07/07/2017

5822 - காயம்பட்டவர் மற்றும் புகார்தாரர் தரப்பினர் மனநிறைவு அடையும் வகையில் எதிரிகளுக்கு தண்டனை அளிக்கப்படாமல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையில் சலுகைகள் காட்டுவதை ஒரு நல்ல ஆரோக்கியமான விசயமாக ஏற்றுக்கொள்ள இயலாது., CRL. A. No. 182 & 183 / 2016, 1.3.2016, SCI, நன்றி ஐயா. Dhanesh Balamuruga

இராஜாராம், உதய்பான் மற்றும் ஹக்கீம் சிங் என்கிற 3 எதிரிகளால் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்மூறையீடுகளில், இராஜாராம் என்பவருக்கு இ. த. ச பிரிவு 307 ன் கீழ் வழங்கப்பட்டிருந்த தண்டனையை மாற்றி இ. த. ச பிரிவு 326 ன் கீழ் தண்டனை அளித்தும், மற்ற இரண்டு எதிரிகளுக்கு இ. த. ச பிரிவுகள் 307 மற்றும் 34 ன் கீழான தண்டனையை மாற்றி இ. த. ச பிரிவுகள் 326 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எதிரிகளுக்கு இ. த. ச பிரிவு 323 ன் கீழான குற்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தில் எந்த மாறுதலையும் உயர்நீதிமன்றம் செய்யவில்லை. ஆனால் இ. த. ச பிரிவுகள் 307 & 34 ஆகிய குற்றச் செயல்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை குறைத்து எதிரிகள் ஏற்கனவே சிறையிலிருந்த நாட்களான ஓராண்டு மற்றும் 9 மாதங்களை மட்டுமே தண்டனையாக வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

மேற்கண்ட எதிரிகளுக்கு புகார்தாரரையும், அவரது சகோதரரையும் கொலை செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்துள்ளதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்று எதிரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை குறைந்திருந்தது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்....

இந்த வழக்கில் புகார்தாரரான கிரிபாராம் என்பவரை ஒரு பஞ்சாயத்துக்கு அழைத்துள்ளனர். அங்கு எதிரிகள் ஏற்கனவே ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். புகார்தாரர் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவரை எதிரிகள் மிரட்டியதோடு, அவர்கள் வைத்திருந்த மண்வெட்டி, இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இராஜாராம் அவர் வைத்திருந்த மண்வெட்டியால் புகார்தாரரின் தலையில் ஒரு காயத்தை ஏற்படுத்தியுள்ளார். ஹக்கீம் இரும்பு கம்பியால் வலது கண்ணிற்கு அருகில் ஒரு காயத்தை ஏற்படுத்தியுள்ளார். உதய்பான் தடியால் அடித்துள்ளார் தன்னுடைய சகோதரரை காப்பாற்றுவதற்கு வந்த பிரபுவை உதய்பான் தடியால் தாக்கியுள்ளார்.

புகார்தாரருக்கு தலையில் ஏற்பட்ட கொடுங்காயம் உட்பட ஆறு காயங்கள் ஏற்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது. புகார்தாரருக்கு தலையில் ஒரு காயமும், வலது கண்ணிற்கு மேல்புறத்தில் ஒரு காயமும், முன் நெற்றியிலும், வலது கண்ணின் இமையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு குறைந்த தண்டனை வழங்குவதற்கு எந்த சூழ்நிலைகளும் இல்லாத நிலையில் உயர்நீதிமன்றம் தண்டனையை குறைத்துள்ளது. உரிய தண்டனை வழங்கப்படுவதற்கான நெறிமுறைகள் குறித்து இந்நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது.

ஒரு குற்ற வழக்கில் இரு வழக்கு தரப்பினர்களுக்கும் நீதி வழங்கும் விதமாக அந்த தண்டனை அமைந்திருக்க வேண்டும். தண்டனையில் தேவையில்லாமல் சலுகைகள் காட்டக்கூடாது. அவ்வாறு சலுகைகள் காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை எதிரிக்கு கடுமையானதாகவும், உரிய தண்டனை வழங்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். காயம்பட்டவர் மற்றும் புகார்தாரர் தரப்பினர் மனநிறைவு அடையும் வகையில் எதிரிகளுக்கு தண்டனை அளிக்கப்படாமல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையில் சலுகைகள் காட்டுவதை ஒரு நல்ல ஆரோக்கியமான விசயமாக ஏற்றுக்கொள்ள இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. A. NO - 182/2016
CRL. A. NO - 183/2016, DT - 1.3.2016

மத்திய பிரதேச மாநிலம் Vs உதய்பான் மற்றும் ஒருவர்

(2016-2-MLJ-CRL-24)


https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wT1BPakVQSmE2a1U/view?usp=sharing

No comments:

Post a comment