக்கிய பின் உடனடியாக நோயைக் குணப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொள்வது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.

    கால்நடை நோய்கள்

  • வெக்கை, அடைப்பான், சப்பைநோய், தொண்டை அடைப்பான் நோய், ஆட்டம்மை, ராபீஸ் போன்றவை கால்நடைகளைத் தாக்கும் கொடிய நோய்களாகும்.

    கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகள்:

  • கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் சாதாரணமாக கால்நடைகளைத் தாக்கக்கூடிய நோய்களும் கொள்ளை நோய்களும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.
  • அதுபோன்ற நேர்வுகளில் தடுப்பூசி முறை (அ) நோய்த் தடுப்பு சிகிச்சை முறை பற்றி கால்நடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு நோய் கண்டவுடன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கும் கால்நடை பராமரிப்பு அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்ப வேண்டும்.
  • கால்நடை அலுவலர்கள் கிராமத்துக்கு வந்து உரிய நோய் தணிய நடவடிக்கை எடுப்பது குறித்து வாரம் இருமுறை வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
  • நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை இதர கால்நடைகளிருந்து விலக்கி வைக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கால்நடை உரிமையாளருக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்
  • No comments:

    Post a Comment