01/04/2017

5733 - மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118, அசல் வழக்கு எண்.238 / 2014, 13.04.2015, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் திங்கட்கிழமை
அசல் வழக்கு எண்.238 / 2014
ராமலிங்கம் … வாதி
/எதிர்/
1. உஷா சக்கரவர்த்தி
2. மைனர் உமாமகேஸ்வரி(வயது சுமார் 17)
3. மைனர் செல்வகணபதி (வயது சுமார் 15)
(மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் வழக்கறிஞர் செல்வி.எஸ்.ஜெயஅருணி) … பிரதிவாதிகள்
/தீர்ப்புரை/
இவ்வழக்கானது 1 முதல் 3 பிரதிவாதிகள் வசமிருக்கும் இறந்துபோன சக்கரவர்த்தி என்பவரின் சொத்துகளிருந்து இறந்துபோன சக்கரவர்த்தி என்பவர் வாதியிடமிருந்து வாங்கிய கடனுக்காக¸ பிரதிவாதிகள் தாவாத்தொகை ரூ.63¸425.00 ம்¸ அதற்கு அசல் தொகையான ரூ.50¸000 க்கு தாவா தாக்கல் செய்த தேதிமுதல் தீர்ப்பாணைத் தேதிவரை 9% வட்டியும்¸ பின்னிட்டு தொகை முழுவதும் பைசலாகும் தேதிவரை 6% வட்டியுடனும் வாதிக்குக் கொடுக்க வேண்டுமென்றும்¸ மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. வழக்குரையின் சுருக்கம்:
முதல் பிரதிவாதியின் கணவரும்¸ 2 மற்றும் 3 பிரதிவாதிகளின் தகப்பனாருமான¸ சக்கரவர்த்தி என்பவர் 01.10.2011 ஆம் தேதி வாதியிடமிருந்து ரூ.50¸000 கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு 12% வட்டி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு ஈடாக ஒரு கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி வாதி கேட்கும்போது வாதியிடமோ¸ வாதியின் ஆணை பெற்றவரிடமோ கடனைக் கொடுத்து பைசல் செய்வதாக கண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் அசல்தொகையோ¸ வட்டியோ எந்த தொகையும் செலுத்தவில்லை. வாதி பலமுறை கடனை பைசல் செய்யக்கோரியும் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் கடனை பைசல் செய்யவில்லை. எனவே வாதி 6.2.12 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் சக்கரவர்த்திக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி அறிவிப்பை 10.2.12 ஆம் தேதி பெற்றுக்கொண்டு சக்கரவர்த்தி என்பவர் பதிலறிவிப்பும் அனுப்பவில்லை¸ கடனையும் பைசல் செய்யவில்லை. பின்னிட்டு 16.11.12 ஆம் தேதி மேற்படி சக்கரவர்த்தி என்பவர் 1 முதல் 3 பிரதிவாதிகளை வாரிசுகளாக விட்டுவிட்டு இறந்துவிட்டார். வாதி¸ பிரதிவாதிகளை அணுகி மேற்படி கடன்தொகையை பைசல் செய்யக்கோரியும் இதுநாள்வரை அவர்கள் பைசல் செய்யவில்லை. அதனால் வாதி¸ 22.9.14 ஆம் தேதி முதல் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி சக்கரவர்த்தி என்பவர் குடும்ப செலவுக்காகவும்¸ மளிகை வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் மேற்படி கடனை வாங்கினார். எனவே மேற்படி கடன் இந்த பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தும். எனவே மேற்படி சக்கரவர்த்தி வாங்கிய அசல்தொகையை வட்டியுடன் கோரி இவ்வழக்கு 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3) 2 மற்றும் 3 மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
இவ்வழக்கில் முதல் பிரதிவாதி தோன்றாத்தரப்பினராகிவிட்டார். 2¸3 பிரதிவாதிகள் மைனர் என்பதால் நீதிமன்றம் மூலம் நீதிமன்ற காப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காப்பாளர் தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையில்¸ வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்று. வழக்குரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் உண்மைக்கு மாறானவை. இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தையான சக்கரவர்த்தி என்பவர் வாதியிடம் கடன் வாங்கியதாக கூறுவதும்¸ வழக்குரையில் கூறப்பட்டுள்ள தொகைகளும் தவறாகும். இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தை குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறுவது தவறு. தாவா கடனுறுதிச்சீட்டு குறித்து இந்த பிரதிவாதிகளுக்கு ஏதும் தெரியாது. மேலும் வாதி அனுப்பியதாக கூறும் நோட்டீஸ் குறித்தும் இந்த பிரதிவாதிகளுக்கு தெரியாது. எனவே இந்த மைனர் பிரதிவாதி மேற்படி கடனை திருப்பி செலுத்த கடமைப்பட்டவரல்ல. மைனர் பிரதிவாதிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். எனவே இந்த வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும்.
4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 17.03.2015 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதா¸ செல்லத்தக்கதா¸ தகுந்த மறுபயன் கொண்டதா?
2) தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா?
3) வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகை மற்றும் அதற்கான பின்வட்டி அவருக்கு கிடைக்கத்தக்கதா?
4) வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன?
5. இவ்வழக்கில் வாதிதரப்பில் வா.சா.1 மற்றும் வா.சா.2 ஆகிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள்தரப்பில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸ சான்றாவணங்கள் ஏதும் குறியீடு செய்யப்படவில்லை.
6) வழக்கெழு வினாக்கள் 1 மற்றும் 3 :
வாதிதரப்பில் தங்களது வாதத்தின்பொழுது¸ முதல் பிரதிவாதியின் கணவரும்¸ 2 மற்றும் 3 பிரதிவாதிகளின் தகப்பனாருமான¸ சக்கரவர்த்தி என்பவர் 01.10.2011 ஆம் தேதி வாதியிடமிருந்து ரூ.50¸000 கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு 12% வட்டி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு ஈடாக ஒரு கடனுறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி வாதி கேட்கும்போது வாதியிடமோ¸ வாதியின் ஆணை பெற்றவரிடமோ கடனைக் கொடுத்து பைசல் செய்வதாக கண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் அசல்தொகையோ¸ வட்டியோ எந்த தொகையும் செலுத்தவில்லை. வாதி பலமுறை கடனை பைசல் செய்யக்கோரியும் மேற்படி சக்கரவர்த்தி என்பவர் கடனை பைசல் செய்யவில்லை. எனவே வாதி 6.2.12 ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் சக்கரவர்த்திக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி அறிவிப்பை 10.2.12 ஆம் தேதி பெற்றுக்கொண்டு சக்கரவர்த்தி என்பவர் பதிலறிவிப்பும் அனுப்பவில்லை¸ கடனையும் பைசல் செய்யவில்லை. பின்னிட்டு 16.11.12 ஆம் தேதி மேற்படி சக்கரவர்த்தி என்பவர் 1 முதல் 3 பிரதிவாதிகளை வாரிசுகளாக விட்டுவிட்டு இறந்துவிட்டார். வாதி¸ பிரதிவாதிகளை அணுகி மேற்படி கடன்தொகையை பைசல் செய்யக்கோரியும் இதுநாள்வரை அவர்கள் பைசல் செய்யவில்லை. அதனால் வாதி¸ 22.9.14 ஆம் தேதி முதல் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பினார். மேற்படி சக்கரவர்த்தி என்பவர் குடும்ப செலவுக்காகவும்¸ மளிகை வியாபாரத்தை மேம்படுத்தவும் மேற்படி கடனை வாங்கினார். எனவே மேற்படி கடன் இந்த பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தும். எனவே மேற்படி சக்கரவர்த்தி வாங்கிய அசல்தொகையை வட்டியுடன் கோரி இவ்வழக்கு 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. மைனர் பிரதிவாதிகள் தரப்பில் தங்களது வாதத்தின்பொழுது¸ வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்று. வழக்குரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் உண்மைக்கு மாறானவை. இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தையான சக்கரவர்த்தி என்பவர் வாதியிடம் கடன் வாங்கியதாக கூறுவதும்¸ வழக்குரையில் கூறப்பட்டுள்ள தொகைகளும் தவறாகும். இந்த மைனர் பிரதிவாதிகளின் தந்தை குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறுவது தவறு. தாவா கடனுறுதிச்சீட்டு குறித்து இந்த பிரதிவாதிகளுக்கு ஏதும் தெரியாது. மேலும் வாதி அனுப்பியதாக கூறும் நோட்டீஸ் குறித்தும் இந்த பிரதிவாதிகளுக்கு தெரியாது. எனவே இந்த மைனர் பிரதிவாதி மேற்படி கடனை திருப்பி செலுத்த கடமைப்பட்டவரல்ல. மைனர் பிரதிவாதிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். எனவே இந்த வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென வாதிடப்பட்டது.
7) வாதிதரப்பில் தங்களது வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். மேலும் வாதிதரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 என்பது 01.10.2011 ஆம் தேதி வாதிக்கு சக்கரவர்த்தி எழுதிக்கொடுத்த அசல் பிராம்சரி நோட்டு ஆகும். வா.சா.ஆ.2 மற்றும் வா.சா.ஆ.3 என்பது 06.02.2012 ஆம் தேதி வாதி¸ சக்கரவர்த்திக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் அதனை அவர் பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். வா.சா.ஆ.4 மற்றும் வா.சா.ஆ.5 என்பது 22.09.2014 ஆம் தேதி வாதி¸ முதல் பிரதிவாதிக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் அதனை முதல் பிரதிவாதி வாங்க மறுத்து திரும்பி வந்த உறையாகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில்¸ தாவா கடனுறுதிச்சீட்டை 1.10.11 ஆம் தேதி சக்கரவர்த்தி என்பவர் தன்னிடம் ரூ.50¸000 ரொக்கமாக வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக தன் பெயருக்கு பண்ருட்டியில் எழுதிக்கொடுத்ததாகவும்¸ தாவா கடனுறுதிச்சீட்டு அச்சிட்ட படிவத்தில் இருந்ததாகவும்¸ அதனை சரவணன் என்பவர் பூர்த்தி செய்ததாகவும்¸ சாட்சிகள் மகாலிங்கம் மற்றும் சண்முகம் ஆகியோர் கையொப்பம் செய்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்து படித்து காண்பித்தபின்¸ வாசகங்கள் சரியென ஒப்புக்கொண்டு சாட்சிகள் முன்னிலையிலும்¸ தன் முன்னிலையிலும் சக்கரவர்த்தி கடனுறுதிச்சீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டாம்பின்மேல் ஒரு கையெழுத்தும்¸ அதன் கீழ் ஒரு கையெழுத்தும் அதன் கீழே கைரேகையும் செய்ததாகவும்¸ அவ்வாறு அவர் செய்ததை தானும்¸ சாட்சிகள் மற்றும் பூர்த்தி செய்தவரும் பார்த்ததாகவும்¸ சாட்சிகள் கையெழுத்து செய்ததை தானும்¸ சக்கரவர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் பார்த்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்ததை அனைவரும் பார்த்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். அவர் தனது குறுக்கு விசாரணையில்¸ முதல் பிரதிவாதி மேற்படி கடனை பைசல் செய்துவிடுவதாக கூறியதால் தான் உடனே இவ்வழக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும்¸ மைனர் பிரதிவாதிகளுக்கு மேற்படி கடன் குறித்து தெரியாது என்றாலும்¸ மேற்படி கடன் மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்றாலும் சரியல்ல என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
8) வா.சா.2 ஆக சண்முகம் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சாட்சியத்தில் வா.சா.ஆ.1 எழுதும்போது தான் அதில் தான் இரண்டாவது சாட்சியாக கையெழுத்து போட்டதாகவும்¸ தாவா கடனுறுதிச்சீட்டு அச்சிட்ட படிவத்தில் இருந்ததாகவும்¸ அதனை சரவணன் என்பவர் பூர்த்தி செய்ததாகவும்¸ தானும்¸ மகாலிங்கம் என்பவரும் வா.சா.ஆ.1-ல் சாட்சி கையொப்பம் செய்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்து படித்து காண்பித்தபின்¸ வாசகங்கள் சரியென ஒப்புக்கொண்டு சாட்சிகள் முன்னிலையிலும்¸ வாதி முன்னிலையிலும் சக்கரவர்த்தி கடனுறுதிச்சீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டாம்பின்மேல் ஒரு கையெழுத்தும்¸ அதன் கீழ் ஒரு கையெழுத்தும் அதன் கீழே கைரேகையும் செய்ததாகவும்¸ அவ்வாறு அவர் செய்ததை வாதியும்¸ சாட்சிகள் மற்றும் பூர்த்தி செய்தவரும் பார்த்ததாகவும்¸ தான் சாட்சி கையொப்பம் செய்ததை மற்றொரு சாட்சியும்¸ வாதியும்¸ சக்கரவர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் பார்த்ததாகவும்¸ சரவணன் பூர்த்தி செய்ததை அனைவரும் பார்த்ததாகவும்¸ சக்கரவர்த்தி ரூ.50¸000 ரொக்கமாக வாதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
9) இவ்வழக்கில் பிரதிவாதிகள்தரப்பில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.
10) மேலும் கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ சரியான மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது வாதியால் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அந்த நிரூபணமானது பிரதிவாதியால் பொய்ப்பிக்கப்படும்வரை மெய்ப்பிக்கப்பட்டதாகவே கருதப்படும். அந்த வகையில் இந்த வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதி¸ தன்னை வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதில் சாட்சி கையெழுத்து போட்ட சண்முகம் என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை. மேலும்¸ கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை ஒருவர் தாவா கடனுறுதிச்சீட்டில் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டாலே தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதாக கருதப்படும். மேற்கொண்டு விசாரிக்கப்படும் சாட்சிகள் அனைத்துமே அதனை வலுப்படுத்தும் சாட்சிகளாகும். எனவே கடனுறுதிச்சீட்டு உண்மையானது என்பதை வாதி தனது தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் வாதியின் கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மறுத்துரைக்கும் பிரதிவாதிகள்தான் அவரால் சொல்லப்படும் சூழ்நிலைகளை நிரூபிக்கக் கடமைப்பட்டவர். ஆகவே நிரூபிக்கும் சுமையானது வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் பிரதிவாதிதரப்பில் எவ்வித சாட்சிகள் கொண்டோ¸ சான்றாவணங்கள் கொண்டோ தங்களது தரப்பை நிரூபிக்கவில்லை. எனவே மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 ன்படியும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் மூலமும்¸ வா.சா.1 மற்றும் வா.சா.2 சாட்சிகளின் சாட்சியங்களின் மூலமும் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது உண்மையானது¸ அது செல்லத்தக்கது¸ அது தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்று முடிவுசெய்து எழுவினா எண்.1-க்கும்¸ அதன் அடிப்படையில் வாதி தாவாவில் கோரியவாறு தொகையை வட்டியுடன் பெற அருகதையுடையவர் என எழுவினா எண்.2-க்கும் இந்நீதிமன்றம் முடிவு செய்து மேற்கண்ட வகையில் எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டு வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.
11) எழுவினா எண்.3 :
2¸3 ஆம் பிரதிவாதிகள் தரப்பில் 2¸3 ஆம் பிரதிவாதிகள் மைனர் என்பதால் அவர்களது தகப்பனார் வாங்கிய கடன்¸ அவர்களைக் கட்டுப்படுத்தாது என வாதம் செய்யப்பட்டது. இதுகுறித்து பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ தாவா கடனுறுதிச்சீட்டில் குடும்ப செலவுக்காகவும்¸ வியாபார அபிவிருத்திக்காகவும் கடன் பெறுவதாக கண்டு எழுதப்பட்டிருக்கிறது. எனவே தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளை கட்டுப்படுத்தாது என்றாலும்¸ இவ்வழக்கில் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுத்த சக்கரவர்த்திக்கு சொத்து பாத்தியம் இருப்பதாக வாதிதரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பிரதிவாதிகள் தரப்பில் மறுக்கவில்லை. எனவே இவ்வழக்கில் சக்கரவர்த்தியின் மனைவியான முதல் பிரதிவாதி ஒருதலைபட்சமாகியிருந்தபோதிலும்¸ 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகள் இளவர்களாக இருந்தபோதிலும்¸ சக்கரபாணிக்கு பாத்தியமான சொத்தை 1 முதல் 3 பிரதிவாதிகள் அனுபவித்து வரும் நிலையில்¸ மேற்படி சக்கரவர்த்திக்கு பாத்தியமான சொத்திலிருந்து சக்கரவர்த்தி பெற்ற கடனை அடைக்க 1 முதல் 3 பிரதிவாதிகள் கடமைப்பட்டவர்கள் என்றே இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா எண்.3 பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.
12) எழுவினா 4 :
வாதி வழக்குரையில் கோரியுள்ள பரிகாரங்கள் எழுவினா 3 ன் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வாதிக்கு வேறு எந்த பரிகாரங்களும் கிடைக்கத்தக்கதல்ல என இந்த எழுவினாவிற்கு விடை காணப்படுகிறது.
13) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதிக்கு¸ 1 முதல் 3 பிரதிவாதிகள் தங்கள் வசமிருக்கும் இறந்துபோன சக்கரவர்த்தியின் சொத்துகளிருந்து சக்கரவர்த்தி வாங்கிய கடனுக்காக தாவாத்தொகை ரூ.63¸425.00 ம்¸ அதற்கு அசல் தொகையான ரூ.50¸000 க்கு தாவா தாக்கல் செய்த தேதிமுதல் தீர்ப்பாணைத் தேதிவரை 9% வட்டியும்¸ பின்னிட்டு தொகை முழுவதும் பைசலாகும் தேதிவரை 6% வட்டியுடனும் கொடுக்க வேண்டுமென செலவுத்தொகையுடன் அனுமதித்து வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.

No comments:

Post a comment