"சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)" என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 
அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " P. இராஜ்குமார் Vs காவல்துறை கூடுதல் இயக்குநர் (CDJ-2014-MHC-3992)" என்ற வழக்கில், தாயாரை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதற்காக இழப்பீடு வழங்குமாறு கோரி மகன் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை இந்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ. 2,00,000 /-த்தை வழங்கியதோடு, அந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதேபோல் உச்சநீதிமன்றம் "சுபேஷ்சிங் Vs அரியானா மாநில அரசு (2006-3-SCC-178)" என்ற வழக்கில், காவல்துறையினரின் காவலிலுள்ள ஒருவர் இறக்க நேரிட்டால் அல்லது காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டிருந்தால்
1. இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவை மீறப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக, மறுக்க முடியாத வகையில் அமைந்துள்ளதா? 
2. அவ்வாறு அந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் மனசாட்சியை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய விஷயமாக உள்ளதா? 
3. காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதா? அல்லது துன்புறுத்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட காயங்களை மெய்பிக்கும் விதமாக மருத்துவ அறிக்கை அல்லது வெளிப்படையான காயங்கள் அல்லது தழும்புகள் அல்லது உடல் ஊனம் உள்ளதா? 
காவல்துறையினரின் காவலில் வைத்து ஒரு நபரை துன்புறுத்தியதற்கு அந்த நபரின் வாக்குமூலத்தை தவிர மருத்துவ அறிக்கை அல்லது அந்த வாக்குமூலத்தை உறுதி செய்யக்கூடிய சாட்சியம் அல்லது காவல்துறையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்லது அந்த சம்பவம் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டோ கூறப்பட்டுள்ளது என்கிற விசயத்தை தெளிவாக அறிந்து கொள்கிற நிலையில், கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க இயலாது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரை உரிமையியல் /குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் உரிய நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 
அதேபோல் உச்சநீதிமன்றம் "நிலா பட்டி பெகரா Vs ஒரிசா மாநில அரசு (1993-2-SCC-746)" என்ற வழக்கில் காவல்துறை காவலில் இருந்த இளைஞர் இறந்த வகைக்கு அவருடைய தாயாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 
அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பான "D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SCW-610)" என்ற வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பண ரீதியாக இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று தீர்ப்பு கூறியுள்ளது. 
எனவே தனது மகனுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக தாயார் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
W. P. NO - 9606/2010, DT - 16.12.2016
Banumathi Vs The Secretary, TAMILNADU and Others 
(2017-1-TLNJ-CRL-19)

 
No comments:
Post a Comment