3 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றச் செயல் கொண்ட ஒரு வழக்கில் காவல்துறையினர் 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலவரையறைக்குள் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தவறிவிட்டால், அந்த காலதாமதத்தை மன்னிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை விசாரிப்பதற்கு முன்பு எதிரிகளுக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பு அனுப்பி எதிரிகளின் வாதத்தை கேட்ட பின்புதான் அந்த மனுவின் மீது குற்றவியல் நடுவர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் அத்தியாயம் 36ல் குற்றச் செயல்களை நீதிமன்றக் கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கான காலவரையறை பற்றி கூறப்பட்டுள்ளது. குற்றச் செயலின் தன்மையை பொறுத்து, ஒவ்வொரு குற்றங்களுக்கும் வெவ்வேறு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கு. வி. மு. ச பிரிவு 192ன் கீழ் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக்கொள்ள கூடிய சில பிரிவு குற்றச் செயல்களுக்கு 3 ஆண்டுகள் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த காலவரையறையை நிர்ணயிப்பதற்கு, குற்றச் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து காலவரையறை கணக்கிடப்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் அவ்வாறு காலவரையறை கணக்கிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. கு. வி. மு. ச பிரிவு 468ல் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையை நீட்டித்து காலதாமதத்தை மன்னிப்பதற்கு கு. வி. மு. ச பிரிவு 473 பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கு. வி. மு. ச பிரிவு 473ல் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ள உளத்தேர்வு அதிகாரம் இரண்டு காரணங்களின் அடிப்படையில் கட்டுபடுத்தப்படுகிறது. முதலாவதாக அந்த காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணம் நியாயமானதாக இருக்க வேண்டும் இரண்டாவது நீதியின் பொருட்டு அந்த காலதாமதத்தை மன்னிக்க வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் மனநிறைவடைய வேண்டும். இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் காலவரையறை கடந்து காவல்துறையினரால் தாக்கல் செய்யப்படும் இறுதி அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான கால கெடுவினை நீட்டித்து ஓர் உத்தரவினை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.
நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த உளத்தேர்வு அதிகாரத்தை சரியான சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு பயன்படுத்த வேண்டும். விருப்பத்திற்கு ஏற்ப சரியான காரணங்கள் ஏதும் இல்லாமல் நீதிமன்றம் உளத்தேர்வு அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. நீதிமுறை அதிகாரத்திற்கும், நிர்வாகமுறை அதிகாரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் எந்த ஒரு உத்தரவும் ஒரு நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது ஒரு வழக்கின் எதிரி உட்பட எந்தவொரு நபரின் நலத்திற்கும், உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்த இதில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எதிரிகளுக்கு அது குறித்து ஒரு அறிவிப்பு அனுப்ப வேண்டும். இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் "மகாராஷ்டிரா அரசு Vs சரத் சந்தர விநாயக் டோங்கிரி மற்றும் பலர் (1995-1-SCC-42)" என்ற வழக்கில் கூறியுள்ளது.
ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு மிகாத சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில், குற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான காலவரையறை 3 ஆண்டுகள் என்று கு. வி. மு. ச பிரிவு 468 2(c) ல் கூறப்பட்டுள்ளது. புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் இறுதி அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் காலதாமதம் ஏற்பட்டதற்கான சரியான காரணங்களை கூறி அதனை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கு. வி. மு. ச பிரிவு 473ன் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் "M/s Jothimani (CRL.OP. NO - 1730/2009) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தால், அந்த காலதாமதத்தை மன்னிப்பதற்கு தாக்கல் செய்யப்படும் மனு குறித்து அந்த வழக்கு எதிரிகளுக்கு அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் அல்லது அவர்களுக்கு தெரியாமல் நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பிப்பது தவறாகும் என உச்சநீதிமன்றம் "மகாராஷ்டிரா அரசு Vs சரத் சந்திர விநாயக் டோங்கிரி" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் எதிரிக்கு ஓர் அறிவிப்பினை கொடுத்து அவர் வாதத்தையும் கேட்ட பின்பு தான் குற்றவியல் நடுவர் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களில் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 1045/2011, DT - 2.11.2016
S. Bala Subramaniyan Vs Asst Commissioner, Crime Branch (West), Coimbatore
(2016-4-MLJ-CRL-764)
(2016-4-MLJ-CRL-764)
No comments:
Post a Comment