Tuesday, June 19, 2018

5918 - தத்து எடுத்த குழந்தையை, வாரிசாக கூறி, வாரிசுச் சான்றிதழ் வழங்க, வட்டாட்சியர் மறுக்க முடியுமா? நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மம்தா என்பவர் செளந்தர்யா என்பவரை தத்தெடுத்து உள்ளார். மம்தாவின் கணவர் பெயர் சந்திரசேகர். அவர் இறந்து விட்டார். அதனால் சந்திரசேகரின் வாரிசுகளாக என்னையும், தத்து மகள் செளந்தர்யாவையும் குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை தாசில்தாரிடம் மம்தா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த தாசில்தார் தத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா இறந்து போன சந்திரசேகரின் தத்து மகளாக இருப்பதால் அவர் இரண்டாம் வகுப்பு வாரிசாக தான் வருவார் என்று கூறி வாரிசுச் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டார்.
அதனால் குறையுற்ற மம்தா மற்றும் மகள் செளந்தர்யா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதுவே இந்த வழக்கு.
தத்தெடுக்கப்பட்ட மகள் இறந்து போன நபருக்கு முதல் வகுப்பு சட்டப்பூர்வ வாரிசாக வர முடியுமா? என்பதை உயர்நீதிமன்றம் பிரதான பிரச்சினையாக எடுத்து பரிசீலித்தது.
இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 3(1)(f) ல் வாரிசு என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயில் மூலம் சொத்துக்களை யாருக்கும் அளிக்காமல் இறந்திருக்கும் ஒரு நபருடைய சொத்துக்களை இந்த சட்டத்தின் கீழ் அடைய உரிமையுள்ள ஆண் அல்லது பெண் நபர் இறந்தவருடைய வாரிசு ஆவார். ஆகையால் யார் ஒருவர் வாரிசுரிமை அடிப்படையில் அல்லது சட்டத்தின் படி இறந்து போனவரின் சொத்துக்களை பெறுகிறாரோ அந்த நபர் இறந்து போனவரின் வாரிசாக கருதப்பட வேண்டும்.
இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவி சட்டம் பிரிவு 12 ல் மகவேற்பின் விளைவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
மேலே கண்ட சட்டப்பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் " ராம்தேவ் வயன்கட் கட்ஜ் Vs சந்திரகாந்த் ரன்பட் கட்ஜ் (2003-1-CTC-790)(2003-4-SCC-71)" என்ற வழக்கில், சட்டப் பிரிவு 12(c) ல் கூறப்பட்டுள்ளவாறு தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தை தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அந்த குழந்தையைத் தத்தெடுத்த தந அல்லது தாயின் குழந்தையாக கருதப்பட வேண்டும். அதேபோல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தத்தெடுப்பதற்கு முன்புள்ள சொத்துக்களில் எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் " தர்மா (1988-2-SCC-126)" என்ற வழக்கில், தத்தெடுக்கப்பட்ட மகன் அந்த கூட்டுக் குடும்பத்தில் தர்மாவுடன் ஒரு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். ஏற்கனவே உள்ள சொத்துக்கள் குறித்து வினா எழுப்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்பினை அடியொற்றி " வசந்த் Vs தத்தூ (1987-1-SCC-160)" என்ற வழக்கிலும் தத்தெடுக்கப்பட்ட மகனை கூட்டுப் பங்குரிமையாளராக கருத வேண்டும் எனவும், கூட்டு குடும்ப சொத்துக்களில் தத்தெடுக்கப்பட்ட மகனுக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தத்தெடுப்பு சம்மந்தப்பட்ட சட்டப் பிரிவுகள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மேலே கண்ட தீர்ப்புகள் ஆகியவற்றை பார்த்தால், ஒரு குழந்தை தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து தத்தெடுத்துக் கொண்ட தாய் அல்லது தந்தையின் குழந்தையாக கருதப்பட வேண்டும். அந்த குழந்தை அந்த குடும்பத்தில் பிறந்திருந்தால் என்னென்ன உரிமைகள் ஏற்படுமோ அந்த அனைத்து உரிமைகளும் தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அந்த குழந்தைக்கு ஏற்படும். அந்த குழந்தை பிறந்துள்ள குடும்பத்தில் அந்த குழந்தைக்குள்ள உரிமைகள் மாற்றப்பட்டு, தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தில் அந்த குழந்தைக்கான உரிமைகள் ஏற்பட்டு விடுகிறது. இயற்கை வழியில் அந்த குழந்தை தத்தெடுத்த பெற்றோருக்கு பிறக்கவில்லை என்றாலும் கூட, சட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்டதற்கு பின்னர், அந்தக் குழந்தை தத்தெடுத்தவர்களின் குழந்தையாக கருதப்பட வேண்டும்.
ஒரு குழந்தை தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து வகையான தேவைகளுக்கும் அந்தக் குழந்தையை தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு பிறந்துள்ள குழந்தையாகத் தான் கருதப்பட வேண்டும்.
எனவே வாரிசு சான்றிதழ் வழங்க மறுத்த தாசில்தாரின் செயல் தவறான ஒன்றாகும் என்று கூறி உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிபதி திரு. K. இரவிச்சந்திர பாபு உத்தரவிட்டார்.
W. P. No - 27592/2017
Dt - 6.2.2018
M.G. மம்தா மற்றும் செளந்தர்யா Vs தாசில்தார், தென்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம், கிருஷ்ணகிரி

No comments:

Post a Comment