02/04/2017

5751 - திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண், அந்த ஆணிடம் வாழ்க்கை பொருளுதவி கேட்க முடியும், CRP No. 1287 / 2004, 05.01.2016, High Court, Madhya Pradesh, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண், அந்த ஆணிடம் வாழ்க்கை பொருளுதவி கேட்க முடியும். 

மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு வாழ்க்கை பொருளுதவி தொகை வழங்குவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரிவு தான் 125 ஆகும். உறவு முறையை மறுத்து, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு கணவர் பிரித்து விட முடியாது. ஒரு கணவன், ஒரு பெண்ணை தன்னுடைய மனைவி இல்லை என்றோ அல்லது அந்த பெண்ணுடன் தனக்கு திருமணமே நடைபெறவில்லை என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்குவதில் இருந்து அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இயலாது.

மனைவி என்கிற உறவு முறையை நிரூபிக்க வேண்டிய ஆரம்ப கட்ட பொறுப்பு மனைவிக்கு தான் உள்ளது. ஒரு பெண் அந்த ஆண் தன்னை மனைவி போல் நடத்தினார் (She has been treated as wife) என்று நிரூபித்தால் போதும். ஒரு தம்பதியை சமூகம் கணவன், மனைவியாக ஏற்றுக் கொண்டால் போதும் அந்த நிலையை சமூகம் திருமண உறவாக அனுமானித்து கொள்ளும். ஒரு ஆணும் பெண்ணும் தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டுள்ள நிலையில் அவர்களை கணவன், மனைவியாக கருதுவதோடு அந்த நீடித்த உறவு திருமணம் என்கிற அனுமானத்தை உருவாக்குகிறது. கு. வி. மு. ச பிரிவு 125ல் குறிப்பிட்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இ. த. ச பிரிவு 494ல் குறிப்பிட்டுள்ளது போல், திருமணத்தை மிகவும் துல்லியமாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் "சுமித்ரா Vs பைகான் (AIR - 1985-SC-765)" என்ற வழக்கில், திருமணத்தை மிகவும் துல்லியமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுவை பரிசீலிக்கும் குற்றவியல் நடுவர் அந்த திருமணம் சட்டப்படியான திருமணமா? அல்லது சட்டத்திற்கு புறம்பான திருமணமா? என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை. விவாகாரத்து சட்டத்தின் கீழ் அல்லது இ. த. ச பிரிவுகள் 494,495,497,498 ஆகியவற்றின் கீழான சட்ட நடவடிக்கைகளில் ஒரு திருமணத்தை நிரூபிப்பது போல், மிகவும் துல்லியமான ஆதாரங்களுடன் ஜீவனாம்சம் வழக்கில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு தரப்பினர்களுக்கிடையே திருமண உறவு குறித்து முகாந்திரம் இருப்பதாக குற்றவியல் நடுவர் மனநிறைவடைந்தால் கு. வி. மு. ச பிரிவு 125ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓர் ஆணும் பெண்ணும் நீண்ட நாட்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டால்(Primafacie Proved) அந்த பெண்ணின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாகவும், அந்த பெண்ணை தன்னுடைய மனைவியாகவும் அந்த ஆண் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும், அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக சமூகம் அங்கீகரித்துள்ளது என்கிற நிலையில் அந்த பெண்ணையும், அந்த ஆணையும் கணவன், மனைவி என்று அனுமானிக்க வேண்டும். எனவே ஒரு ஆணும், பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களை சமூகம் கணவன், மனைவியாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் அந்த ஆண் கட்டாயம் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். திருமணம் நடக்கவில்லை என்று கூறி ஆண் தப்ப முடியாது என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

No comments:

Post a comment