Tuesday, May 19, 2015

1822 - சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்:

சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்:

  • கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சான்றுகள்:

    1) சாதிச்சான்று
    2) பிறப்பிட, இருப்பிடச் சான்று
    3) வருமானச் சான்று
    4) வாரிசுச் சான்று
    5) நாட்டினச் சான்று
    6) சொத்து மதிப்புச் சான்று
    7) பிறப்பு / இறப்புச் சான்று
    8) ஆதரவற்ற குழந்தைச் சான்று
    9) ஆதரவற்ற விதவைச் சான்று
    10) கலப்புத் திருமணச் சான்று
    11) பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று
    12) கனவனால் கைவிடப்பட்டவர் சான்று


    1. சாதிச்சான்று (Community Certificate)

  • மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது.

    சாதிச்சான்றின் பயன்:

  • மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும்.
  • அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும்.
  • பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காகவும்
  • மத்திய / மாநில பொதுத்துறையில் பணியில் சேர்வதற்கும்.
  • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இந்த சாதிச்சான்றுகள் பெரிதும் உதவியாக உள்ளன.

    OBC சான்றிதழ்

  • மத்திய அரசு அலுவலகங்களில் அல்லது துறைகளில் , பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு, இதர பிற்பட்ட வகுப்பு (OBC) சாதி சான்றிதழ் வரையறுக்கப்பட்டு அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. (அரசாணை எண். 12 பிற்பட்ட வகுப்பு, மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை நாள் 28-03-1994)-இல் உள்ளது.

    சாதிச்சான்று வழங்குவதற்காக அனுப்பப்படும் மனுக்கல் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :-

  • சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு சாதிப்பிரிவைப் பொறுத்து VAO தனித்தனி அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வார்.
    வகுப்புஅதிகாரம் பெற்ற அலுவலர்
    பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினார்தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர்கள்
    ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்புவட்டாட்சியர்
    பழங்குடியினர்வருவாய்க் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிட அலுவலர்


    சாதிச்சான்று கோரும் மனு மற்றும் விசாரணை

  • சாதிச்சான்று வழங்கக் கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டியதில்லை (அரசாணை (நிலை) எண் 97, வருவாய் – நாள் 15-2-1994).
  • அரசாணை (நிலை) எண் 2240, வருவாய்த் துறை, நாள் 30-11-1988-இல் கூறியபடி :-
  • அரசால் வரையறுக்கப்பட்டுள்ள 14 கலங்கள் கொண்ட ஒரு பதிவேட்டினை, கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து அப்பதிவேட்டில் விசாரணை மேற்கொண்ட விவரங்களைப் பதிந்த பின் தனது அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) மூலம் அனுப்புதல் வேண்டும்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு சான்று வழங்குமாறு கோரப்படும் மனுக்களை தொகுத்து, அதன் பட்டியல் நகல்களை ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் கிராமச் சாவடிகளில் விளம்பரப்படுத்தி மேற்காணும் சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் விசாரணைக்கு முன் கண்டறியலாம்.

    சாதிச்சான்று வழங்கும் முன் விசாரணையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

  • மனுதாரரின் சாதியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட சான்றாவணங்களைச் சரிபார்த்தல்.
  • i) நிரந்தர முகவரி மற்றும் இடம்
  • ii) பெற்றோரின் சாதிச்சான்றை சரிபார்த்தல்
  • பெற்றோர்கள் இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதர / சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றின் மெய்த்தன்மையை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.
  • அரசுப் பணியில் பணிபுரியும், பெற்றோர்களின் பணிப்பதிவேட்டின் சாதிக்குறிப்பு கொண்ட முதல் பக்க நகல், உரிய அலுவலர்களால் மேலொப்பம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சான்றுகளுக்கு பழைய பத்திரம் அல்லது பெற்றோர்கள் / உறவினர்களின் பள்ளிச்சான்று, பெற்றோர், மற்றும் மூதாதையர் வாழ்ந்த இடம், நிலையானச் சொத்துகள் உள்ள இடம், தாய்மொழி, திருமணம், கல்வி, பயிலும் இடம் அல்லது பயின்ற இடம் ஆகியவைகளை பரிசீலிக்கலாம். (அரசாணை (பல்வகை) எண் 2510, சமூக நலத்துறை, நாள் 23-09-1986)
  • உள்ளூர் விசாரணை, செய்யும் தொழில், பெறுகின்ற வருமானம்.
  • பழக்கவழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படுகின்ற சாதிக்குரிய வம்சாமுறை, கலாச்சாரம் போன்றவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல், தகவலளிக்கக்கூடிய ஏனையோரையும் முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும்.
  • மனுதாரரிடம் நேரடி விசாரணை மற்றும் தாக்கல் செய்யும் சான்றாவணங்களைப் பரிசீலித்தல்.
  • நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றின் ஒப்படை தொடர்பான ஆவணங்களில் மனுதாரர் அல்லது பெற்றோர்கள் வகுப்பு குறிப்பிடப்பட்டிருக்கும், இதனையும் சரிபார்க்கலாம்.
  • பெற்றோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கிறார்களா அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறார்களா?
  • கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்ட முறையில் விசாரணை (Independent Enquiry)மேற்கொள்ள வேண்டும். சாதிச் சங்கங்கள் வழங்குகின்ற சான்றுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பழங்குடியினர் / அட்டவணை வகுப்பு / மிகப் பிற்பட்ட வகுப்பு / சீர் மரபினர் பட்டியலில் இடம் பெறாத எந்த சாதியினருக்கும் சான்றுகள் வழங்கக் கூடாது. (அரசு கடித எண் 11832 / பி.வ. / 92-5, பிற்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை, நாள் 29-10-1992).

    சாதிச்சான்று வழங்கும் போது

  • பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.

    சாதி மற்றும் சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்க்கும் விழிப்புக் குழுக்கள்:

  • மாவட்ட விழிப்புக் குழு:
  • இதன் தலைவர் - மாவட்ட ஆட்சியர்
  • உறுப்பினர் - மானிடவியல் நிபுணர்
  • செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு) (பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்)
  • மாநில விழிப்புக் குழு:
  • மாவட்ட விழிப்புக் குழு ஆணைக்கெதிராக மாநில விழிப்புக் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம். மாநில விழிப்புக்குழு உறுப்பினர்கள்.
  • தலைவர் – அரசு செயலர், ஆதி திராவிடர் நலத்துறை.
  • உறுப்பினர் – இயக்குநர், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை.
  • செயல் உறுப்பினர்
  • (ஆதி திராவிடர் வகுப்பு) – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்.
  • (பழங்குடியினர் வகுப்பு) – பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்
  • (அரசாணை எண். 19, ஆதி திராவிடர் நலத்துறை, நாள் 24-01-2005)
  • பிற்பட்ட வகுப்பு, பிற்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பு : சாதிச்சான்று ஆய்வு
  • தலைவர் : அரசு செயலர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
  • செயல் உறுப்பினர்கள் : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்.

    சாதிச்சான்று தவறுதலாக வழங்கும் நிலையில் VAO:

  • ஒரு கிராமத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து சாதிச்சான்று வழங்க VAO முழு பொறுப்பு உள்ளவர் ஆகிறார்.
  • தவறுதலாக சாதிச்சான்று பரிந்துரைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு VAO ஆட்படுவார்.

    2.பிறப்பிட/இருப்பிடச் சான்று (Nativity Residential Certificate)

  • பிறப்பிடம் : பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தைக் குறிக்கும். (அரசாணை (பல்வகை) எண் 111ம், ஆதி திராவிடர் நலத்துறை, நாள் :06-07-2005)
  • இருப்பிடம் : இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தைக் குறிக்கும்.

    இச்சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:

  • இச்சான்று வேண்டுபவர் ரூ.2க்கான கட்டண வில்லையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்.
  • இருப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் வசிக்க வேண்டும்.
  • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ செலுத்தி இச்சான்றை பெறலாம்.

    3. வருமானச் சான்று (Income Certificate)

  • இச்சான்று கல்வி உதவித்தொகை பெறவும், பள்ளி & கல்லூரிகளிலும் மாணவர் விடுதியில் சேரவும் இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

    வருமானச் சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:

  • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ கட்டணம் செலுத்தி இச்சான்றை பெற வேண்டும்.
  • உள்ளூர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்
  • குடும்ப அட்டையில் காண்பிக்கப்பட்டுள்ள வருமானம்
  • வாடகை வாயிலாக ஈட்டும் வருமானம்
  • பணிபுரியும் நிறுவனம், அல்லது பணி வழங்கியவர் தரும் வருமானச் சான்று
  • குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் நிலச்சொத்துக்கள் மற்றும் அதன் வாயிலான வருமானம்.
  • வருமான வரி / வேளாண்மை வருமான வரி விதிப்பு / விற்பனை வரி விதிப்பு ஆணை.
  • இதர வருமானம் ஏதேனும் இருப்பின்

    வருமானச் சான்று வழங்கும் காலம் & செல்லுபடி ஆகும் காலம்:

  • இச்சான்று 15-நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
  • இவை 6-மாத கால அளவு மட்டுமே செல்லத்தக்கது ஆகும். (அரசாணை (பல்வகை) 1509 – வருவாய்த் துறை நாள் 27-11-1991 படி ஆகும்)

    4. நாட்டினச் சான்று (Nationality Certificate) :

  • ஒருவர் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்று வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப் பின் வழங்கப்படும் சான்றாகும்.
  • இச்சான்று கடவுச்சீட்டு (Passport) மற்றும் நுழைவு இசைவு (Visa) ஆகியவற்றை பெற பயன்படும்.

    நாட்டினச் சான்று வழங்கும் போது VAO கவனிக்க வேண்டியவைகள்:

  • மனுதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? கிராமத்தில் நிரந்தர குடியிருப்பு கொண்டுள்ளாரா? என்று தேவையானசான்றாவணங்கள் மற்றும் உள்ளூர் விசாரணை மூலம் உறுதி அறிக்கை செய்ய வேண்டும்.
  • குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிரந்தர சொத்துகள் இருக்கும் இடம், வரி கட்டிய ரசீது போன்றாவணங்களைப் சரிபார்த்து VAO அறிக்கை வழங்க வேண்டும்.
  • VAOவின் பரிந்துரை, RI-யின் பரிந்துரையின் படி – வட்டாட்சியர் இச்சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பதாரருக்கு வழங்குவார்.

    5. வாரிசுச் சான்று(Legal Certificate) :

  • ஒரு குடும்பத்தின் தலைவரோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினரோ எவரேனும் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பு, வீட்டு வரி, தொலைபேசி இணைப்பு, பட்டா, வங்கி கணக்கு ஆகியவற்றை மாற்றம் செய்ய வழங்கப்படுகிறது. இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின் அவரது வாரிசுதாரர் கருணை – அடிப்படையில் பணிநியமனம் பெறவும், குடும்ப ஓய்வூதியம் பெறவும், இறந்தவரின் நேரடி வாரிசுகளுக்கு அல்லது கணவர், மகன், மகள், தாய் ஆகியோருக்கு விசாரணைக்கு பின் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

    வாரிசுச் சான்று வழங்குவதில் VAOவின் பங்கு :

  • விண்ணப்ப மனுவில் ரூ.2-க்கு – வில்லை ஒட்ட வேண்டும்.
  • உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்று
  • குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்
  • இறந்த நபர் குடியிருந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரணை.
  • சந்தேகம் ஏற்படின் இறப்புச் சான்றின் மெய்த்தன்மையை, எந்த அலுவலகத்தால் வழங்கப்பட்டதோ அங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
  • வாரிசுச் சான்று அரசாணை (பல்வகை) 2906-இன் படி (04-11-1981) வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
  • நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொருத்தவரை, வாரிசுச் சான்றிதழ் வழங்குவதைத் தவிர்த்து, உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள மனுதாரர்களை அறிவுறுத்தவும் என வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
  • இறந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன் இருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக தெரிய வரும் போதும்.
  • ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாக கருதி சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போதும்.
  • வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும், வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்குமூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்
  • இறந்தவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில் அரசுக் கடித (நிலை) எண் 1534, வருவாய்த்துறை நாள் 28.11.1991-இன் படி, வாரிசுச்சான்று வட்டாட்சியரால் 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணையை VAO-காலதாமதம் செய்யக்கூடாது.

    6. சொத்து மதிப்புச் சான்று

  • ஒப்பந்தக்காரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலங்களில் பங்கு பெறவும் இச்சன்று தேவைப்படும்.

    சொத்து மதிப்புச் சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு:

  • இம்மனுவில் ரூ.10க்கான கட்டண வில்லை ஒட்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சொத்து மதிப்பு ரூ.50,000 வரையில் ரூ.100/-ம் அதற்கு மேல் ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200 வீதம் கட்டணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும்.
  • மனுதாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா? சொத்து மதிப்பு கோரும் மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துகள் கிராமக் கணக்குகளில் மனுதாரரின் பெயரில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
  • இம்மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பும்போது, அடங்கல், சிட்டா, A-பதிவேடு நகல்களை பரிசீலனை செய்து அவற்றை மேலொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.
  • மனுதாரர் சொத்தை தனியாக பயன்படுத்துபவரா அல்லது கூட்டாக அனுபவிப்பவரா என்பதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
  • கூட்டாக அனுபவித்தால் அவருடைய ஈவுக்கு மட்டுமே, சிட்டா, அடங்கல், A-பதிவேடு ஆகியவற்றில் வழியாக குறிப்பிட வேண்டும்.
  • சொத்து, கட்டடமாக இருந்தால் – தகுதி பெற்ற பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அறியப்படவேண்டும். வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • சொத்துகளுக்கான பத்திரத்தின் மெய்த்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
  • சமீபத்திய 13-ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று அல்லது வேறு வில்லங்கம் இருக்கிறதா எனக் காண வேண்டும்.
  • அடமான பத்திரங்களை சரிபார்த்தல், மற்றும் விசாரணை செய்யப்படும் சொத்தின் பேரில் அடமானம் இருப்பின் அந்த மதிப்பினை சொத்து மதிப்பிலிருந்து கழித்துக் கணக்கிட வேண்டும்.
  • சொத்துவரி ரசீதுகள் மற்றும் நிலவரி ரசீதுகள்.
  • மனுதாரரின் வாக்குமூலம்.
  • சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டில் வழங்கப்பட வேண்டும். அசையும் சொத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது.
  • விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு, சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு இவற்றை பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

    இச்சான்று வழங்கும் காலம், செல்லுபடி காலம் :

  • இவை 15 நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்படும்.
  • இவற்றின் செல்லுபடி காலம் வழங்கிய நாளிருந்து 6-மாதங்கள் மட்டும்.

    7. பிறப்பு – இறப்பு சான்று :

  • இது பற்றி பகுதி 5-இல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    8. ஆதரவற்ற குழந்தைச் சான்று:

  • ஆதரவற்ற குழந்தைகள் கருணை/காப்பு இல்லங்களில் சேர்வதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

    இச்சான்று வழங்குவதில் VAOவின் பங்கு:

  • குழந்தையின் தாய், தந்தை பற்றிய முழு விபரங்கள். எப்பொழுது காலமானார்கள் என்பதனை இறப்புச் சான்று அல்லது பதிவேடு மூலம் சரிபார்த்தல்.
  • குழந்தை உண்மையில் ஆதரவற்றதா – என முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.
  • குழந்தைக்கு பாதுகாவலர் உள்ளனரா? என விசாரணை செய்து வட்டாட்சியருக்கு VAO தெரிவிக்க இச்சான்று 7 நாள்களுக்குள் வழங்கப்படும் (வட்டாட்சியரால்).

    9. ஆதரவற்ற விதவைச் சான்று :

  • ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு இச்சான்று கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

    இச்சான்றின் மீதான விசாரணை மேற்கொள்ளும் போது VAO-வின் பங்கு

  • மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா?
  • விண்ணப்பதாரரின் மனைவியின் இறப்புச் சான்று சரிபார்த்தல் இறப்பு – விபரம்.
  • மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா?
  • உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா?
  • கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார், அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம்.
  • சுயமாய் செய்யும் தொழில், வேலை போன்றவற்றால் கிடைக்கும் வருமானம் போன்றவைகளை பரிசீலனை செய்து, உள்ளுர் விசாரணை
  • மற்றும் கிராமப் பிரமுகர்களின் விசாரணை செய்து மனுதாரர் தகுதியுள்ளவரா என்பதனை VAO உறுதி செய்தல் வேண்டும்.

    இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் காலம்:

  • இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
  • இச்சான்று வழங்கும் கால அளவு – 30 நாள்கள் ஆகும்.

    10. கலப்புத் திருமணச் சான்று

    கலப்புத் திருமணம் என்றால் என்ன?

  • இரண்டு மாறுபட்ட சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனமாகவும் – மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்து புரிந்துகொள்ளும் திருமணம் கலப்புத் திருமணம் எனப்படும்.

    கலப்புத் திருமணச் சான்றின் பயன்கள்

  • அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும்
  • இவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும்
  • அரசின் சலுகைகளைப் பெறவும் இவை பயன்படுகிறது.
  • இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.

    இச்சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு

  • மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கின்றாரா? அதற்கான சான்றாவணங்களை சரிபார்த்தல்.
  • இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் தானா? சாதிச்சான்று ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை சரிபார்த்தல்.
  • திருமணச் சான்று, திருமணம் நடைபெற்ற இடம், முறையாக சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா என்று சரிபார்த்தல்.
  • மேற்கண்ட தகவல்களை சரிபார்த்து, ஆதிதிராவிடர் வாழும்
  • பகுதியிலுள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மற்றும் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை VAO-வழங்கிய பின் வட்டாட்சியர் வழங்குவார்.

    இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் கால அளவு:

  • இச்சான்றை வட்டாட்சியர் வழங்குவார்.
  • மனுசெய்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

    11. பள்ளிச்சான்று தொலைந்ததற்கான வழங்கப்படும் சான்று.

  • பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்படும் அசல் சான்று தொலைந்துவிட்டால் அச்சான்றின் நகலைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வட்டாட்சியரால் மேற்படி சான்று தொலைந்தது உண்மை என்று சான்று வழங்கப்படுகிறது.

    இச்சான்றை வழங்குவதில் VAOவின் பங்கு:

  • காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி (FIR Copy)
  • இச்சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற காவல்நிலையத்தின் அறிக்கை.
  • மனுதாரரிடம் நேரடி விசாரணை எவ்வாறு சான்று தொலைந்தது என்பதை மனுதாரரிடம் விளக்கம் பெற்று VAO அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இச்சான்று வழங்கும் அதிகாரி & காலம்:

  • வட்டாட்சியர் இச்சான்றை வழங்குவார்.
  • 15 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.

    12. கணவனால் கைவிடப்பட்டவர்:

  • இது வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்று ஆகும்.

    இச்சான்று வழங்கும் போது VAOவின் பங்கு :

  • மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கிறாரா?
  • மனுதாரருக்கும், அவர் கணவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது, அதற்கான சான்றாவணத்தை சரிபார்த்தல், உள்ளூர் விசாரணை மூலமும் உறுதிப்படுத்தல்.
  • மனுதாரர் ஏன் கணவனால் கைவிடப்பட்டுள்ளார் என்ற விசாரணை, கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனுதாரரை கைவிட்டு விட்டாரா? அப்படியானால் எப்போது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார்? கணவருடன் வாழ்ந்து, மனுதாரருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
  • பிரிந்து சென்ற கணவர், எங்கே சென்று விட்டார் என்பதையும் விசாரணை வாயிலாக அறிய வேண்டும்.
  • தற்காலிகமாக பிரிந்திருத்தலை சான்று வழங்குவதற்கு பரிசீலிக்கலாகாது.

    இச்சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டியவைள்:

  • மனுதாரர் கணவனை விட்டுப்பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5-ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா?
  • அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.

    இச்சான்றை வழங்கும் அதிகாரி & காலம்

  • இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
  • இச்சான்று விண்ணப்பித்த நாளிருந்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
  • No comments:

    Post a Comment