27/01/2016

4797 - பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள்? நன்றி Advocatehelp Centre

அரசு ஊழியர் :
பதிவு ஏடுகளில் திருத்தல், சேர்த்தல் போன்ற மோசடிகள் செய்யும் அரசு ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் - இந்திய தண்டனை சட்ட பிரிவு 167 - (ஏழு ஆண்டுகள் வரை - பதிவு சட்டம் பிரிவு 81)
பொதுமக்கள் :
பதிவின் பொது பதிவாளர் முன் பொய் வாக்கு மூலம் கொடுத்தல், போலி தகவலை எழுதுதல், போலி ஆவணம் வரைபடம் தாக்கல் செய்தல், ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191,192,193,419,467,471 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82)
ஆள் மாறாட்டம் –
தன்னை பத்திர பதிவு செய்தவர் என்று கூறி நடித்து பத்திரத்தை திரும்ப வாங்கி செல்வதும் ஆள் மாறாட்ட குற்றம்தான் –
(பேரரசர் எதிர் கௌசல்யா, 5. பாம்பே எல். ஆர் 138 )
சாட்சி உடந்தை –
வேறு ஒருவராக பதிவு அலுவலகத்தில் நடிப்பவரை உண்மையானவர் என அடையாளம் காட்டும் சாட்சியும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனைக்குரியவர்.
(நீலகாந்தாராவ் சந்தாப்புல் எதிர் பேரரசர் – ஏ ஐ ஆர் 1922 – நாக்பூர் 86)
நல்ல உள்நோக்கம் இருந்தாலும் குற்றம், குற்றமே !
நல்ல உள்நோக்கத்துடன் ஒருவர் வேறு ஒருவர் போல் நடித்தாலும், அது குற்றம்தான். பிரிவு 82 இன் கீழ் தண்டிக்கப்பட கெட்ட உள்நோக்கம் (motive) அவசியமில்லை. ஆள்மாறாட்டம் மட்டுமே போதுமானது –
(அரசி எதிர் லூத்திபேவா, 2 பெங்கால் எல் ஆர் 25 கிரிமினல் )
சகோதரி வேடம் :
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். முதாலமவர் சொத்தினை அபகரிக்க மற்ற இருவரும் விற்பனை ஆவணம் தயாரித்தனர். அதில் ஒருவர் முதலாமவர் போல் நடித்து ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது
(கங்கா திவ்யா எதிர் பேரரசர், ஏ ஐ ஆர் 1943 பாட்னா 227 @ பக்கம் 229)
கொடிது கொடிது உடந்தை கொடிது :
பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் அவரை ஏவி விட்டவரை விட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – (அரசி எதிர் பிரசாத் ஜெயின் 8 W.R. (Cr) 16)
போலிகள் உருவாக்கத்துக்கு ஆயுள் தண்டனை -
பண மதிப்புள்ள படிவ வடிவிலான அவ்வனங்களுக்கும் உயில்கள், தத்து அதிகார ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் நேரடி போலி ஆவணங்கள் அல்லது மின்னணு வடிவ போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கு பத்தாண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை வரை சாதாரண, கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் – இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000)

No comments:

Post a comment