Tuesday, June 19, 2018

5919 - இளஞ்சிறாரை பிணையில் விடுவதற்கு என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்? CRL. OP. NO - 14115/2016, DT - 9.8.2016, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

விக்னேஷ்வரன் என்ற இளவர் மீது இ. த. ச பிரிவுகள் 294(b),323 மற்றும் 506(ii) ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு விக்னேஷ்வரன், நாகர்கோவில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை, அன்றைய தினமே பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு கோரி விக்னேஷ்வரனின் தந்தை ஒரு குற்றவியல் அசல் மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த குற்றவியல் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இளஞ்சிறார் நீதிக் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12 ன் கீழ் இளஞ்சிறாருக்கு பிணை வழங்குவது கட்டாயமான ஒன்று எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த நீதிமன்றம் அதற்கான ஒரு கட்டளையை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
இளஞ்சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு நேரில் விக்னேஷ்வரன் முன்னிலையாகும் நாளில், அவரால் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுவை அன்றைய தினமே குழுமம் பரிசீலிப்பதில்லை என்றும், ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக நன்னடத்தை அதிகாரியின் (Probation Officer) அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், அதுவரை கூர்நோக்கு (Observation Home) இல்லத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும் குழுமம் உத்தரவிடுவதால், அதை தவிர்ப்பதற்காக இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக விக்னேஷ்வரனின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்றம் மனு மீது விசாரணை நடத்தியது.
இளஞ்சிறார்களை ஜாமீனில் விடுவது குறித்து பிரிவு 12 ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒரு இளவரை ஜாமீனில் விடுவதற்கு முன்பாக நன்னடத்தை அதிகாரியிடமிருந்து ஓர் அறிக்கையை பெற வேண்டும் என அதில் கூறப்படவில்லை.
இளஞ்சிறார் நீதிக் குழுமம் ஜாமீன் வழங்கவில்லை என்றால் அதற்கு மாறாக அந்த இளவரை நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பில் வைத்திருக்கும்படி ஓர் உத்தரவினை தான் இளஞ்சிறார் நீதிக் குழுமம் பிறப்பிக்க வேண்டும்.
ஓர் இளவர் ஜாமீனில் விடப்படும் நிலையில், அந்த இளவருக்கு பிரபல குற்றவாளியுடன் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடும் அல்லது அவருடைய நன்னடத்தை, உடல் அல்லது மனரீதியாக அபாயம் ஏற்படும் அல்லது அவரை ஜாமீனில் விட்டால் நீதிக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஓர் இளவருக்கு ஜாமீன் மறுக்கப்படலாம்.
இவை அல்லாத மற்ற சூழ்நிலைகளில், இளவருக்கு ஜாமீன் வழங்குவது கட்டாயமான ஒன்றாகும். ஜாமீன் வழங்காமல் இருப்பது ஓர் விதிவிலக்கு மட்டுமே ஆகும்.
எனவே இளவர் ஒருவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டு இளஞ்சிறார் நீதிக் குழுமம் முன்பு மனுத்தாக்கல் செய்தால், அந்த ஜாமீன் மனுவை குழுமம் அன்றைய தினமே தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 14115/2016, DT - 9.8.2016
விக்னேஷ்வரன் (எ) விக்னேஷ் ராமுக்காக, அவருடைய தந்தை இராஜயன் Vs ஆய்வாளர், மார்த்தாண்டம் காவல் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம்
(2016-5-CTC-38)

No comments:

Post a Comment