17/04/2017

5758 - முதல் தகவல் அறிக்கை (FIR) பற்றிய அரிய தகவல், நன்றி ஐயா. Dhanesh Balamurugan

காவல் நிலையத்தின் பொறுப்பிலுள்ள அதிகாரி ஒருவரிடம் கைது செய்வதற்குரிய குற்றங்கள் (Cognizable Offences) தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தி (Fact) முதல் புகார் எனப்படும்.
முதல் புகார் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இருக்கலாம்.
முதல் புகார் வாய்மொழியாக இருந்திடும் போது அதனை காவல் நிலைய பொறுப்பு அலுவலரோ அல்லது அவரது கட்டளைப்படி வேறு எவருமோ மாநில அரசு இதற்கெனக் குறிப்பிட்டிருக்கும் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்றை தகவல் அளித்தவருக்கு கட்டணமின்றி இலவசமாக அளிக்க வேண்டும்.
முதல்தகவல் அறிக்கையின் முக்கியத்துவம் :
முதல் தகவல் அறிக்கை என்பது குற்ற வழக்கில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். அடிப்படை பலவீனமானால், கட்டமைப்பு முழுமையுமே பலவீனமாகிவிடும். முதல் தகவல் அறிக்கை பொய்யாக இருந்தாலோ அல்லது அதில் சந்தேகம் எழுந்தாலோ, குற்ற வழக்கு முழுமையாக சிதைந்து போய்விடும். அதனால் குற்ற வழக்கு வெற்றி பெற வேண்டும் என்றால், முதல் தகவல் அறிக்கை எவ்வித சந்தேகமும் இல்லாததாக இருக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை என்பது மிகவும் அடிப்படையானது என்பதால் அதனை பதிவு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சம்பவம் பற்றிய தகவலை காவல் நிலையத்தில் கொடுப்பதில் காலதாமதம் இருக்கக்கூடாது. சம்பவம் நடந்த உடன் முதல் தகவலை காவல் நிலையத்தில் கொடுத்துவிட வேண்டும்.
முதல் தகவலின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தார் உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் தகவல் கொடுப்பதிலோ, முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதிலோ காலதாமதம் ஏற்பட்டால், அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காதபோதும், அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லாத போதும் எதிரி அல்லது எதிரிகள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
முதல் புகாரை காவல் நிலையத்தார் பதிவு செய்ய மறுத்தால் என்ன செய்ய வேண்டும்?
நபர் ஒருவர் கொடுத்த புகாரை, காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பதிவு செய்ய மறுத்திடும் போது, குறையுற்ற நபர் எவரும் அந்தப் புகாரின் விவரத்தை சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் புகார் உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் :
முதல் புகார் உரிய நேரத்திலும், உடனடியாகவும், உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் கொடுக்கப்பட வேண்டும். முதல் புகார் வதந்திகளின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலோ, பொய்யான வகையிலோ கொடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது.
முதல் புகாரை யார் கொடுக்கலாம்? :
முதல் புகாரை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் (Victim) அல்லது காயம்பட்டவர் (Injured) அல்லது கண்ணுற்ற சாட்சி (Eye - Witness) தான் கொடுக்க வேண்டும் எ‌ன்ற அவசியம் இல்லை.
வாகன ஓட்டுநரால் அளிக்கப்படும் முதல் புகார் :
மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 89ன்படி விபத்து சம்பந்தப்பட்ட தகவலை வாகன ஒட்டுனர் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் வாகன ஓட்டுனரால் அளிக்கப்படும் முதல் புகார் வழக்கில் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது.
முதல் புகாரும், எதிர் புகாரும் :
சில வேளைகளில் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்த பின்னர், எதிரியும் தான் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் எதிரி கொடுக்கும் புகாரையும் தனது பார்வைக்கு எடுத்துக் கொண்டு அதையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
முதல் புகாரை யாரிடம் கொடுப்பது? :
காவல் நிலைய பொறுப்பு அலுவலராக இருப்பவரிடம் முதல் புகாரை கொடுக்க வேண்டும். தலைமை காவலரிடமும் முதல் புகாரை கொடுக்கலாம். ஆனால் ஒரு சாதாரண காவலரிடம் (Police Constable) கொடுக்கப்படும் முதல் புகார் செல்லாது.
எல்லை பாதுகாப்பு படைப்பிரிவு காவல்துறையினரிடம் (Border Security Force Police) அளிக்கப்படும் முதல் புகார் செல்லாது.
புறங்காவல் நிலையம் ஒன்றில் முதல் புகார் கொடுக்கலாமா? :
புறங்காவல் நிலையம் (Police out post) ஒன்றில் முதல் புகார் கொடுக்கமுடியாது. பாதிக்கப்பட்ட நபர் எவரும் தவறுதலாக புறங்காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தால், அவரிடம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு புறங்காவல் நிலைய பொறுப்பு அலுவலர் அறிவுறுத்த வேண்டும்.
முதல் புகார் கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தின் விளைவு :
சம்பவம் ஒன்று தொடர்பாக காவல் நிலையத்தில் முன்னுலையாகி எவ்வளவு விரைவாக முதல் புகார் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கொடுக்க வேண்டும். முதல் புகார் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், நீதிமன்றம் அதை சந்தேகமாக பார்க்கும்.
முதல் புகாரில் ஏற்படும் காலதாமதத்தை மன்னித்தல் :
முதல்புகார் கொடுப்பதில் ஏற்படும் காலதாமதம் நியாயமானதாக இருக்கும் போது நீதிமன்றம் அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்.
முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் காலதாமதம் :
முதல் தகவல் அறிக்கையை காவல் நிலைய பொறுப்பு அலுவலர் எவ்வித காலதாமதமுமின்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை காவல் நிலைய பொறுப்பு அலுவலர் கூற வேண்டும். காரணம் நியாயமானதாக இருந்தால் நீதிமன்றம் அதை மன்னிக்கும். இல்லையென்றால் குற்ற வழக்கை சந்தேகித்து எதிரியை விடுதலை செய்துவிடும்.
முதல் புகாரை பதிவு செய்வதற்கு முன் சம்பவம் பற்றிய முதல்நிலை விசாரணை (Preliminary Inquiry) தேவையற்றதாகும். அவ்வாறு முதல்நிலை விசாரணை செய்தால் அது புகாரின் இயல்பை கெடுத்துவிடுவதோடு மட்டுமில்லாமல், வழக்கின் உண்மைத் தன்மையையும் அழித்து விடும்.
முதல்புகார் எப்போது பயனற்றதாகிவிடும்? :
வழக்கொன்றில் புலன் விசாரணையை மேற்கொண்டு கு. வி. மு. ச பிரிவு 161ன்படி சாட்சிகளிடமிருந்து வாக்குமூலத்தை பெற்ற பின்னர் தரப்படுகின்ற முதல்புகார் செல்லாது. அதை நீதிமன்றமும் சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளாது.
முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் அனைத்து விபரங்களையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு பற்றிய முக்கிய விவரங்களை தெரிவித்தாலே போதுமானது ஆகும்.
முதல் தகவல் அறிக்கையில் எதிரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால் அது சந்தேகத்தை ஏற்படுத்தும். அவ்வாறு எதிரியின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்பதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.
கூட்டுக் கொள்ளை போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் எதிரியின் பெயர் குறிப்பிடாமல் விடுவித்திருப்பதை நீதிமன்றம் பெரும் தவறாக எடுத்துக் கொள்ளாது.
அதேபோன்று சம்பவத்தை நேரடியாக பார்க்காத சாட்சியால் முதல் புகார் அளிக்கப்பட்டு எதிரியின் பெயர் விடுப்பட்டிருக்கும்போது அதனையும் நீதிமன்றம் பெரும் தவறாக எடுத்துக் கொள்ளாது.
முதல் தகவல் அறிக்கையில் சாட்சிகளின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவ்வாறு குறிப்பிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும்.
முதல் தகவல் அறிக்கையில் சாட்சி ஒருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவர் சம்பவத்தையை பார்க்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுதல் கூடாது.
சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை பற்றி முதல் தகவல் அறிக்கையில் தவறான விவரங்களை கொடுத்திருந்தால், அது சாட்சிகளின் சாட்சிய மதிப்பைக் குறைத்துவிடும்.
முக்கிய விவரத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட தவறியிருக்கும் போது, நீதிமன்றம் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காது. புகார் அவசர சூழ்நிலையில் கொடுக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அனுமானித்துக் கொள்ளும்.
சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கைக்கும், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அது வழக்கில் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதனால் எதிரிகள் விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் ஏற்படும்.
முதல் தகவல் அறிக்கையில் புகார் கொடுப்பவரின் கையெழுத்து பெறப்பட வேண்டும். எனினும் அவ்வாறு கையெழுத்து பெறாதது பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடாது.
முதல் தகவல் அறிக்கையில் புகார் கொடுத்தவர் கையெழுத்து போட மறுப்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 180ன்படி குற்றமாகும்.
குற்ற வழக்கு சம்பவம் ஒன்று தொடர்பாக முதல்புகார் அளித்தவரை, அரசு தரப்பில் சாட்சியாக விசாரிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு விசாரிக்கவில்லை என்றால், அந்த முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளாது.
அரசு தரப்பு தமது சார்பில் சுட்டிக்காட்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் அனைவரையும் விசாரிக்க நீதிமன்றமும் அரசு தரப்பை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மற்ற சாட்சிகளை ஏன் விசாரிக்கவில்லை என்பதை நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
நபர் ஒருவர் பொய்யான வழியில் முதல் புகார் அளித்திடும் போது, அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 182&211ன் கீழ் தண்டிக்கப்படுவார்.

No comments:

Post a comment