01/04/2017

5735 - பட்டா ரத்து தொடர்பான உத்தரவு, அசல் வழக்கு எண் 158 / 2012, 05.10.2015, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல், நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
கொடைக்கானல்
முன்னிலை: திரு. ஆர். சுப்பிரமணியன்¸ எம்.ஏ.¸பி.எல்.¸பி.எட்.¸டி.எல்.எல்.¸
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்
கொடைக்கானல்
2015 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5-ம் நாள் திங்கள்கிழமை
அசல் வழக்கு எண் 158 / 2012
மகேஸ்வரன் ... வாதி
/எதிர்/
1. மாவட்ட ஆட்சித்தலைவர்
2. கோட்டாட்சியர்
3. காளியம்மாள் ... பிரதிவாதிகள்
வாதி தாக்கல் செய்துள்ள பிராதின் சுருக்கம்
தாவா சொத்து ஆதியில் அரசு புறம்போக்கு இடமாக இருந்ததை வாதியின் தாயார் ராஜாமணி என்பவர் 1970-ல் ஆக்கிரமிப்பு செய்து¸ வாதியின் கடின உழைப்பால் பண்படுத்தி விளைநிலமாக்கி ஆண்டு அனுபவித்து வந்தார் என்றும்¸ வாதியின் தாயார் ஏழை என்பதாலும்¸ தாவா இடத்தை நீண்ட காலமாக அனுபவித்து வந்ததாலும் 1982-ம் ஆண்டு டி.கே.டி பட்டா வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அனுபவம் செய்து வந்தார். பிறகு வாதியின் தயார் தவா இடத்தை தனது மகனுக்கு 1996-ம் ஆண்டு தானசெட்டில்மெண்ட் மூலம் தனது மகனான வாதிக்கு சுவாதீனம் கொடுத்துள்ளார் என்றும்¸ அதன் அடிப்படையில் வாதி தானசெட்டில்மெண்ட் பெற்ற நாள் முதல் அரசு வரி வகையறாக்களை செலுத்தி தாவா சொத்தினை அனுபவம் செய்து வந்தார் என்றும்¸ வாதியின் தாயார் பெற்ற பட்டாவை வருவாய்த்துறையினரால் அங்கீகரிக்கப்பட்டு அவரிடம் வரி வகையறாக்களையும் அரசு பெற்று அவரது அனுபவத்தையும் ஈஸ்டோபல் (Estopel) செய்துள்ளது.
ஆனால் 2-ம் பிரதிவாதியானவர் வாதிக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை 3-ம் பிரதிவாதிக்கு வழங்கப்பட்டு¸ வாதிக்கு வழங்கப்பட்ட டி.கே.டி பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டது என்று வாதியின் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வாதியின் தாயாருக்கு முறைபடி எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அதனால் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்ட டி.கே.டி பட்டா செல்லாது என்றும்¸ வாதியானவர் தானசெட்டில்மெண்டுக்கு பின் தாவா இடத்தை அனுபவம் செய்து வருவதும்¸ 3-ம் பிரதிவாதி தாவா இடத்தை அனுபவம் செய்து வராததும் 1¸ 2 பிரதிவாதிகளுக்கு நன்கு தெரியும் என்றும்¸ 2-ம் பிரதிவாதி தவறான புல எண்களை காட்டி வாதிக்கு அவசர குறிப்பாணை அனுப்பபட்டுள்ளது. வாதியானவர் தாவா சொத்தின் பேரில் அரசால் வழங்கப்பட்ட பட்டாவை வைத்து அடமானம் வைத்து விவசாய கடன் பெற்றுள்ளதாகவும்¸ வாதி தாவா இடத்தில் விவசாயம் செய்து தான் வாதியின் குடும்பம் பிழைத்து வருகிறது.
2-ம் பிரதிவாதி ரத்து செய்த உத்தரவின் பேரில் வாதி டி.ஆர்.ஓ-க்கு மேல் முறையீடு செய்ததில் சரிவர விசாரணை செய்யப்படாமல் ரத்து செய்யப்பட்டதாகவும்¸ பிறகு நில நிர்வாக ஆணைருக்கு மேல்முறையீடு செய்ததில் கமிஷனரும்¸ மேற்படி உத்தரவை அவ்வாறே பிரதிபளித்துள்ளார். கொடைக்கானல் ஆர்.டி.ஓ வாதியின் தாயாருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும்¸ வாதி இல்லாததால் நிலத்தில் வாதியின் தாயாருக்கு ஒட்டி சார்பு செய்ததது சட்டப்படி செல்லாது என்றும்¸ முறைப்படி பதிவு தபாலில் அறிவிப்பு அனுப்பியிருக்க வேண்டும் என்றும்¸ காளியம்மாள் பெயரில் பட்டா உள்ளது என்றால் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். நில நிர்வாக ஆணையர் அவர்களின் உத்தரவு கடந்த 30 நாட்களுக்கு முன்பு தான் வாதியின் வழக்கறிஞர் சென்னையிலிருந்து வாதிக்கு அனுப்பியுள்ளார் மேலும் வாதியானவருக்கு தவறான எண்ணைக்காட்டி 17.07.2012- ம் தேதி கொடைக்கானல் தாசில்தார் அறிவிப்பு அனுப்பியுள்ளார். அதற்கு வாதி அறிவிப்பில் சொல்லப்பட்ட சொத்தை அனுபவிக்கவில்லை தான் தாவா சொத்தை அனுபவித்து வருவதாகவும் பதில் அனுப்பியுள்ளார்.
வாதி கடந்த 10 ஆண்டுகாலமாக வரி செலுத்தி வந்துள்ளார். ஒவ்வொரு சமாபந்தியிலும் வருடம் ஒருமுறை கிராம வருவாய் கணக்குகளை வருவாய் உயர் அதிகாரி தணிக்கை செய்யும்போது பட்டா தவறுதலாக கொடுக்கப்பட்டிருந்தால் அந்த விபரம் தெரிந்தவுடன் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்டப்படி வழங்கப்பட்டதால்தான் ரத்துசெய்யப்படாமல் இருந்துள்ளது என்றும்¸ வாதியின் தாயார் இறந்ததற்கு பின் தான செட்டில்மெண்ட் அடிப்படையில் தாவா சொத்து வாதிக்கு பாத்தியப்பட்டு வாதியின் அனுபவத்தில் உள்ளது என்றும்¸ 3-ம் பிரதிவாதிக்கு கொடுக்கப்பட்ட பட்டா தவறானது என்றும்¸ வாதியின் தாயாருக்கு வழங்கப்பட்ட டி.கே.டி பட்டா 20.02.2004-ம் தேதி ரத்து செய்யப்பட்டது சட்டப்படி ஏற்பட்டதல்ல என்றும்¸ 1-ம் பிரதிவாதியும்¸ 2-ம் பிரதிவாதியும் விசாரணையில் சொல்லப்பட்டுள்ளதாலும் அவர்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் மீது எந்தவித பரிகாரமும் சேர்க்கப்படவில்லை. வாதிக்கு வழங்கப்பட்ட தாவா பட்டாவை ரத்து செய்தது செல்லாது என விளம்புகை செய்தும்¸ வருவாய் கணக்குகளில் தாவா பட்டாவை ஏற்கும்படி செயல் உறுத்துக்கட்டளைப்பரிகாரம் கோரியும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிருரையின் சுருக்கம்
வாதி பிரதிவாதிகளிடமிருந்து எந்தவித பரிகாரம் பெற பாத்திய உரிமை கிடையாது என்றும்¸ பிராதில் சொல்லப்பட்ட சங்கதிகள் பொய்யென்றும்¸ அவற்றை வாதி சான்றாவணங்களின் மூலம் நிரூபிக்க வேண்டுமென்றும்¸ வாதியின் தாயார் ராஜாமணி போலியாக தயார் செய்து பட்டா பெற்றார் என்றும்¸ வருவாய்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டுமென்றும்¸ வருவாய்துறை அதிகாரி 02.01.2004-ம் தேதி ந.க.எண் 1511/99-அ-1-ன்படி அறிவிப்பு அனுப்பப்பட்டும் வாதியின் தாயார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும்¸ மேற்படி போலியாக தயார் செய்யப்பட்ட ஆவணங்கள் பற்றி எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்கப்படவில்லை என்றும்¸ அதனால் 2-ம் பிரதிவாதி வாதியின் தயார் போலியாக தயார் செய்யப்பட்ட ஆவணம் என்பதால் வாதியின் பெயரிலுள்ள பட்டாவை ரத்து செய்யப்பட்டது என்றும்¸ வருவாய்துறை ஆவணங்களில் பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாவா சொத்து ந.க.எண் 699/2004-அ-1ன்படி 20.02.2004 அரசு புறம்போக்கு நிலம் என்றும்¸ தாவா சொத்தில் இருந்து வாதி வெளியேற்றப்பட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பிறகும் வாதி அரசு நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என்றும்¸ அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றுவதற்கு பிரதிவாதிகளுக்கு வருவாய்துறை சட்டம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படியும் உரிமை இருக்கிறது என்றும்¸ தாவா சொத்துக்குரிய சர்வே எண் சரியாக பிராதில் குறிப்பிடப்படவில்லை என்றும்¸ வாதி தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அனுகவில்லை என்றும் ஆகையால் மேற்படி சட்டத்தின்படி வாதியின் பிராது செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் வாதி தரப்பில் மகேஸ்வரன் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல் 9 வரையான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
வாதி தரப்பில் வாதி மகேஸ்வரன் தனது சாட்சியத்தின்போது இறந்துபோன எனது தயாருக்கு சரவணன்¸ குமரன்¸ நாகராஜ்¸ அமுதவள்ளி ஆகியோர்கள் வாரிசுகளாக உள்ளோம் என்றும் தாவா சொத்து தனது தாயார் தனக்கு தானமாக எழுதிக்கொடுத்ததின் அடிப்படையில் தனக்கு பாத்தியப்பட்டது என்றும்¸ பொதுவாக முறைப்படி முன்னறிவிப்பு அனுப்பிய பின் தான் சட்ட நடைமுறைகளை பின்பற்றி பட்டா ரத்து செய்வது வழக்கம். ஆனால் தாவா சொத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும்இன்றி தாவா சொத்திற்குண்டான பட்டாவை நீக்கரவு செய்யப்பட்டது. சட்ட விதிகளுக்கு மாறுபட்டதாகும் என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பில் சுப்பிரமணிய பிரசாத் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பி.வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு பி.வா.சா.ஆ.1 மட்டும் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதி தரப்பில் சுப்பிரமணிய பிரசாத் அவர்கள் தனது குறுக்கு விசாரணையின்போது அவர் தனது சாட்சியத்தில் தாவா சொத்தின் ரத்து குறித்த உத்தரவு தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் உத்தரவு நாள் குறிப்பிடப்படவில்லை என்றும்¸ பொதுவாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ள பெயர்¸ சர்வே எண்கள் தனித்தனியாக எழுதப்பட்டுள்ளது என்றும்¸ தாவா சொத்தில் வீடு உள்ளது சட்ட விதிகளின்படி வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டி சார்பு செய்யப்படலாம் என்றும்¸ வாதிக்கோ அல்லது வாதியின் தாயாருக்கோ நோட்டீஸ் சார்பு செய்ததற்கான ஆவணமும் அவர்களை விசாரணை செய்ததற்கான ஆவணமும் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யவில்லை என்றும்¸ வாதியின் தாயாருக்கு வழங்கப்பட்ட பட்டா விசாரணைக்கு பின் வழங்கப்பட்ட பட்டா என்றால் அது பற்றி தனக்கு தெரியாது என்றும்¸ உரிய விசாரணையின்றி ரத்து செய்யப்பட்ட இந்த உத்தரவு செல்லாது என்றால் அதை தான் மறுப்பதாகவும்¸ வாதியிடம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இருப்பதால் அவர்தான் தாவா சொத்தின் உரிமையாளர் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
இவ்வழக்கில் கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன
1. வாதியின் தாயாருக்கு வழங்கிய பட்டாவை 2-ம் பிரதிவாதி ரத்து செய்த உத்தரவு சட்டப்படி செய்யப்பட்டதா?
2. 2-ம் பிரதிவாதியின் பட்டா ரத்து உத்தரவு செல்லாது என விளம்புகை பரிகாரம் கிடைக்கக்கூடியதா?
3. கிராம கணக்குகளில் வாதியின் பட்டாவை சேர்க்க கூடிய பரிகாரம் வாதிக்கு கிடைக்ககூடியதா?
4. வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரம் என்ன?
கற்றறிந்த வழக்கறிஞர் வாதி தரப்பில் தனது வாதத்தின்போது இவ்வழக்கின் வாதியின் தாயார் ராஜாமணியம்மாளுக்கு பட்டா வழங்கப்பட்டு மேற்படி பட்டாவின் பேரில் காலம் சென்ற ராஜாமணியம்மாள் வரி செலுத்தி தாவா சொத்தை அனுபவித்து வந்துள்ளார். மேற்படி பட்டாவின் பேரில் காலம் சென்ற ராஜாமணியம்மாள் தான் அனுபவித்து வந்த தாவா சொத்தினை கடந்த 1996-ம் வருடம் கொடைக்கானல் சார்பாய்வாளர் அலுவலகத்தின் மூலமாக தனது மகன் மகேஸ்வரன் என்பவருக்கு தாவா சொத்தினை தானமாக கொடுக்கப்பட்டு அன்றைய நாள் முதல் தாவா சொத்தில் இவ்வழக்கின் வாதி தனது பெயருக்கு வரி வகையறாக்களை செலுத்தி எந்தவித இடையுறுமின்றி தாவா சொத்தை அனுபவித்து வந்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் இவ்வழக்கின் 2-ம் பிரதிவாதியான கொடைக்கானல் கோட்டாட்சியர் அவர்கள் தாவா இடத்திற்குண்டான பட்டாவை எந்தவித காரணமும் முகாந்திரமும் இல்லாமல் தாவா சொத்துக்குண்டான பட்டாவை முறைப்படி அறிவிப்பு அனுப்பாமல் இயற்கை நீதிக்கு மாறாக பட்டாவை ரத்து செய்துள்ளார். மேற்படி தாவா சொத்திற்குண்டான பட்டாவை ரத்து செய்வதற்கு முன்பாக சட்டப்படியான நடைமுறைகளை கடைபிடிக்கப்படவில்லை வாதிக்கு வழங்கப்பட வேண்டிய சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும்¸ இவ்வழக்கின் வாதிக்கோ அல்லது வாதியின் தயார் பெயருக்கோ எந்தவித அறிவிப்புமின்றி இயற்கை நீதியின் அடிப்படையில் வாதிக்கு கொடுக்கப்படவேண்டிய நியாயமான சட்டப்படியான வாய்ப்பை கொடுக்காமல் பட்டாவை ரத்து செய்திருப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும்¸ ஆனால் மேற்படி எண்ணில் கொடைக்கானலில் இல்லாத காளியம்மாள் என்ற பெயருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும்¸ அவருடைய பெயர் பட்டாவை ரத்து செய்யப்படாமல் தாவா சொத்திலுள்ள பட்டா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்றும்¸ இல்லாத பெயரான இவ்வழக்கின் 3-வது பிரதிவாதியான காளியம்மாள் பெயரிலுள்ள பட்டாதான் சரியான பட்டா என்றும்¸ இவ்வழக்கின் 2-வது பிரதிவாதியான கோட்டாட்சியரும் வருவாய்துறை அதிகாரியும் உத்தரவிட்டு இருப்பது செல்லத்தக்கதல்ல என்றும் தாவா சொத்தின் பட்டாவின் பேரிலுள்ள அனைத்து விசாரணைகளிலும் 3-வது பிரதிவாதியான காளியம்மாள் விசாரிக்கப்படவில்லை என்றும்¸ காளியம்மாளுக்கு அனுப்பப்பட்ட சம்மன் அனைத்தும் மேற்படி விலாசத்தில் இல்லாத ஒரு நபர் என்பதால் அஞ்சலகம் மூலம் விலாசதாரர் இல்லை என்று திருப்பபட்டது என்றும்¸ பதிவு செய்து கொண்ட மேற்படி பட்டாவை ரத்து செய்யப்பட்டுள்ளது ஏற்புடைதல்ல என்றும்¸ சரியான முகாந்திரங்களைக் கொண்டு வாதிக்கு கொடுக்க வேண்டிய அறிவிப்பினை முறையாக சார்பு செய்து தக்க விசாரணைக்கு பின் உரிய நடைமுறைகளை பயன்படுத்தி ரத்து செய்யப்படாத உத்தரவின் அடிப்படையில் 2-ம் பிரதிவாதியால் 20.02.2004-ல் தாவா சொத்திற்கு எதிராக ரத்து செய்தது செல்லாது என விளம்புகை செய்யுமாறு வாதிட்டுள்ளார்.
பிரதிவாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் வாதிடும்போது தக்க நடைமுறைகளை பயன்படுத்தி பட்டா ரத்து செய்யப்பட்டது என்றும்¸ முறையான அறிவிப்புகள் சார்பு செய்யப்பட்டுள்ளது என்றும்¸ சட்ட நடைமுறைகளை கையாளப்பட்டு பட்டா ரத்து செய்யப்படவில்லை என்று கூறப்படும் வாதியின் கூற்றானது ஏற்புடையதல்ல என்று வாதிட்டார். எனவே வாதியின் தாவா நிலைக்கத்தக்கதல்ல என்றும்¸ தாவா தள்ளுபடி செய்யத்தக்கது.
இருதரப்பு வாதமும் கேட்கப்பட்ட நிலையில் சாட்சிய சான்றாவணங்கள் பரிசீலனை செய்து பார்த்ததில் தீர்மானிக்கப்பட வேண்டிய எழுவினாக்கள் யாதெனில்
1) வாதியின் தாயாருக்கு வழங்கிய பட்டாவை 2-ம் பிரதிவாதி ரத்து செய்த உத்தரவு சட்டப்படி செல்லதக்கதா அல்லது சட்டப்படி செய்யப்பட்டதா?
2) 2-ம் பிரதிவாதியின் பட்டா ரத்து உத்தரவு செல்லாது என விளம்புகை பரிகாரம் கிடைக்ககூடியதா?
3) கிராம கணக்குகளில் வாதி தாவா சொத்தில் கணக்குகளை ஏற்ற கோரும் பரிகாரம் கிடைக்கத்தக்கதா?
4) வாதிக்கு கிடைக்ககூடிய வேறு பரிகாரம் என்ன?
எழுவினா 1-க்குரிய தீர்வு
இவ்வழக்கின் வாதியின் தயாரான ராஜாமணியம்மாள் என்பவருக்கு வருவாய்துறை அலுவலரால் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உத்தரவு செய்யப்பட்டது செல்லத்தக்கதா என்பதை பார்க்கும்போது வாதி தரப்பில் தாக்கல் செய்த ஆவணத்தின் அடிப்படையில் 1989-ம் ஆண்டு இவ்வழக்கின் வாதியின்தாயாரான வேலுச்சாமி மகள் ராஜாமணி என்பவருக்கு சர்வே எண் 895/2 ல் 0.49.0 ஹெக்டர் நிலத்தை டி.கே.டி பட்டா மூலம் ஒப்படைவு செய்யப்பட்டது. மேற்படி ஒப்படைவின் அடிப்படையில் வாதியின் தாயார் தனது அனுபோகத்தில் வைத்து ஆண்டு அனுபவித்து வந்த சொத்தினை வாதிக்கு 1996-ம் வருடம் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலமாக ராஜாமணியம்மாள் இவ்வழக்கின் வாதிக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்து அன்றே சுவாதீன ஒப்படைப்பு செய்துள்ளார். மேற்படி ஆவணத்தின் அடிப்படையில் தாவா சொத்துக்களை இன்று வரை ஆண்டு அனுபவித்து வரி வகையறாக்களை இவ்வழக்கின் வாதி செலுத்தி மேற்படி தாவா சொத்தில் விவசாயம் செய்தும்¸ வீடு கட்டியும் அனுபவித்து வருகிறார்.
தாவா சொத்திற்கு 1989-ம் ஆண்டு டி.கே.டி பட்டா வழங்கப்பட்டு 22 ஆண்டுகள் கழித்து கோட்டாட்சியர் உத்தரவு என 699/2004-ல் அடிப்படையில் தாவா சொத்திற்கு வழங்கப்பட்ட பட்டா நீக்கரவு செய்யப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாவா சொத்தானது ஆதியில் வாதியின் தாயாருக்கு ஒப்படைவு செய்யப்பட்ட நிலம் தான் என்பது இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விசயமாகும். தாவா நிலத்தை வருவாய் துறையினரால் மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டதற்கான ஆதரவுகள் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. தாவா சொத்தில் வாதியானவர் பயிர் செய்தும்¸ விவசாய வருமானத்தின் மூலம் தாவா சொத்தில் வீடு கட்டி சுவாதீனத்தில் இருந்து வருவதும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.7 பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அனுப்பிய குறிப்பாணை மூலம் தெளிவாகிறது. மேலும் வாதியானவர் கோட்டாட்சியர் அவர்களிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்களின் நடைமுறை ந.க.எண் 10674/2014/அ/1 19.11.2014-ல் கீழ்கண்டவாறு கண்டெழுதப்பட்டுள்ளது.
'மனுதாரர் திரு.மகேஸ்வரன் த/பெ.பவுன்ராஜ் என்பவர் பட்டா தாக்கல் கோரியுள்ள நிலம் வில்பட்டி கிராமக்கணக்குகளின்படி புல எண் 895/2 மொத்த விஸ்தீரணம் 0.49.0 ஏர்ஸ்¸ தீர்வை ஏற்பட்ட தரிசு என தாக்கலாகியுள்ளது. கிராம கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்நிலம் டி.கே.டி எண் 316/92-ன்படி வேலுச்சாமி மகள் ராஜாமணி என்பவருக்கு நிபந்தனை நில ஒப்படைவு வழங்கப்பட்டு பட்டா எண் 1989-ல் தாக்கல்
செயய்பபட்டு இருந்துள்ளது. பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் அவர்களது உத்தரவு ந.க.எண் 699/2004/அ/1 நாள் 20.02.2004-ன்படி நில ஒப்படைவு ரத்து செய்யப்பட்டு¸ மீண்டும் தீர்வை ஏற்பட்ட தரிசு நிலமாக வகைப்பாடு மாறுதல் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது."
'மேற்கண்ட அனைத்து விபரங்களையும் பரிசீலனை செய்யப்பட்டது. மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட 1968 முதல் 1997 முடிய மற்றும் 1997 முதல் 20.07.2004 முடிய உள்ள வில்லங்கச் சான்றிதழ்களில் எவ்வித வில்லங்கங்களும் காணப்படவில்லை. மேலும் மேற்படி நிலத்திற்கான ஒப்படைவு இரத்து செய்யப்பட்டிருபினும்¸ அந்நிலம் அவரது அனுபவத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. கொடைக்கானல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண் 158/2012ல் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் வில்பட்டி கிராமம் புல எண் 895/2 விஸ்தீரணம் 0.49.0 ஏர்ஸ் நிலத்தை ஏற்கனவே ஒப்படைவு பெற்ற திருமதி.ராஜாமணி என்பவரின் மகள் திரு.மகேஸ்வரன் த/பெ.பவுன்ராஜ் என்பவர் பெயரில் பட்டா தாக்கல் செய்யலாம் என்பதற்கு பரிந்துரை செய்கின்றேன்."
என்ற ஆய்வறிக்கையை பார்க்கும்போது இன்றைய நாளது தேதி வரை தாவா சொத்தானது இவ்வழக்கின் வாதியின் உடைமையில்தான் இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது. மேற்படி தனி அறிக்கை புல எண் 895/2 விஸ்தீரணம் 0.49.0 ஏர்ஸ் நிலத்தை ஏற்கனவே பெறப்பட்டு ராஜாமணி என்பவர் மகன் மகேஸ்வரன் தகப்பனார் பவுன்ராஜ் என்பவரின் பெயரில் பட்டா தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி தாவா சொத்தில்
'மேற்படி நிலத்தை கொடைக்கானல் வட்ட சார்பு ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுடன் சென்று இடப்பார்வை மேற்கொள்ளப்பட்டது. இடப்பார்வையில் மேற்படி நிலத்தைச் சுற்றிலும் முள்கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்நிலத்திற்குள் பிளம்ஸ் சுமார் 90 மரங்களும்¸ பேரி சுமார் 15 மரங்களும்¸ பிச்சீஸ் சுமார் 20 மரங்களும் சிறுபட்டை சவுக்கு மரங்கள் சுமார் 10-ம் இருந்தன. மேலும் அந்நிலத்தின் வடக்கு பகுதியில் ஒரு வீடு உள்ளது. அதில் தற்போது யாரும் குடியிருப்பு இல்லை. மேற்படி நிலம் மனுதாரரின் அனுபவத்தில் உள்ளது."
என வருவாய்த்துறையினரின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
மேலும்¸ கொடைக்கானல் வருவாய்துறை ஆய்வாளர்¸ கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் சென்று பார்வை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி தனி அறிக்கையில் பார்க்கும்போது தாவா இடத்தில் வடக்கு பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. அதில் தற்போது யாரும் குடியில்லை என்றும்¸ மேற்படி தாவா சொத்து மனுதாரர் அனுபவத்தில் உள்ளது என்றும்¸ வட்டாட்சியர் தனி அறிக்கையில் இருப்பது தெளிவாகிறது. இவ்வாறான சூழ்நிலையில் மேற்படி ஒப்படைவு சொத்து தாவா நிலமானது முறையாக அறிவிப்பு செய்து ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதே இந்நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய சங்கதிகள் இவ்வழக்கின் பிரதிவாதிளால் வாதிக்கோ¸ வாதியின் தாயாருக்கோ எந்தவித முறையான அறிவிப்பும் அனுப்பாமல் வாதிக்கு கொடுக்கப்பட வேண்டிய காலஅவகாசம் இயற்கை நீதியின் அடிப்படையில் வாதி தனது வாதத்தை வைக்க போதுமான கால அவகாசமும் முறையான அறிவிப்பும் சார்பு செய்யாமல் அவசரகதியில் பட்டா ரத்து செய்துள்ளது தெரிய வருகிறது. எனவே முறையாக அறிவிப்பு அனுப்பியதற்கான ஆவணமோ¸ முறையாக விசாரணை செய்யப்பட்டதற்கான ஆவணமோ பிரதிவாதிகள் தரப்பில் இந்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் பிரதிவாதிகள் தரப்பில் விசாரிக்கப்பட்ட கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பட்டா ரத்து செய்யப்படும்போது சட்ட முறைகளை பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால் சரிதான் என்றும்¸ வாதிக்கு சட்டப்படியான முறையில் அறிவிப்பு அனுப்பபட்டுத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் அவற்றை நிரூபணம் செய்ய எந்தவித ஆவணமும் இந்நீதிமன்றத்தின் முன் தீர்வு காண்பதற்காக பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் கோட்டாட்சியர்¸ நேர்முக உதவியாளர் தனது சாட்சியத்தின்போது வாதிட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இருப்பதால் அவர் சொத்தின் உரிமையாளர் என்றால் சரியல்ல என்றும்¸ மறுத்துரைத்தவர் பின் அதற்கு மாறாக வட்டாட்சியர் விசாரணையில் சரியாக விசாரணை செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா அனைத்தும் விசாரணை செய்து வழங்கப்பட்டது தான் என்றால் சரிதான் என சாட்சியம் அளித்துள்ளார்.
மேற்படி சாட்சியத்தை பார்க்கும்போது வட்டாட்சியர் அறிக்கை சரியானது என்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஒப்புக்கொண்ட நிலையில்¸ தக்க விசாரணையின் அடிப்படையிலேயே தாவா சொத்திற்கு ஆதியில் பட்டா வழங்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் பட்டா ரத்து செய்தபோது கோட்டாட்சியர் சரியான சட்ட நடைமுறைகளை பயன்படுத்தி வழக்கின் வாதிக்கு கொடுக்கப்பட வேண்டிய சட்டப்படியான அறிவிப்புகளுக்கும் அதன் பேரிலான விசாரணையும் செய்யப்படவில்லை என்றே இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது. எனவே 2-வது பிரதிவாதியான கோட்டாட்சியரால் சட்டப்படி பட்டா ரத்து உத்தரவு நடவடிக்கையானது சட்டத்திற்கு உட்பட்டு ஆர்.டி.ஓ. ஆர்.ஓ.சி.எண் 699/2004-ன்படி செயல்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது. ஏனெனில் இவ்வழக்கின் 3-வது பிரதிவாதி காளியம்மாள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு மேற்படி அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு அந்த அறிவிப்புகளை அதன் பேரில் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என்றே இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது. மேற்படி காளியம்மாள் என்ற நபரே இல்லாதபோது அவர் பெயரில் அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது.
மேற்படி வட்டாட்சியர் தனி அறிக்கையில் கொடைக்கானல் உரிமையியல் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண் 158/2012-ல் காளியம்மாள் வயது 60 கணவர் பெயர் சிவன் என்பவர் யாரும் இல்லை என தெரிவித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக நடவடிக்கை குறிப்பு பதிவு செய்துள்ளார். இல்லாத ஒரு பெயருக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை பிரதிவாதிகள் தரப்பில் மறுத்துரைக்கப்படாததால் 2-ம் பிரதிவாதியானவர் இல்லாத பெயருக்கு அறிவிப்பு சார்பு செய்து விசாரணை செய்ததாக கூறி இவ்வழக்கின் வாதியின் தாயார் பெயரிலுள்ள பட்டாவை ரத்து செய்து இருப்பது நீதிமன்றத்தின் நலனுக்கு உட்பட்டதல்ல என தீர்மானித்து 2-ம் பிரதிவாதியால் 20.02.2004-ல் ரத்து செய்வதற்காக போடப்பட்ட ஆர்.ஓ.சி.எண் 699/2004-ல் உத்தரவானது இத்தாவா சொத்திற்கு எதிராக மட்டும் செல்லத்தக்கதல்ல என்றே நீதிமன்றம் தீர்வு காண்கிறது.
ஏனெனில் வாதிக்கு கொடுக்கப்பட வேண்டிய நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும் அதன்பேரிலான விசாரணையும் அவர் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்படாமல் இயற்கையின் நீதிக்கு மாறுபட்டு 2-ம் பிரதிவாதி கோட்டாட்சியரின் செயல் அமைந்துள்ளதால் மேற்படி நடைமுறைகள் செல்லத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் உத்தரவு செய்கின்றது.
எழுவினா 2-க்குரிய தீர்வு
இவ்வழக்கின் 2-ம் பிரதிவாதி கோட்டாட்சியர் பட்டா ரத்து உத்தரவு செல்லாது என விளம்புகை செய்யப்பட்ட நிலையில் தாவா சொத்தானது வருவாய்த்துறைக்கு பாத்தியப்பட்டதாக இருந்தபோதிலும்¸ மேற்படி தாவா சொத்தின் பேரில் டி.கே.டி பட்டா மூலம் ஏற்கனவே இவ்வழக்கின் வாதியின் தாயாருக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பட்டா நிலத்தை பட்டா இரத்தின்போது எவ்வித அறிவிப்புகளோ சட்டமுறையான நடைமுறைகளோ கடைபிடிக்கவில்லை என்பதால் மேற்படி நடவடிக்கை செல்லாது என தீர்ப்பு கண்ட நிலையில்¸ மேற்படி இயற்கையின் நீதியை கடைபிடிக்காமல் நடைமுறைப்படுத்தப்பட்டு 20.02.2004-ல் ந.க.எண் 699/2004 நில ஒப்படைவு ரத்து உத்தரவானது இவ்வழக்கின் டி.கே.டி பட்டா எண் 316/92-ன்படி வேலுச்சாமி மகள் ராஜாமணி என்பவர் நிபந்தனை நில ஒப்படைவு செய்யப்பட்ட உத்தரவிற்கு எதிரான ரத்து நடைமுறையானது இத்தாவா சொத்திற்கு எதிராக மட்டும் செல்லத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் தீர்வுகாண்கிறது.
எழுவினா 3 மற்றும் 4-க்கான தீர்வு
இவ்வழக்கின் 2-ம் பிரதிவாதியான கோட்டாட்சியர் வாதிக்கு கொடுக்கப்பட வேண்டிய நடைமுறைகளை வாதிக்கு எதிராக சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காமல் செய்த உத்தரவை நீக்கரவு செய்யப்பட்ட நிலையில் வருவாய் கணக்குகளின் தாவா சொத்தின் பேரில் கணக்குகளை புதுப்பிக்கவும் உத்தரவு செய்யப்படுகிறது. முறையாக இவ்வழக்கின் சட்ட நடைமுறைகளை பயன்படுத்தி டி.கே.டி பட்டா எண் 316/92 ரத்து செய்யப்படவில்லை என்பதால் மேற்படி 2-ம் பிரதிவாதி கோட்டாட்சியரால் உத்தரவு செய்யப்பட்ட ந.க.எண் 699/2004 நாள் 20.02.2004 உத்தரவானது தாவா சொத்திற்கு எதிராக செல்லத்தக்கதல்ல என தீர்வு செய்து இவ்வழக்கின் நிலை கருதி செலவுத்தொகையினை இருதரப்பிலும் அவர்களாகவே ஏற்றுக்கொள்ளவும் உத்தரவு செய்யப்படுகிறது.
இந்த தீர்ப்புரை என்னால் தட்டச்சருக்கு நேரிடையாக சொல்லப்பட்டு¸ அவரால் கணிணியில் தட்டச்சு செய்யப்பட்டு¸ என்னால் பிழைத்திருத்தம் செய்யப்பட்டு பின்னர் இன்று 05.10.2015-ம் நாள் என்னால் திறந்த நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

No comments:

Post a comment