ஒரு உரிமையியல் வழக்கில் கண்ட பிரதிவாதி தனது சத்திய பிரமாணப் பத்திரத்துடன் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னித்து, அந்த ஆவணங்களை பெற்றுக் கொள்ளுமாறு கோரி உ. வி. மு. ச கட்டளை 8 விதி 1A(3) ன் கீழ் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்யலாம்.
உ. வி. மு. ச கட்டளை 8 விதி 1-A(1) ல் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு உரிமையியல் வழக்கின் பிரதிவாதி எதிர் வழக்குரையை தாக்கல் செய்யும் போதே அவரது வழக்கிற்கு ஆதரவாக தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்து பட்டியலிட வேண்டும். அந்த ஆவணங்களின் சான்றிடப்பட்ட நகல்களுடன் எதிர் வழக்குரையை தாக்கல் செய்ய வேண்டும். எதிர் வழக்குரை தாக்கல் செய்ததற்கு பின்னர், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று பிரதிவாதி அவர் தரப்பு சான்றாவணங்களை தாக்கல் செய்வதற்கு உ. வி. மு. ச கட்டளை 8, விதி 1A(3) ன் கீழ் அனுமதியை பெறலாம். அந்த வழக்கு எந்த நிலையில் இருந்தாலும் அத்தகைய உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த உளத்தேர்வு அதிகாரத்தை நீதிமன்றம் நீதி சார்ந்து பயன்படுத்த வேண்டும். அந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான ஏற்புடைய காரணங்களை நீதிமன்றம் குறிப்பிட வேண்டும். உ. வி. மு. ச கட்டளை 8 விதி 2 ன்படி, தன்னுடைய எதிர்ப்பு வாதங்கள் அனைத்தையும் பிரதிவாதி தனது எதிர் வழக்குரையில் கூற வேண்டும்.
பிரதிவாதி தனது எதிர் வழக்குரையில் குறிப்பிடாத ஆவணங்களை பின்னர் விசாரணையின் போது எக்காரணத்தைக் கொண்டும் தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 706/2015
DT - 3.1.2018
B. P. லட்சுமணன் மற்றுமொருவர் Vs R. இரங்கநாதன்
2018-1-TNCJ-929
No comments:
Post a Comment